Monday, January 11, 2010

ஜனாதிபதி வேட்பாளர்கள் சம்பந்தமாக இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களில் பிளவு

By W.A. Sunil ஏறத்தாழ இலங்கையில் ஏனைய ஒவ்வொரு கட்சிகளையும் போலவே, அரசியல் கட்சிகளாகவும் செயற்படும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், ஜனவரி 26 நடக்கவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அல்லது எதிர்க் கட்சிகளின் 'பொது வேட்பாளர்" ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இரு பிரதான வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளன. பிரதானமாக தமிழ் பேசும் அரை மில்லியன் மக்களின் சார்பில் பேசுவதாக கூறிக்கொள்ளும் அமைப்புக்களின் நிலைப்பாடு, அவற்றின் மீதே அவதூறுகளை சுமத்துகிறது. இலங்கை தொழிலாள வர்க்கத்தில் அதி வறிய தட்டினரில் தோட்டத் தொழிலாளர்களும் அடங்குவர்.

இந்த இரு இராணுவவாதிகளில் ஒருவருக்கு வாக்களிக்குமாறு தோட்டத் தொழிலாளர்கள் தூண்டப்படுகின்றனர். இராஜபக்ஷ பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை முன்னெடுத்த அதே வேளை, நாட்டின் உயர் ஜெனரல் என்ற வகையில் பொன்சேகா அதை இரக்கமின்றி நடத்திச் சென்றார். இருவரும் குறிப்பாக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் மற்றும் வெளிப்படையான ஜனநாயக உரிமை மீறல்களை மேற்பார்வை செய்தமைக்குப் பொறுப்பாளிகளாவர். இரு வேட்பாளர்களும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், தேர்தல் முடிவடைந்த உடன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை இட்டு நிரப்ப பொதுச் செலவை மேலும் வெட்டித்தள்ள அரசாங்கம் நெருக்கப்படும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய இரு பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், இராஜபக்ஷவின் கூட்டணியில் பங்காளிகளாக இருப்பதோடு அவரது அமைச்சரவையில் பதவி வகிப்பதுடன் அவரது குற்றவியல் யுத்தத்தையும் ஆதரித்தன. ஏனைய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, இ.தொ.கா. மற்றும் ம.ம.மு, குறிப்பாக சிறந்த சம்பளம் மற்றும் நிலைமைகளுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி கண்ட கோரிக்கைகளை நசுக்குவதில் தீர்க்கமான பாத்திரம் வகித்தன.

கடந்த செப்டெம்பரில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு வறிய மட்டத்திலான சம்பளத்தையே தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ஒரு புதிய உடன்படிக்கையை தொழிலாளர்கள் மீது திணிப்பதில் இ.தொ.கா. மையமாக இருந்து செயற்பட்டுள்ளது. ம.ம.மு. இந்த உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட அதே வேளை, முதலாளிமாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் நடவடிக்கையையும் தடுத்ததுடன் முடிவாக உடன்படிக்கையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக, நாள் சம்பளம் 405 ரூபாவாக வரையறுக்கப்பட்டதுடன் அது உற்பத்தி மற்றும் ஏனைய நிபந்தனைகளுடன் பிணைக்கப்பட்டது.

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், இ.தொ.கா. பிளவுபட்டுள்ளது. இரு முன்னணி இ.தொ.கா. உறுப்பினர்களான தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் மற்றும் உப தலைவர் எம். சச்சிதானந்தனும் அமைப்பில் இருந்து இராஜினாமா செய்வதாக டிசம்பர் 30 அன்று அறிவித்தனர். உடனடியாக எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் (யூ.என்.பி.) சேர்ந்து கொண்ட அவர்கள் இருவரும், ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதாக தெரிவித்தனர். இன்னுமொரு சிரேஷ்ட இ.தொ.கா. தலைவரான எம்.எஸ். செல்லச்சாமியும் அவர்களுடன் இணைந்துகொண்டார். அவர் தபால் மற்றும் தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராகவும் இருந்தார்.

