Tuesday, January 12, 2010

மலேசியாவில் 'மாயமான' 39,000 தமிழர்கள்!

தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு வந்த சுமார் 39,000 பேர் விசா காலம் முடிந்தும் இன்னும் நாடு திரும்பவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் நஜீத் ரசாக் கூறியுள்ளார். டெல்லி மற்றும் சென்னைக்கு ஜனவரி 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை,​​ நஜீத் பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந் நிலையில் தனது இந்தப் பயணம் தொடர்பாக மலேசியாவின் புத்திரஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் இந்திய பத்திரிகையாளர்களை சந்தித்தார் நஜீத்.

அவர் கூறுகையில்,

இந்தியர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் தாராளமாக நடந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.

வெளி நாடுகளில் இருந்து மலேசியா வருபவர்கள் மலேசிய விமான நிலையத்திலேயே விசா பெற்றுக் கொள்ளும் முறையை ரத்து செய்துவிட்டோம். வேறு நாடுகளில் இருந்து மலேசியா வந்து இங்கிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்வதைத் தடை செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபோன்ற பிரச்சனை சென்னையில் இருந்து சுற்றுலா விசாவில் வரும் பயணிகளால்தான் ஏற்படுகிறது. டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து வருபவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. சென்னையில் இருந்து வருபவர்கள்தான் இங்கு தங்கி விடுகிறார்கள்.

அல்லது இங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
இவ்வாறு செல்பவர்களினால் ஆஸ்திரேலியா தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.​ இது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் எந்த பிரச்சனையும் இல்லை.​ கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையிலிருந்து இங்கு வந்தவர்களில் 39, 046 பேர் உரிய விசா காலம் முடிந்த பிறகும் இந்தியா திரும்பவில்லை.​ இது தவறான முன் உதாரணமாகும்.

மாயமானவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மலேசியாவில் தான் இருக்கிறார்களா அல்லது வேறு நாடுகளுக்குப் போய்விட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவர்கள் தீவிரவாதிகள் அல்ல, வேலைவாய்ப்புகளுக்காக வந்தவர்கள் தான் என்றாலும், அவர்கள் மலேசியாவில் மறைந்து வாழ்வதும் இங்கிருந்து வேறு நாடுகளுக்குப் போவதும் கவலை தருகிறது.

இந்த விவகாரம் குறித்தும் இந்தியாவுடன் பேசுவேன். இந்தியாவில் நான் மேற்கொள்ளும் பயணம் சம்பிரதயமாக முடிந்துவிடாமல் பயனுள்ளதாக அமையும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

இந்தியப் பயணத்தின்போது நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து துறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நம்புகிறேன்.

மலேசியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பம்,​ சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழில்நுட்பங்கள்,​​ கனரக தொழில் துறைகளில் இந்தியா முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவுக்கு தொடர்ந்து தடையில்லாமல் பாமாயிலை வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என நம்புகிறேன்.​

இந்தியாவில் இருந்து வரும் பலர் இங்குள்ள கோவில்களில் பூசாரிகளாகவும் மற்றும் சலவை தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர் என்றார் நஜீத்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com