Friday, January 29, 2010

அவுட்சோர்சிங் செய்தால் வரிச்சலுகை ரத்து : ஒபாமா எச்சரிக்கையால் இந்தியாவுக்கு பாதகம்.

பயங்கரவாதத்தின் மீதான போர் முடிந்தது... இனி பொருளாதார மந்தத்துக்கு எதிரான போர் ஆரம்பம் என்ற முழக்கத்துடன் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுதான் பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை ரத்து.

இதனைக் கேட்ட மாத்திரத்தில், 'இது பொருளாதார மந்தத்துக்கு எதிரான போரல்ல... இந்திய ஐடி துறைக்கு எதிரான போர்தான்' என அலற ஆரம்பித்துள்ளனர்.
பெருமளவு அவுட் ஸோர்ஸிங் பணி ஆர்டர்களை மட்டுமே நம்பியுள்ள இந்திய ஐடி துறைக்கு ஒபாமாவின் இந்த புதிய அறிவிப்பு, சாதாரண அடியல்ல... பேரிடி.

சர்வதேச தேக்க நிலை காரணமாக பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த நிலையே இன்னும் சீராகவில்லை. இப்போதுதான் சில ஐடி நிறுவனங்கள் புதிய பணியாளர்களை சேர்க்கலாமா என்ற யோசனையில் இறங்கியிருந்தன.

இந்நிலையில் அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டதில் நிகழ்த்திய உரையில் பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அடியோடு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களுக்காக பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். காப்பீடு, வங்கித் துறை, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் போன்ற பணிகளை பிபிஓ முறையில் நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருமளவு குறையும்.

அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று ஒபாமா தெரிவித்துள்ளார். தனது உரையில் ஒபாமா மேலும் கூறியுள்ளதாவது:

"அமெரிக்காவில் வேலையின்றி தவிப்பவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே வேலைவாய்ப்பு மசோதா மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க அரசு தீவிரமாக உள்ளது. இதைப் போல மேலும் சில பரிந்துரைகளை செனட் சபை அளிக்கலாம்.

2010ம் ஆண்டில் அரசின் முன்னுள்ள பிரதான பிரச்னைகளில் முக்கியமானது வேலை வாய்ப்பை உருவாக்குவதே ஆகும்.

புதிய வேலைவாய்ப்பு மசோதா மூலம் வால் ஸ்டிரீட்டில் உள்ள வங்கிகள் திரும்பச் செலுத்திய 3,000 கோடி டாலர் தொகையைக் கொண்டு சமுதாய வங்கிகள் உருவாக்கப்பட்டு சிறு வணிகத்துக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தகத்தை பிரதானமாகக் கொண்டே புதிய மசோதா அமையும். அத்துடன் அரசும் வர்த்தகம் பெறுக தேவையான உதவிகளை அளிக்கும். இதன் மூலம் ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

மனித வள மேம்பாடு மற்றும் கல்வியில் அதிக முதலீடு செய்ய அரசு தீவிரமாக உள்ளது.
தற்போது வழங்கப்படும் உயர்நிலைப் பள்ளி கல்வியானது வேலை வாய்ப்பைப் பெறுவதற்கானதாக அமையவில்லை. அனைவரும் கல்லூரி படிப்பைத் தொடரும் வகையில் அளிக்க அரசு முயன்றுள்ளது. மக்கள் செலுத்தும் வரிப் பணம் வங்கிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டு அது மாணவர்களுக்கு கல்விக் கடனாக வழங்கப்பட உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏற்றுமதியை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியாக மாறும் இந்தியாவும், சீனாவும்...

நமது வேலைகள் பிற நாடுகளுக்குச் செல்வதால் நமது இளைஞர்கள் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். இது அவர்களைப் பாதித்துள்ளது. அரசையும் இது பாதிக்கிறது. நமது உதவியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசு எடுத்து வந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக இன்று 20 லட்சம் அமெரிக்கர்கள் வேலையில் அமர்ந்துள்ளனர். இல்லாவிட்டால் இவர்கள் அனைவரும் வேலையில்லாதோர் பட்டியிலேயே நீடித்திருப்பார்கள்.

பொருளாதார மறு சீரமைப்பில் நமக்கு கடும் போட்டியாக மாறி வருகின்றன இந்தியாவும், சீனாவும். இன்னும் சொல்லப் போனால் நம்மை விட வேகமாக அவை இரண்டும் முன்னேறி வருகின்றன. நமக்கு ஒரு படி மேலான வேகத்தில் அவை முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார சக்தியாக முதலிடத்தில் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் சீனா, இந்தியா ரூபத்தில் இதற்கு மிரட்டல் வந்து கொண்டுள்ளது. இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை.

எனது நமது பிரச்சினைகளை சற்று கவனத்துடன் கருத்தில் கொண்டு நாம் நமது இடத்தை தக்க வைப்பதோடு மேலும் மேம்பட முயற்சிக்க வேண்டும். நம்மை ஆட்டுவித்து வந்த பொருளாதார மந்த நிலை தற்போது விலகியுள்ளது. எனவே நாம் மேலும் வேகமாக முன்னேற நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்றார் ஒபாமா.

ஐடி பங்களிப்பு 5.8 சதவீதம்!:

உலகிலேயே அதிக அளவில் அவுட்ஸோர்ஸிங் பணியை மேற்கொள்ளும் நாடாக இந்தியா விளங்குகிறது.

2008-09ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு 5.8 சதவீதமாகும். 1997-98ம் நிதியாண்டில் இது 1.2 சதவீதமாகத்தான் இருந்தது.

அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக பணிகளை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றன. இதில் ஆங்கிலப் புலமை மிகுந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் பெற்றவர்களின் விகிதம் அதிகமாக இருந்ததால் இங்கு அதிக அளவில் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

ஏற்கெனவே பல்வேறு குடியேற்றக் கட்டுப்பாடுகளால் இந்திய தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் வாய்ப்பு இல்லாத நிலை உருவாக்கப்பட்டது. இப்போது அவுட்ஸோர்ஸிங் பணிகளுக்கும் ஆபத்து வந்துள்ளது.

No comments:

Post a Comment