Saturday, January 9, 2010

மட்டு மேயர் சிவகீதா வுடனான நேர்காணல். பீமன்

இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படப்போவதாக எதிர்பார்க்கப்படுகின்ற இத்தருணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் மட்டு நகர் மேயருமான சிவகீதா பிரபாகரன் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ள நிலையில் இலங்கைநெற் இன் ஆசிரியர்களில் ஒருவரான பீமன், சிவகீதா அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணல்.

கேள்வி . எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இத்திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

பதில் . எனது தந்தை அமரர் ராஜன் சத்தியமூர்த்தி 2004ம் ஆண்டு பொது தேர்தலில் நின்றபோது புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தும், அவருடைய தன்னலமற்ற சேவைக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இப்பிரதேச மக்கள் 24,200 வாக்குகளை அளித்திருந்தார்கள் என்பது யாவரும் அறிந்தவிடயம். எனது தந்தையின் கொலைக்கு பின்னர் எமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையில் நாம் நாட்டைவிட்டு ஓடியிருந்தோம். பின்னர் பிரதேச மக்களினதும் எனது தந்தையின் ஆதரவாளர்களினதும் வேண்டுதலுக்கிணங்க அரசியலில் நுழைந்தேன். நான் இன்று எனது தந்தையின் வழியினை பின்பற்றியே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். இங்குள்ள மக்கள் நம்பிக்கைக்குரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரவேண்டும் என்ற விடயத்தில் ஆர்வமாகவுள்ளனர். அதனடிப்படையில் பிரதேச மக்கள் மற்றும் எனது ஆதரவாளர்களின் ஆலோசனையை ஏற்று ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளேன்.

கேள்வி . நம்பிக்கைக்குரிய மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்கின்றார்கள் அல்லது நீங்கள் எதிர்பார்கின்றீர்கள் என கூறியிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிடும் நம்பிக்கைக்குரிய மாற்றம் என்னவென்பதை விபரமாக கூற முடியுமா?

பதில். நம்பிக்கைக்குரிய மாற்றம் என்னவென்றால்.. ஒருநாட்டின் அபிவிருத்தி என்பது தனிமனித பொருளாதார அபிவிருத்தியைச் சார்ந்திருக்கின்றது. தனிமனித பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்போது நாடு தன்னிறைவு பெற்ற நாடாக அமையும். பாலங்கள், வீதிகளை அமைப்பது நல்லவிடயம். ஆனால் அவற்றை மாத்திரம் அபிவிருத்தி என்று கூறிவிடமுடியாது. காரணம் இவற்றை செய்யவேண்டியது அரசின் கடமை. ஆனால் தனிமனித பொருளாதாரத்தை உயர்த்துவதே குடிமக்களுக்கு அரசு செய்யவேண்டிய உயரிய கடமையாகும். அத்துடன் ஊழல்கள் அற்ற அரசாங்கம் ஒன்றையே மக்கள் எதிர்பார்கின்றார்கள்.

கேள்வி - நீங்கள் அரசியலில் பிரவேசிக்கும்போது உங்களது உயிருக்கு புலிகள் தரப்பால் அச்சுறுத்தல் இருந்து வந்தது. அதேநேரம் கருணா பிள்ளையானிடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டி மற்றும் பிணக்குகளுள்ளும் நீங்கள் சிக்கியிருந்தீர்கள், நீங்கள் அவர்களில் ஒரு தரப்பை ஆதரிக்கும் போது மறுதரப்பால் அச்சுறுத்தல் உருவாகியிருந்ததையும் மறுக்க முடியாது. ஆனால் இவ்வாறான நிலைமைகளிலெல்லாம் மஹிந்த ராஜபக்ச அரசாங்கமே உங்களுக்கு உதவி புரிந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவ்வரசாங்கத்திற்கு உதவி புரியவேண்டிய கடப்பாடு உங்களுக்கு உண்டு என பேசப்படுகின்றதே?

பதில் - நாட்டினதும் , நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களது கடமை.

கேள்வி - நீங்கள் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை கொண்டுள்ளீர்களா?

பதில் - இன்றுவரைக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாநகர சபை மேயராகவுள்ளேன்.

கேள்வி - நீங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கின்ற நிலையில் உங்களுடைய மட்டுநகர் மேயர் பதவி பறிபோகுமா? அவ்வாறு மேயர் பதவி பறிபோனாலும் மாநகர சபையில் ஆளும் தரப்பில் இருப்பீர்களா அல்லது எதிரணியில் அமர்வீகளா?

பதில் - இது தொடர்பாக எனது சட்ட ஆலோசகர் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசிய பின்பே கூறமுடியும்.

கேள்வி - கட்சிமாறுவதாயின் எந்த கட்சியை தெரிந்தெடுப்பீர்கள் என அறியலாமா?