இ.தொ.கா. மீண்டும் மீண்டும் செய்த காட்டிக்கொடுப்பு தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் ஆழமான பகைமையின் அறிகுறியே அந்த அமைப்பின் பிளவாகும். எவ்வாறெனினும், வெளியேறிய தலைவர்களும், இராஜபக்ஷவை விட உழைக்கும் மக்களுக்கு பொன்சேகா ஒரு மாற்றீட்டை வழங்குகிறார் என்ற ஆபத்தான மாயையை பரப்ப முயற்சிக்கின்றனர். அவர்களது பத்திரிகையாளர் மாநாட்டில், வலதுசாரி யூ.என்.பி. மற்றும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாலும் மட்டுமே நாட்டின் சகல இனத்தவர்களுக்கும் "நியாயத்தை" வழங்க முடியும் என யோகராஜனும் சச்சிதானந்தனும் பிரகடனம் செய்தனர். "நாட்டுக்கு 'ஒரு புதிய எதிர்காலத்தை' கொண்டு வருவதற்காக பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை முழுமையாக ஆதரிப்பதாக" அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடும் "இயலுமை" இல்லை என இ.தொ.கா. வை விமர்சித்த யோகராஜனும் சச்சிதானந்தனும், 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்துக்கு வழிவகுத்த பிரச்சினைகளுக்கு "அரசியல் தீர்வு" ஒன்றை காணும் "விருப்பம்" அரசாங்கத்துக்கு இல்லை எனவும் குற்றஞ்சாட்டினர். இராஜனாமா செய்யும் வரை இராஜபக்ஷ அரசாங்கத்தில் உப கல்வி அமைச்சராக இருந்ததோடு, அதனால் யுத்தம் உட்பட அதன் கொள்கைகளுக்கு அரசியல் ரீதியில் பொறுப்பாளியாகவும் இருந்த சச்சிதானந்தன், இப்போது வெளியேறிய பின் கூறும் கருத்துக்கள் குறிப்பாக வஞ்சகமானதாகும்.

யோகராஜனும் சச்சிதானந்தனும் தமது சந்தர்ப்பவாத குறிக்கோளை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளனர். "மக்கள் இந்த அரசாங்கத்துடன் இல்லை என்பதை நாங்கள் கடந்த மாதங்களில் கண்டுள்ளோம்," என யோகராஜன் கூறினார். மாகாண சபை தேர்தல்களில் இ.தொ.கா. அடைந்த தோல்விகளை சுட்டிக்காட்டி அவர் கூறியதாவது: "மேல் மாகாணத்தில் அல்லது சப்பரகமுவ மாகாணத்தில் எங்களால் ஒரு ஆசனத்தை தன்னும் வெற்றிகொள்ள முடியாமல் போனமை, அரசாங்கத்துடனான எங்களது கூட்டை மக்கள் நிராகரிக்கின்றார்கள் என்பதையே காட்டுகிறது." ஆளும் கும்பலில் சில தட்டுக்கள் தமது நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க பொன்சேகாவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், அலை இராஜபக்ஷவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது என தெளிவாக உணர்ந்துகொண்டுள்ள இ.தொ.கா. பிளவு குழுவினர், ஜெனரலுக்குக் கீழ் எதிர்கால பதவிகளை எதிர்பார்க்கின்றனர்.

இந்தத் தேர்தலில் தொழிற்சங்கம் இராஜபக்ஷவை ஆதரிப்பதாக இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்து ஒரு மாதத்தின் பின்னரே இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் எதையாவது பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார். பொன்சேகா வெற்றி பெற்றால், அவருடன் இணைவது பற்றி இ.தொ.கா. சிந்திக்கும் என அவர் விளக்கினார். யோகராஜனும் சச்சிதானந்தனும் பிரிந்து சென்ற பின்னரும், தொண்டமான் இராஜபக்ஷவை ஆதரிப்பதாக வலியிறுத்தினார். நெருக்கடியை மூடி மறைத்த இன்னுமொரு இ.தொ.கா. தலைவரான முத்து சிவலிங்கம், அவர்கள் இராஜினாமா செய்தததால் அமைப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.

பல வாரங்களாக தயக்கம் காட்டிய பின்னர், இந்தத் தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரிப்பதாக ம.ம.மு. இறுதியாக முடிவெடுத்துள்ளது. நீண்டகால ம.ம.மு. தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான பெ. சந்திரசேகரன் கடந்த வாரம் உயிரிழந்ததை அடுத்து, ம.ம.மு. தலைவர்கள் உடனடியாக இராஜபக்ஷவுக்கு தனது சங்கத்தின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இலங்கை தொழிலாளர் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட ஏனைய சிறிய பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் பொன்சேகாவை ஆதரிக்கின்றன. எதிர்க் கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், யூ.என்.பி. உடன் சேர்ந்து பொன்சேகாவை ஆதரிக்கின்றது.

அதிகாரத்தில் அற்ப சலுகைகளை பெறுவதன் பேரில், தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக இந்த சகல தொழிற்சங்கங்களும் இரு முதலாளித்துவ வேட்பாளர்களுக்கும் சாதாரணமாக தமது சேவையை வழங்குகின்றன. பொன்சேகா, இராஜபக்ஷ ஆகிய இருவரும், தீவில் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்கே தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். ஆளும் தட்டின் சில பகுதியினர் பொன்சேகாவை ஆதரிப்பது, ஒரு ஜனநாயக மாற்றீட்டுக்காக அல்ல. மாறாக, எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க அரச இயந்திரத்தை கையாளும் இயலுமை அதிகம் கொண்டவராக அவர்கள் ஜெனரலை பார்க்கின்றனர்.

இத்தகைய தொழிற்சங்கங்களின் நீண்ட துரோக வரலாற்றின் அரசியல் படிப்பினைகளை தோட்டத் தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே. செப்டெம்பரில் சம்பள முரண்பாட்டின் போது, இ.தொ.கா. செய்த சம்பள வியாபாரத்துக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க எந்தவொரு தொழிற்சங்கமும் நிராகரித்ததையிட்டு பரந்த எதிர்ப்பு காணப்பட்டது. ஆயினும், அதிருப்தியும் தனிமைபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் மட்டும் போதாது. தேவையானது என்னவெனில், தமது உரிமைகளை காக்கும் போராட்டத்தை தொடங்கக்கூடிய ஒரு அரசியல் முன்நோக்காகும்.

அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் உதவியுடன் சொந்தமாக ஒரு நடவடிக்கை குழுவை அமைத்துள்ள அவர்கள், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினரும் அவ்வாறு செயற்பட வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளனர். தமது போராட்டம் சோசலிச கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நடவடிக்கை குழுவினர் புரிந்துகொண்டுள்ளனர். கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் சகல கட்சிகளதும் இனவாத கொள்கைகளுக்கு எதிராக, வர்க்க அடிப்படையில் தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களுக்கிடையில் ஐக்கியத்துக்காக அது நனவுப்பூர்வமாக அழைப்பு விடுக்கின்றது.

சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தில், ஆளும் வர்க்கத்தின் சகல கும்பல்களில் இருந்தும் பிரிந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டுவதற்காக இந்தத் தேர்தலில் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். ஏனைய தொழிலாளர் பிரிவினரைப் போலவே, இலட்சக்கணக்கான தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந் தோட்டத் தொழிலாளர்களும் ஒழுக்கமான சம்பள உயர்வை ஏக்கத்துடன் கோருகின்றனர். தரமான வீடு, பாடசாலை மற்றும் ஆஸ்பத்திரியும் அவர்களுக்குத் தேவை. ஒரு சில செல்வந்தர்களின் தேவைகளுக்காக அன்றி, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் எரியும் சமூகத் தேவைகளை இட்டு நிரப்புவதன் பேரில், சமுதாயத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என சோ.ச.க. வலியுறுத்துகிறது. எமது வேட்பாளர் விஜே டயஸ் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்குமாறும் எமது பிரச்சாரத்தில் நடைமுறையில் இணைந்துகொள்ளுமாறும் நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com