Saturday, January 2, 2010

வடபகுதி மக்களை மிருகங்களைப்போல் வைப்பதே பொன்சேகாவின் விருப்பம். SB

வட பகுதி தமிழ் மக்களை மிருகங்களைப் போன்று வைத்திருப்பதற்கு விரும்பும் மனப்பான்மை கொண்டவரே சரத் பொன்சேகா என்று எஸ். பி. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். கொழும்பு 7 யிலுள்ள மகாவலி நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது, சரத் பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதமொன்றை எழுதி இருந்தார். அக்கடிதத்தில், வட பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தும் போது ஒவ்வொரு கிராமத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து அப்பிரதேசங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நான் ஒரு நாள் சரத் பொன்சேகாவிடம் வினவினேன். அப்போது பொன்சேகா “இல்லாவிட்டால் காட்டில் தலைமறைவாகியுள்ள புலிகள் மீண்டும் ஒன்றாகி பயங்கரவாத செயற்பாடு களில் ஈடுபடலாம். அவ்வாறான நிலைமையைத் தடுக்க வேண்டும்” என்றார். இது அவரது மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றது. இராணுவ முகாம்களை அமைத்து வட பகுதி தமிழ் மக்களை மிருகங்களைப் போன்று நடத்தவே அவர் விரும்புகின்றார். அவர் ஒரு குரூரமான இராணுவத் தளபதி. அவருக்கு ஜனநாயகம் குறித்த அறிவு கிடையாது.

புலிப் பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்ப ட்டதால் பெரிதும் நன்மை பெற்றிருப்பது வடபகுதி தமிழ் மக்கள்தான். அவர்களைப் புலிகள் மிகவும் துன்புறுத்தினார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.

இப்போதுதான் தமிழ் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக மூச்சுவிடும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது மறைக்க முடியாத உண்மையாகும். தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான பிரச்சினை இருப்பதை கூட சரத் பொன்சேகா அறியமாட்டார். ஆனால் எமது ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் உறுதியாக உள்ளார். அவருடன் எவரும் அளவலாவலாம். அவர் மக்களின் தேவை களையும், உணர்வுகளையும் நன்கறிந்தவர். அவர் விவசாயி ஒருவரின் மகனே.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆறு லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார். நான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி நிபந்தனைகள் விதித்து மீண்டும் கட்சியில் இணையவில்லை. மாறாக நான் வளர்ந்த, எனக்கு நன்கு பரீட்சயமான இடத்திற்கு திரும்பி வந்திருக்கின்றேன் அவ்வளவுதான்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்தின் ஊடாக பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டதுடன் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் இந்நாட்டின் தனிநபர் வருமானம் 2240 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்திருக்கின்றது. ஆனால் 2005 ஆம் ஆண்டில் தலா வருமானம் ஆயிரம் டொலர்களாகவே இருந்தது என்றார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக பண்டாரநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


No comments:

Post a Comment