பதில் - அது எனது ஆதரவாளர்களின் விருப்பில் தங்கியிருக்கின்றது.

கேள்வி - எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? எந்தக்கட்சியில் போட்டியிடுவீர்கள்?

பதில் - எனது அரசியல் வாழ்வு என்பது நான் முன்னர் கூறியதுபோல் எனது ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் ஆலோசனையின்படியே நகர்கின்றது. அதற்குரியநேரம் வரும்போது அவர்களின் ஆலோசனைப்படியே முடிவு எடுக்கப்படும்.

கேள்வி - உங்களுடைய தந்தை புலிகளால் கொலை செய்யப்பட்டார். அக்கொலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பின்னணியில் இருந்தார்கள் என்ற பரவலான கூற்று உண்டு. அத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த உங்கள் தந்தையின் உடல் புலிகளால் நாகரிகமற்ற முறையில் நாடாத்தப்பட்டிருந்தபோது கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதை கண்டித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவீர்களா?

பதில் - என்னுடைய தந்தை கொலை செய்யப்பட்டபோது அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரே. அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துதான் செயற்பட்டிருந்தார். எமது மக்களின் பிரதேச நலனுடன் கூடியதும் மக்களின் அபிவிருத்திசார்ந்ததுமான செயற்பாடுகளை எவர் முன்னெடுத்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் பின்நிற்கப்போவதில்லை. இன்று உருவாகியிருக்கின்ற ஜனநாயக சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன் சார்ந்த செய்பாடுகளை முன்னெடுப்பார்களாயின் அவர்களின் செயற்பாடுகளுக்கு நான் தடையாக இருக்கமாட்டேன்.

கேள்வி - இலங்கையிலே ஆயுதப்போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், ஆயுதக்குழுக்களாக அரசியலில் நுழைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பான உங்கள் பார்வை எவ்வாறு அமைந்துள்ளது?

பதில் - நாட்டிலே உருவாகியுள்ள ஜனநாயக சூழ்நிலையை மேலும் மேம்படுத்தும் பொருட்டு சகலரதும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றேன்.

கேள்வி - மட்டக்களப்பு பிரதேச்தில் ஆயுதக்குழுக்களில் இருந்தவர்களே அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களின் அரசியல் தலைமைத்துவத்தை அல்லது பிரதிநிதித்துவத்தை மக்கள் தொடர்ந்தும் எற்றுக்கொள்ள தயாராவுள்ளனரா அல்லது சமுதாயத்திலுள்ள சிறந்த சமுகசேவை மனப்பாண்மை உள்ளவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கவேண்டும் என விரும்புகின்றார்களா?

பதில் - இதயசுத்தியுடனும் ஜனநாயகப் பண்புகளுடனும் அரசியல் செய்வார்களாக இருந்தால் நான்கூட அவர்களை வரவேற்பேன். எமது மக்கள் நன்கு சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். எதிர்வரும் பொது தேர்தலில் மக்களின் தீர்ப்பை அறியலாம்.

கேள்வி - தமிழ் மக்களின் அரசியல் வட்டத்தில் அரசியலில் சிறந்த அறிவும் நிர்வாகத்திறனுமுடையோர் குறைந்து செல்வதாகவும், முன்னாள் ஆயுததாரிகளின் அரசியல் பிரவேசமே இதற்கான காரணம் எனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில் - கடந்தகாலங்களில் வடகிழக்கு பிரசேதங்களில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலையே இதற்கான காரணமாக கூறலாம். ஆனால் தற்போது சூழு;நிலைகள் மாறிவருகின்றது.

கேள்வி - எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக நீங்கள் அறிவித்ததைத்தொடர்ந்து உங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே. இது உண்மையா?

பதில் - ஆம். எனது பாதுகாப்பிற்காக ஆண்களும் பெண்களுமாக 25 இராணுவ வீரர்கள் வழங்கப்பட்டிருந்தார்கள். ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கும் விடயத்தினை தெரிவிக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு கொழுப்பு சென்றிருந்தேன். அப்போது கொழும்பிலிருந்தே எனது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுவிட்டது. அத்துடன் தற்போது உங்களுக்கு இந்நேர்காணலை வழங்குவதற்கு 1 மணித்தியாலயங்களுக்கு முன்னர் கொழும்பு பாதுகாப்பு செயலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர் எனக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத வாகனத்தை உடனடியாக திருப்பித் தருமாறு கேட்டிருந்தார். நாளை மறுதினம் திங்கட் கிழமை அதை உத்தியோக பூர்வமாக கையளிப்பதாக உறுதி அளித்துள்ளேன்.

நேர்காணல்கள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. XIII

...............................

No comments:

Post a Comment