தேர்தல் வன்முறைகள் கவலை தருகின்றன
தினகரன் ஆசிரியர் தலையங்கம் நாட்டில் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் சமீப தினங்களாக அதிகரித்துள்ளன. தேர்தல் வன்முறைச் சம்பவங்களால் நேற்றுவரை இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். வாகனங்கள், வீடுகள் போன்ற உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் தொடர்பான வன்முறை முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் பொலிஸார் கூறுகின்றனர்.
முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த வாரம் நடைபெறப்போகும் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் சற்று அதிகமென்றே கூற வேண்டியுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் மென்மேலும் அதிகரிக்கலாமென்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
தேர்தல் காலத்தில் வன்முறைகள் உருவாகுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. வன்முறைகள் தலைதூக்காத விதத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பொலிஸாருக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதேசமயம் வன்முறையில் ஈடுபடுவோர் எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இதேசமயம் தேர்தல் ஆணையாளரும் உரிய அறிவுறுத்தல்களை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையாளர் விசேட அதிகாரங்களைக் கொண்டவராக விளங்குகிறார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு சுமுகமாக நடை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பணிப்புரைகளை வழங்கும் அதிகாரம் அவருக்குண்டு.
தேர்தல் தொடர்பான சிறு சிறு சம்பவங்களைக் கூட பெரிதுபடுத்தும் விதத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்குவதாக தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விடயத்தில பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதே அத்தகைய அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கும் அறிவுரை ஆகும். சிறு வன்முறைச் சம்பவங்களைப் பெரிதுபடுத்துவது ஊடகங்களுக்கும் அழகல்ல.
தேர்தல் கடமையைப் பொறுத்த வரை எமது தேர்தல் ஆணையாளர் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றவராக விளங்குகிறார். கூடுதலான தேர்தல்களை கச்சிதமாக நடத்தி முடித்த நிர்வாகத்திறன் மிகுந்தவர் அவர். எதுவித பக்கச்சார்புமற்ற விதத்தில் தேர்தல்களை நடத்துவதென்பது மிகுந்த பொறுப்பு மிக்கதாகும்.
இப்போது நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே அமைந்திருக்கின்றன.
தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மீறிச் செயற்படுவதோ அல்லது வன்முறைகளில் ஈடுபடுவதோ ஆரோக்கியமான நடவடிக்கைகளல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் மத்தியில் வெறுப்பும் அதிருப்தியுமே உருவாகும். வன்முறையில் சம்பந்தப்படுவோர் இதனை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தினுள் எதுவிதமான மனமாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. அதற்கு மாறாக மக்களிடமிருந்து வெறுப்பையே சம்பாதித்துக் கொள்ள முடியும்.
ஜனநாயக நாடொன்றில் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காக மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சுதந்திரம் தேர்தல் ஆகும். மக்கள் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலுடையவர்களாவர். அவர்களது சுயசெயற்பாடுகளுக்குப் பங்கம் விளைவித்தல் தவறாகும். வன்முறைகள் வாயிலாக எதனையும் சாதித்துவிட முடியாதென்பது யதார்த்தமும் உண்மையுமாகும்.
0 comments :
Post a Comment