இனப்பிரச்சினையைத் தீர்ப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதி பதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. தேசிய கெளரவத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் நிலையான சமாதான சகவாழ்வையும் உறுதிப்படுத்துவதற்கு உகந்த ஆலோசனைகளை உள்ளடக்குவதாக இந்த விஞ்ஞாபனம் விளங்குகின்றது.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடை முறைப்படுத்தப் போவதாக இவ்விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டிருப்பது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் அக்கறைகொண்டவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
வட மாகாணத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதாக விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் பதின்மூன்றாவது திருத்தமே அரசியல் தீர்வின் ஆரம்பமாக அமைய முடியும்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாகாது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இன்றைய நிலையில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சி இத்திருத்தத்துடன் ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகளின் விளைவாக இந்த நிலை உருவாகியிருக்கின்றதா அல்லது தங்கள் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்தத் தலைவர்கள் அரசியல் தீர்வைத் திட்டமிட்டுத் தவிர்த்திருக்கின்றார்களா என்பது விவாதத்துக்குரிய விடயம்.
கடந்த சில தசாப்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அரசியல் தீர்வைத் தவிர்க்கும் நோக்கம் இவர்களுக்கு இருந்திருக்கின்றது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது
தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்புவரை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நிலையான ஒரு கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. ஒவ் வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு கொள்கையை வலி யுறுத்தினார்கள். இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தவிர்ப்பதற்கு இது அவர்களுக்கு வசதியாக அமைந்தது.
தீர்வொன்று முன்வைக்கப்படும்போது அந்த முயற்சியை முறியடிப்பதற்காக அதனிலும் பார்க்கக் கூடுதலான தீர்வை வலியுறுத்துவது இந்தத் தலைவர்களுக்கு வழக்கமாக இருந்தது. கூடுதலான தீர்வை வழியுறுத்திய போதிலும் பின்னர் அத்தீர்வை வென்றெடுப்பதற்கான எந்த முயற்சியிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை.
தீர்வைத் தவிர்ப்பதே இவர்களின் பிரதான நோக்கம் என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். இப்போதும் அவ் வாறான முடிவையே இத் தலைவர்கள் எடுத்திருக்கின்றார்கள்.
பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அரசியலமைப்புத் திருத்தத்துக்குச் சாதகமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் பதின் மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்துவது பற்றியும் ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய ஒரு தீர்வுக்கான ஆலோசனைகளும் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையாக அவரிடம் உள்ளன. இச்சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு இத்தமிழ்த் தலைவர்கள் விரும்பவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட முடிவு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஏற்றதல்ல.
பொன்சேகாவிடமோ அவரை ஆதரிக்கும் கட்சிகளிடமோ இனப்பிரச்சினையின் தீர்வுக்கான திட்டம் எதுவும் இல்லை. அவருடன் இணைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி பதின்மூன்றாவது திருத்தத்தையே எதிர்க்கின்றது.
இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தவிர்க்கும் நோக்கத் துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன் சேகாவை ஆதரிக்கின்றதென்பதை விளங்கிக்கொண்டு தமிழ் மக்கள் சரியான தீர்மானத்துக்கு வரவேண்டும். தொட ர்ந்தும் நம்பி ஏமாறக்கூடாது.
தினகரன் ஆசிரியர் தலையங்கம்
0 comments :
Post a Comment