Monday, January 11, 2010

தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு

சகல மாகாண சபைகளும் அங்கம் வகிக்கும் புதிய மேல் சபை

வடக்கில் எஞ்சிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரைவில் தேர்தல்

யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல், விவசாய பீடங்கள்

யாழ் குடாநாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்

தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

அதேநேரம் சகல மாகாண சபைகளும் அங்கம் வகிக்கக்கூடிய வகையில் புதிதாக மேல் சபையொன்றும் அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் ஏற்கனவே தேர்தல்கள் நடத்தப்பட்டன.

ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இனிமேல் இந்த நாட்டில் அகதிகள் யுகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

எவரும், எங்கும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக சென்று வரலாம். இதில் எதுவிதமான கட்டுப்பாடுகளுமே இராது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியற் பீடம், விவசாயப் பீடம் என்பனவற்றை உள்ளடக்கிய முழுமையான பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ். குடாநாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் மொழியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என முழு நாட்டு மக்களும் அச்சம், பீதியின்றி நிம்மதியாக வாழுகின்றார்கள்.

மத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், சந்தைகள் என எல்லா இடங்களுக்கும் பயமில்லாமல் சென்று வருகின்றனர்.

ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கின்ற அதே சுதந்திரத்தையும், உரிமைகளையும் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பகுதி மக்களும் அனுபவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக உள்ளோம்.

மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைக ளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாடசாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. தென்பகுதி நதியொன்றை திசை திருப்பி இப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல் விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் தகவல், தொழில்நுட்ப கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்யப்படும். ஏற்கனவே யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும். இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.

அன்று தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். நானும் எனது தமிழ் நண்பர்களுடன் யாழ் தேவி ரயிலில் இங்கு வந்து சென்றிருக்கிறேன்.

அந்த யாழ் தேவி ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நாம் ஒரு தாய் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சகலரும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும்.

எல்லா மக்களையும் பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்புமாகும். இங்கு இன ரீதியான அரசியல் இனித் தேவையில்லை. இன, மத, குல, மாகாண பேதங்களும் நமக்கு அவசியமில்லை. சேர் பொன்னம்பலம் ராமநாதன், சேர் பொன்னம் பலம் அருணாச்சலம் போன்ற அரசியல் தலைவர்கள் இப்பூமியில் உருவாக வேண்டும். நான் உங்கள் சகோதரன், உங்கள் நண்பன், நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புகிaர்கள்.

வெற்றியின் சின்னம் வெற்றிலைச் சின்னம் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, முன்னாள் அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். மேயர் திருமதி பரமேஸ்வரி பற்குணராசா, யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் மெளலவி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment