Sunday, January 3, 2010

முத்துசிவலிங்கம் தினகரனுக்கு வழங்கியுள்ள பேட்டி

'அபிவிருத்திக்காக ஜனாதிபதிக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்'

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், பிரபல எழுத்தாளருமான மு. சிவலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

அவரைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றபோது புத்தாண்டு பிறந்த மகிழ்ச்சி ஒருபுறம் அரசியல் வாழ்வில் மிகவும் நெருங்கிய ஒரு தோழனின் மறைவுச் செய்தியைக்
கேட்ட துயரம் மறுபுறம் என உணர்ச்சிகளின் கலவையாகவே சிவலிங்கத்தைக் கண்டோம். அவர், “மலையகத்தின் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. அவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியாது” என்கிறார் கவலை தோய்ந்த முகத்துடன்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு என்ன காரணம்?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த அடுத்த நான்கு ஆண்டுகளாக யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டியதொரு நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுதல் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல் உற்பத்தியை பெருக்குதல் உட்பட பல விடயங்களை ஆராய்ந்து செயல்படுவதற்கும் இந்த 30 ஆண்டுகால யுத்தம் பெரும் தடையாக இருந்தது.

அதுவும் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்த யுத்தம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருந்தது. இதற்கு மத்தியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

யுத்தம் முடிந்த பின்னரேயே ஜனாதிபதி நாட்டின் அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரண்டாவதாக கடந்து வந்த 4 ஆண்டுகால நிர்வாகத்தில் தான் விட்ட தவறுகள், பிழைகள் ஆகியவற்றைத் திருத்திக் கொண்டு அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு இரண்டாவது பதவி காலத்தில் அவருக்குக் கிட்டும்.

எந்தவொரு நாட்டு நிர்வாகிக்கும் அவர் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி யுத்தம் நடக்கும் நாட்டில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவோ நாட்டு மக்களின் பிரச்சினைகளில் அக்கறை கொள்ளவோ முடியாது. இந்த இரண்டாவது சந்தர்ப்பத்தை கொடுக்கும்போது அவரது அரச நிர்வாகம் முறையாக செயற்பட முடியும் என்பதே எனது கருத்தாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா இந்த இருவரையும் நீங்கள் எப்படிப் பார்க்கிaர்கள்?

இந்தக் காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவா, சரத் பொன்சேகாவா என்ற கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமேயில்லை. சரத் பொன்சேகா என்ற நிலையில் யார் இருந்தாலும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இன்னும் ஐந்து ஆறு ஆண்டுகள் வீணாகக்கூடிய நிலை ஏற்படும். அவர் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னெடுக்கப்பட்டுவரும் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஜனாதிபதியை எடுத்துக் கொண்டால் திறமை, அனுபவம், ஆளுமை, யுத்தத்திற்கு முகங்கொடுத்த தைரியம், சர்வதேச சமூகங்களுக்கு அவர் முகங்கொடுத்த விதம், உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களை தாங்கிக் கொண்டமை என்பன வாக்காளர் கவனிப்புக்குரியவை. இப்போது யுத்தம் நின்றுவிட்டது. ஜனாதிபதிக்கு இனி எந்தத் தடையும் இல்லை. பொருளாதார அபிவிருத்தி, அரசியல் பாகுபாடு அதன் மூலமாக எழுகின்ற பிரச்சினைகள், சமூக முரண்பாடுகள் இவற்றுக்கெல்லாம் தீர்வுகாண வேண்டியிருக்கிறது. ஜனாதிபதிக்கு இன்னும் சோதனைகள் இருக்கின்றன. ஆளும் கட்சியில் இருக்கின்ற அவரது பங்காளிகளின் தொல்லைகளை புத்திசாதுரியமாக அணுகுவாரேயானால் அவரைப் போன்ற நாட்டை நிர்வகிக்கின்ற தனி மனிதர் இனி கிடைப்பது அரிது. அவரது ஆட்சியை திசை திருப்புவதற்கு அடிப்படைவாதிகள் எடுக்கும் முயற்சிகளுக்கு இடங்கொடுக்க மாட்டார் என்றே நம்புகின்றோம்.

ஜனாதிபதி சில விடயங்களில் ஜே. வி. பியினரால் நிர்ப்பந்திக்கப்பட்டார். ஜே. வி. பி. கொடுத்த அழுத்தம் காரணமாகவே வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது. சமாதான ஒப்பந்தம் இல்லாமல் செய்யப்பட்டது. யுத்தம் தொடர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஜே. வி. பி. கொடுத்தது. சர்வதேச அளவில் நாடு ஒரு இக்கட்டான நிலைக்கு வரக் காரணம் ஜே. வி. பியாகும். இந்த யுத்தத்தை நிறுத்தியிருந்தால் ஜனாதிபதி, மங்கள முனசிங்க முன்வைத்த அரசியல் தீர்வுகளை விட சிறந்த தீர்வை முன்வைத்திருப்பார். வடகிழக்கு தமிழரின் பிரச்சினைக்கு நாட்டை பிரிக்காத வகையில் அரசியல் உரிமைகளை வழங்கக்கூடியதாக இருந்திருக்கும். இவையெல்லாம் தவிடுபொடியாக போவதற்கு அடிப்படைவாதிகளே காரணமாகும்.

பிடோம் என அழைக்கப்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கு தடையாக இருந்தவர்களும் ஜே. வி. பியினர்தான். சந்திரிகா அம்மையார் முன்வைத்த அந்த திட்டத்தை புலிகளும் கூட ஏற்றிருந்தனர். அதுபோலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்கு சேறு பூசுவதற்கு ஜே. வி. பி. முனைந்திருக்கிறது.

இன்று ஐ. தே. கட்சியுடன் இணைந்து பொது வேட்பாளர் எனக் கூறிக்கொண்டு சரத் பொன்சேகாவை நிறுத்தி வாக்கு கேட்கின்றனர். அவர் ஜனாதிபதியாக வந்தால் ரணில், மங்கள, ஜே. வி. பி. என பல ரிமோட் கொன்ட்ரோலர்களினால் அவர் இயக்கப்படுபவராகி விடுவார். இதில் எந்த ரிமோட் மூலம் அவர் இயக்கப்படப் போகிறார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்காக முன்வைத்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு முதலாவதாக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்தான் இந்த ஜே. வி. பியினர். சிஹல உறுமயவின் ஒரு பிரிவினரும் அவர்களுடன் சேர்ந்து அதனை குப்பையில் போட வேண்டுமென கூச்சல் போட்டனர். இவ்வாறான இனவாதக் கொள்கைகளை கொண்டிருக்கும் ஜே. வி. பி. உருவாக்கப் போகும் ஜனாதிபதியின் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசியல் உரிமைகளையும் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?

இவ்வாறான ஆபத்துக்களை எல்லாம் தவிர்ப்பதற்கு இன்னும் ஒரு ஆறு ஆண்டு காலத்திற்கு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் சிலர் அரசியல் படிப்பதற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்காமல் பட்ட அறிவுடன் இருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்வதுதான் தமிழ் மக்கள் மட்டுமல்ல நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களினதும் பொறுப்பாக இருக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டுடனேயே நான் ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு முழு மனதுடன் முன்வந்திருக்கிறேன்.

சமூக அரசியல் பொதுப் பணிகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டதே ராஜபக்ஷவின் குடும்பமாகும். அரசியலுடனேயே பிறந்து வளர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகி, அமைச்சராகி இன்று ஜனாதிபதியாகியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ, அந்த தனி மனிதனுக்கு அரசியல் வரலாறு ஒன்று இருக்கிறது. நாட்டை நிர்வகிக்கும் திறமைகள் அவரிடம் இருக்கிறது. சரத் பொன்சேகாவையும் பிழை சொல்ல முடியாதுதான். ஒரு பாடகர் நன்றாக பாடக் கூடியவனாக இருப்பார். அதுபோல் நீச்சல் வீரனுக்கு நன்றாக நீந்த முடியும். நல்ல பாடகனில் நாம் விளையாட்டு வீரனாக எதிர்பார்க்க முடியாது. சரத் பொன்சேகா சிறந்த யுத்த வீரராக இருந்திருக்கலாம். திடீரென சிவில் வாழ்க்கைக்கு வந்து அரச நிர்வாகத் துறையை படிப்பதற்கே ஆறு ஆண்டுகாலம் சென்று விடும். நான்கு ஆண்டுகாலம் சேவை செய்த ஜனாதிபதியோடு சரத் பொன்சேகாவை நாம் எவ்விதத்திலும் ஒப்பிட்டுப் பேசமுடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்காக நிபந்தனைகள், கோரிக்கைகள் எதனையும் முன்வைத்திருக்கிaர்களா?

மலையக மக்களுக்கு மிக முக்கியமான இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. நகைப்பிற்கிடமான குடியிருப்பாளர் சட்டத்தின் மூலம் அதாவது 1949 ஆம் ஆண்டு இலக்கம் 3 இந்திய பாகிஸ்தானியர் குடியிருப்பாளர் சட்டத்தின் மூலமே இந்திய வம்சாவளித் தமிழராகிய மலையகத் தமிழர் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாக நாட்டில் இவர்கள் குடியிருப்பாளர்களாகவே இருக்கின்றனரேயொழிய குடிகளாக இருக்கவில்லை. ஆகவே பிரஜாவுரிமைச் சட்டம் அரசியல் யாப்பிலிருந்து நீக்கப்பட்டு பிரஜாவுரிமை திருத்தம் கொண்டுவரப்பட்டு நாட்டிலுள்ள ஏனைய மக்களைப் போல அவர்களும் இலங்கைப் பிரஜைகளாக யாப்பின் மூலம் பிரகடனம் செய்யப்பட வேண்டும். ஒரு திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழை வைத்துக்கொண்டு மலையகத் தமிழர்கள் இன்றுவரை இந்நாட்டின் குடிகளாக இருக்கின்றனர். மலையக மக்கள் மட்டுமல்ல இந்திய வம்சாவளித் தமிழர்களும், இந்திய முஸ்லிம்களும் குடியிருப்பாளர் சட்டத்தின் கீழேயே பிரஜைகளாக இருக்கின்றனர். மலையக மக்கள் பாரம்பரியமாக நிலம் வீடு என்ற உரிமைகள் இல்லாமல் இருக்கின்றனர். பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பிரிட்டிஷ் முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். அதுவும் தோட்ட நிர்வாகங்களுக்கே சொந்தமாக இருக்கிறதே தவிர தொழிலாளர்களுக்கு சொந்தமில்லை. ஆகவே இந்த மக்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டு பெருந்தோட்டங்கள் கிராம மயமாக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அப்போதுதான் தேசிய நீரோட்டத்தில் மக்கள் ஒரு அந்தஸ்தை பெறமுடியும்.

பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு பிரச்சினை இருக்கிறது. தோட்டப் பகுதிகளிலுள்ள பெரும்பாலானோர் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களுக்கு படையெடுக்கின்றனர். அநேகமானோர் வீடுகளில் பணியாளர்களாக இருக்கின்றனர். உலகத்திலேயே வீடுகளில் பணியாளர்களாக அடிமை ஊழியம் செய்த கறுப்பின மக்கள் கூட இன்று சுதந்திரமடைந்துள்ளனர். ஆனால் இலங்கையில் மலையகத் தமிழர்கள் பொருளாதார ரீதியில் சீரழிக்கப்பட்டதன் காரணமாக போதுமான வருமானம் கிடைக்காததால் அநேகமான வீடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக ஏவல் தொழிலாளிகளாக இருக்கின்றனர். இது ஒரு சமூகத்தையே ஊனமாக்கிக் கொண்டிருக்கின்றது. இதனை நாம் இல்லாமல் செய்ய வேண்டுமானால் தோட்டங்களில் உப உணவு பயிரிடுவதற்கும் மேலதிக வருமானம் தேடிக் கொள்வதற்கும் அப்பகுதியில் இருக்கும் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டால் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராட்டம் செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படாது.

மலையக மக்கள் முன்னணியை உருவாக்கிய போது மிக முக்கியமான வேலைத் திட்டத்தை முன்வைத்திருந்தோம். அதாவது பத்து தோட்டங்களுக்கொரு தொழிற்பேட்டை திறக்கப்பட வேண்டும். மலையகத்தைப் பொறுத்தவரையில் வேண்டியளவு மூலப் பொருட்கள் இருக்கின்றன. பாரம்பரிய தொழிலாகிய தேயிலை கொழுந்து பறிப்பதிலும் இறப்பர் பால் வெட்டுவதிலுமே அவர்கள் ஒடுக்கப்பட்டு திசை திருப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு எந்தவொரு அரசாங்கமும் முன்வரவில்லை. மலையகத் தலைமைகள் கூட இவ்விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை. தொழிலாளர்களின் குடியுரிமை, நிலவுரிமை, கிராம மயப்படுத்தப்பட்ட வசிப்பிட உரிமை, இளைஞர் யுவதிகளின் எதிர்கால வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் தொழிற்சங்கங்களுக்கு ஞானம் இல்லாமல் போய்விட்டது.

இன்று சிறுபான்மையினரின் பிரச்சினைகள் என்றால் அவை வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளாக மட்டுமே பேசப்படுகிறது. அதனை விட சர்வதேச ரீதியில் பேசப்பட வேண்டிய விடயமாக மலையக மக்களின் பிரச்சினைகளும் இருக்கின்றன. அவர்கள்தான் அரசியல் உரிமைகளை இழந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தை மரணங்கள், போஷாக்கின்மை போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. அண்டைய நாடான இந்தியாவிற்கு கூட மலையகத் தமிழ் மக்களின் அரசியல் சமூகப் பொருளாதார பிரச்சினைகள் தெரியாது.

மலையகத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதியைச் சந்தித்த போது அவரிடம் இதனைக் குறிப்பிட்டேன். தோட்டப் பகுதிகளில் உள்ள வீதிகள் கொங்கிaட் போடப்பட்டிருக்கிறது. வீடமைப்புத் திட்டத்தை சந்திரிகா அம்மையார் செய்தார். சிறிமாவோ பண்டாரநாயக்க தோட்டங்களையும் தோட்டப் பாடசாலைகளையும் தேசிய மயமாக்கினார். பண்டாரநாயக்க சேமலாப நிதியை பெற்றுக் கொடுத்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு ஒரே தடவையில் நியமனங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலப் பகுதியில் இவையனைத்தும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலப் பகுதியில் இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தோட்டப் பகுதிகளில் தொழிற் பேட்டைகளை அமைத்து கொடுப்பாரானால் அவர் வரலாற்றில் முக்கிய இடம்பெறுவார்.

ஐ. தே. கட்சி எதையும் செய்யாவிட்டாலும் மலையக மக்கள் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒரு மாயை இருக்கிறது. அதற்கான காரணத்தை அறிந்தால்தான் அதே மக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் திசை திருப்புவதற்கு ஏற்றால் போல் வேலைத் திட்டங்களைச் மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற் பேட்டைகளை அமைத்து தோட்டப்புற இளைஞர் யுவதிகள் கொழும்பு நகர்ப்புறப் பகுதிகளில் ஊழியம் செய்வதை தடுப்பாரானால் அவர் மலையக மக்கள் மத்தியில் என்றும் பேசப்படும் அளவிற்கு உயர்ந்து விடுவார்.

கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதற்கான சகல வளங்களும் மலையகத்தில் இருக்கின்றன. விவசாயம் செய்வதற்கு உதவினால் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தனிப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் மட்டும் சுரண்டிக்கொண்டு போக அனுமதிக்காமல் அரசாங்கம் பலனை மக்கள் மூலம் அடைய வேண்டும். ஒன்பது துறைமுகத் தொழிலாளி ஒரு மலையகத் தொழிலாளிக்குச் சமனாக கருதப்படுகிறது. அந்தளவிற்கு வலிமையுள்ள தொழிலாளர் சமூக வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

மலையகப் பெண்களின் பணிகள் இன்னமும் நவீன முறைப்படுத்தப்படவில்லை. பழைய பாணியில்தான் பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்கள் உடையணிகிறார்கள். உடைகள், கொழுந்து பறிக்கும் முறைகள் மாற்றப்பட வேண்டும். ரப்பர் பால் வெட்டுவதற்கு இன்னமும் இரும்பு வாளிகளைத்தான் கொண்டு செல்கிறார்கள். ஒரு பெண் தொழிலாளி சாதாரணமாக ஒரு நாளைக்கு சுமார் பத்து கிலோ மீற்றர் தூரம் சென்று கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது. உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தொழிலை நவீனப்படுத்துவதற்கு தொழில் அமைச்சின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக பெண்களின் வேலை நேரங்கள் குறைக்கப்பட வேண்டும். 25 வயது குமரிப் பெண் 45 வயது முதுமையுடன் இருப்பதற்கு தொழில் ரீதியாக மழுங்கடிக்கப் படுவதே காரணமாகும்.

ஜனாதிபதியை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவீர்களா?

ஆம்! அமைச்சர் இராதாகிருஷ்ணன் உடன் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து மேல் மாகாணத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளேன்.

ம. ம. முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவரான நீங்கள் அதிலிருந்து விலகி சில காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்து பின் மனோ கணேசனுடன் இணைந்து செயற்பட்டீர்கள். இத்தேர்தலின் போது அவரை விட்டு விலகியதற்கான காரணம் என்ன?

கடந்த நான்காண்டு காலமாக அரசியலில் இருந்து விலகியிருந்த போது இலக்கியத் துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தேன். இந்த நான்காண்டு காலப் பகுதியில் மலையக சமூகத்தின் அரசியல் சமூக தகவல்களை உள்ளடக்கிய பெறுமதியான நான்கு நூல்களை எழுதியிருக்கிறேன். இக்காலப் பகுதியை நான் வீணாக்கியதாக நினைக்கவில்லை. இரண்டு மாகாண சபை காலகட்டங்களிலும் செயற்படுமாறு மனோ கணேசனும் சகோதரரும் கோரினர். நான்கு ஆண்டு காலத்தில் இணைந்து என்னுடன் இணைந்து நல்ல அரசியல் சிந்தனைகளுடன் செயற்படுவதற்கான சில நபர்களைத் தேடி அதில் தோற்றுப் போனேன். என்னை வளர்த்துக்கொள்ள எண்ணியிருந்தால் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க இரண்டாயிரம் அங்கத்தவர்களை வைத்துக்கொண்டு எனது வருமானத்தை தேடிக்கொண்டிருக்கலாம். அது அரசியலாக இருக்காது.

நான் எதிர்பார்க்கப்பட்ட உசிதமான அரசியல் நிலைப்பாடுகள் ஒத்துவராத காரணத்தினால் நான் விலக நேர்ந்தது. மாகாண சபை மூலமாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மலையக மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதான எந்தவேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. சரத் பொன்சேகாவை மனோ கணேசன் சந்தித்தபோது என்னென்ன நிபந்தனைகளை முன்வைத்தார்; அந்த நிபந்தனைகளை அவர் எப்படி ஏற்றுக்கொண்டார் போன்ற முக்கிய விடயங்களை அறிந்துகொள்ள முடியாமல் போனது வருந்தத்தக்க விடயமாகும். சரத் பொன்சேகா என்ற பொது வேட்பாளரை சந்திக்கச் சென்றபோது என்னையும் அவர்கள் அழைத்துச் சென்றிருக்கலாம்.

எமது கோரிக்கைகளை நான் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். காரணம் மலையக மக்கள் மத்தியில் ஏன் சரத் பொன்சேகாவை ஆதரிக்கிறோம் என நியாயப்படுத்துவதற்கு என்னிடம் விளக்கங்கள் இருந்திருக்க வேண்டும். சரத் பொன்சேகாவை ஆதரித்து நோர்வூட் ராசா தோட்டத்தில் நடந்த முதல் பிரசாரக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளாததற்கும் காரணம் அதுதான். அவர் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் ஆபத்தானவையாக இருக்கலாம். கட்சி என்பது ஒரு தோழமை நிறைந்தது.

மலையக அரசியலில் ஒரு வரலாற்று திருப்புமுனையை உருவாக்கியவர் அமரர் சந்திரசேகரன். மலையக அரசியல் சந்திரசேகரனுக்கு முன் பின் என வரலாறு வகுக்கப்பட வேண்டும். தற்கால நிலையில் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருப்பினும் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

1977ம் ஆண்டிலிருந்து நான் அவருடன் இணைந்து அரசியல் செய்திருக்கிறேன். சொந்த ஊரில் சிறந்த நண்பர்களாகவே இருந்திருக்கிறோம். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தோழர்களாக இருந்து எழுச்சியை ஏற்படுத்தியவர் அமரர் சந்திரசேகரன். 200 ஆண்டுகால மலையக சமுதாயத்தின் மெளனத்தை கலைத்ததில் அவருக்கு பெரும் பங்குண்டு.

கடந்த 28ஆம் திகதியன்று இரவு பதினொரு மணியளவில் தொலைபேசியில் என்னுடன் தொடர்புகொண்டு சுமார் 20 நிமிடம் வரை பேசிக்கொண்டிருந்தார். நகைச் சுவையாக பேசிய அவர் அரசியலில் மீண்டும் சேருமாறு வலியுறுத்திக் கேட்டார். அவரது வாழ்க்கை பாதிப் பயணத்தில் முடிந்துவிட்டதை நினைக்கும் போது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அமரர் சந்திரசேகரனைப் போன்றதொரு அரசியல் சிந்தனையாளர் உருவாகுவது சந்தே கத்திற்குரியதாக இருக்கிறது. அவருக்கு இந்த சமூகத்தைப் பற்றிய ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவை நனவாக்க புதிய சிந்தனையாளர்கள் எதிர்காலத்தில் உருவாக வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com