Tuesday, January 12, 2010

நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்து அபிவிருத்தியை முன்னெடுத்தவர் ஜனாதிபதி

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்து நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரை வெற்றிகொள்ள வேறு எந்தத் தலைவராலும் முடியாதென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

83ம் ஆண்டு இடம் பெற்ற ஐ. தே. க. கால பேரழிவை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். கொக்கட்டிச் சோலை படுகொலை, பல்கலைக்கழக படுகொலை என மேற்கொண்ட யுகம் மீண்டும் வர எவரும் விரும்பப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சரத் பொன்சேகாவோடு இணைந்து தமிழ் கூட்டமைப்பு மக்களுக்குப் பெரும் துரோகம் இழைத்துவிட்டது. அக்கட்சி எப்போதுமே எதிர்க்கட்சியில் தான் உள்ளது. அதற்கு விடிவு கிடையாது. அதன் தலைவர் சம்பந்தன் தமிழர்களை விலை பேசித்திரிகிறார். அந்த நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டு விட்டது.

தமிழ் மக்கள் ஒன்றை மறந்து விடக் கூடாது. இது வர்த்தக மயத்தேர்தல் அல்ல. நம் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தல். அதனால் நாம் மஹிந்தவின் ஆட்களாகவிருந்து அவருக்கு ஆதரவு வழங்குகின்றோம்.

சிலர் குடும்ப அரசியல் பற்றி விமர்சிக்கின்றனர். குடும்ப ஆட்சி என்பது அது மாற்ற முடியாதது. இந்நாட்டில் பண்டாரநாயக்க, இந்தியாவில் இந்திரா காந்தி, பிரிட்டனில் எலிசபெத் மகாராணி என சிறந்த குடும்ப ஆட்சியைக் குறிப்பிட முடியும்.

முக்கியமான காலகட்டத்தில் ஜனாதிபதியுடன் அவரது சகோதரர்கள் கைகோர்த்துச் செயற்பட்டதால் நாட்டுக்கு நல்லது நடந்தது. குடும்ப ஆட்சியிலேயே நாடு நல்ல அபிவிருத்தி அடைந்தது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே முஸ்லிம்கள் கெளரவப்படுத்த ப்பட்டனர்.

பல முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டனர். இது ரவூப் ஹக்கீமுக்குத் தெரியவில்லை. தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதன் மூலம் சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேச துரை சந்திரகாந்தன்

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றி பெறுவதை எவரும் தடுக்க முடியாது. மட்டக்களப்பு மக்கள் அவரது வெற்றிக்காக அதிகூடிய வாக்குகளை வழங்குவது நிச்சயம்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லுறவும் பாரிய அபிவிருத்தியும் இடம்பெறுகின்றன. சகல துறைகளும் மேம்பாடந்து வருகின்றன. காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவமே. மட்டக்களப்பைப் பொறுத்த வரை தேர்தலில் போட்டியெதுவும் கிடையாது. ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவு உள்ளது.

தெற்கிலே சில தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் எவரும் கட்சி மாறப் போவதில்லை. எம்முடனிருந்த மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் சுயவருமானத்தை நாடி சரத் பொன்சேகாவோடு சேர்ந்து விட்டார். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தையே விலை பேசி விற்றுவிட்டார்.

மட்டக்களப்பு மக்களின் வாக்குகள் ஜனாதிபதிக்கே, நாம் எப்போதும் ஜனாதிபதியின் ஆட்களே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com