Saturday, January 23, 2010

ரூ.7 கோடி மோசடி: துயரத்தில் வடிவேலு

திரையில் தனது நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு சோகத்தில் உள்ளார். அவருடன் இருந்த நண்பர்களே ரூ.7 கோடியை மோசடி செய்து கம்பி நீட்டியுள்ளனர். இதை நினைத்து தினமும் அழுது கொண்டு இருக்கிறார்.

வருமான வரித்துறையினர் சமீபத்தில் வடிவேலு வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தியபோதுதான் இந்த விஷயம் வெளியே தெரியவந்தது.

வடிவேலுவை சுற்றி எப்போதும் துணை காமெடி நடிகர் பட்டாளம் இருக்கும். அவர்களில் சிலர் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று புரியாமல் குழம்பியிருந்த வடிவேலுவை புரிந்துகொண்டு, கூட இருந்த சிலர் குழி பறிக்க வியூகம் வகுத்தனர். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுமாறு யோசனை சொன்னார்கள்.

நிலம் வாங்கி போட்டால் ஒரு வருடத்திலேயே விலை ஏறும் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார்கள். அதை நம்பி வடிவேலுவும் நல்ல இடமாக பார்க்க சொன்னார். மோசடி நடிகர்கள் போலி தஸ்தாவேஜுகள் தயார் செய்து அரசு புறம்போக்கு நிலங்களை வடிவேலுவுக்கு வாங்கி கொடுத்தனர். உச்சகட்ட ஏமாற்றுத்தனமாக சுடுகாட்டுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தையும் வடிவேலுவுக்கு வாங்கி கொடுத்தனர். இதன் மூலம் நிலம் உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டுமென ரூ.7 கோடி வரை வாங்கியுள்ளனர். சில மாதங்கள் கழித்துதான் உண்மை தெரிந்தது. அதற்குள் ஏமாற்றியவர்கள் வடிவேலுவிடம் இருந்து கம்பி நீட்டிவிட்டனர். வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் வைத்தே அழுதார். வருமான வரி அதிகாரிகளிடம் முதல் தடவையாக இதை தெரிவித்துள்ளார்.

வடிவேலு அதிக படிப்பறிவு இல்லாதவர் நிலம் வாங்குவதில் உள்ள சட்ட விஷயங்கள் பற்றி அவருக்கு அறவே தெரியாது. இதை சாதகமாக்கி ஏமாற்றி அவருடன் இருந்தவர்கள் அவரை ஏமாற்றி உள்ளனர்.

இந்த விஷயங்கள் பற்றி வடிவேலுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, உண்மைதான் என ஒப்புக்கொண்டார். என் நண்பர்களை நான் பெரிதும் நம்பினேன். அவர்கள் தாம்பரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நிலம் வாங்கி தந்தனர். பிறகு விசாரித்தபோது அது போலி டாகுமென்ட் என தெரியவந்தது. பேப்பரை வைத்து ஏமாற்றி விட்டனர் என புலம்பியுள்ளார்.

துணை நடிகர்களான என் நண்பர்களை குருட்டுத்தனமாக நம்பினேன். அவர்கள் மோசம் செய்துவிட்டனர். அவர்கள் போலியாக வாங்கி தந்த நிலத்தில் ஒன்று சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பெருந்தொகையை இழந்து விட்டேன். ஒவ்வொரு வரையும் சிரிக்க வைக்கும் நான் திரைக்கு பின்னால் அழுது கொண்டு இருக்கிறேன். நெருக்கமான நண்பர்கள் துரோகம் செய்தால் அதில் ஏற்படும் வலி தாங்க முடியாததாக இருக்கும்.

நிஜவாழ்வில் நான் ஒரு பப்பூன் என்று மற்றவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இதை வெளியில் சொல்லாமல் இருந்தேன் என்றார்.

No comments:

Post a Comment