2010 ஜனாதிபதி தேர்தலுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் விஞ்ஞாபனம்
சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்
இலங்கையில் 26 ஜனவரி 2010 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளர் விஜே டயஸை ஆதரிக்குமாறும் எமது பிரச்சாரத்தில் பங்குபற்றுமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. 68 வயதான விஜே டயஸ் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழுவின் உறுப்பினருமாவார். அவர் தனது இளமைக் காலம் முழுவதையும் புரட்சிகர மார்க்சிசத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவராவார்.
உழைக்கும் மக்கள் இந்தத் தேர்தலில் பிரதான பிரச்சினை ஒன்றை எதிர்கொள்ளுகின்றனர்: அதாவது அரசாங்கத்துக்கும் தமிழ் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்டது என்ன? 70,000 பேர்கள் கொல்லப்பட்டும் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தும் அல்லது ஒருமுகப்படுத்திய தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளதோடு நூறாயிரக் கணக்கானவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டிருப்பதுடன் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பான பதட்ட நிலைமைகள் காணப்படுகின்றன. இலங்கை ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற இனவாத அரசியலுக்கு செலுத்த நேர்ந்துள்ள விலை இதுவேயாகும்.
முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் யுத்தக் குற்றங்களை இழைப்பதிலும் வெளிப்படையான ஜனநாயக உரிமை மீறல்களை செய்வதிலும் தலைமை வகித்தவர்கள். 2006 ஜூலையில் இராஜபக்ஷ மீண்டும் ஆரம்பித்து வைத்த யுத்தத்தை ஜெனரல் பொன்சேகா நிறைவேற்றினார். கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொது மக்களை இராணுவம் கொன்றதோடு புலிகளின் தோல்விக்குப் பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக 280,000 பேர்களை அடைத்து வைத்திருந்தது. பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தீவு முழுவதும் இயங்கி வந்த கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
இராஜபக்ஷ யுத்தத்துக்கு செலவிடுவதற்காக இலங்கைத் தீவை முழுமையாக அடகுவைத்துள்ளார். தேர்தல் முடிவடைந்தவுடன், நாடானது சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனுக்காக அதன் நிபந்தனைகளை செயற்படுத்துவதற்காக அரசாங்கமானது பொதுச் செலவை பிரமாண்டமாக வெட்டிக் குறைக்கத் தள்ளப்படும். தவிர்க்க முடியாமல் வளர்ச்சி அடைந்துவரும் அரசியல் எதிர்ப்பை நசுக்க யுத்த காலத்தில் உருவாக்கிய பொலிஸ்-அரச அடக்குமுறை வழிமுறைகளை அது பயன்படுத்தும்.
முதலாளித்துவத்தின் சகல பிரதிநிதிகளுக்கும் மற்றும் அதற்காக பரிந்து பேசுபவர்களுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட பிரச்சாரம் செய்கின்றது. தெற்காசியாவிலும் மற்றும் முழு பூகோளத்திலும் சோசலிசக் குடியரசை அமைப்பதன் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றுக்காக நாம் போராடுகின்றோம்.
இனவாதத்தின் வங்குரோத்து
யுத்தக் குற்றங்கள் மற்றும் தேசிய சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையின் ஊடாக பெறப்பட்ட தற்காலிக சமாதானத்தால் எதுவும் தீர்க்கப்படப் போவதில்லை. உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுத்ததில் அரசாங்கம் இழைத்த கொடூரங்களும் இனவாத பதட்ட நிலைமைகளும் மோதல்களும் புதிய வடிவங்களில் வெடிக்கும் என்பதை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளன.
யுத்தத்தையும் பொலிஸ் அரச ஒடுக்குமுறையையும் தவிர வேறொன்றும் தெரியாத ஒரு முழுத் தலைமுறை வளர்ந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குகள் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் சகல முயற்சிகளும் இனவாத அரசியலினால் பொறிந்துபோயுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இலங்கையில் முதலாளித்துவ ஆட்சிக்கு அடித்தளமாக இருப்பது இந்த இனவாத அரசியலே. இராஜபக்ஷவும் பொன்சேகாவும் வழங்கியுள்ள "தீர்வு" வடக்கு கிழக்கில் நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பையும் இலங்கைத் தீவு முழுவதும் பொலிஸ்-அரச அடக்குமுறை வழிமுறைகளையும் ஏற்படுத்துவது அவர்களுக்கு தவிர்க்கமுடியாததாக்குகின்றன.
இதே போல், யுத்தத்தின் முடிவில் புலிகள் நசுக்கப்பட்டமையானது வட இலங்கையில் ஒரு தனியான தமிழ் முதலாளித்துவ அரசை கட்டியெழுப்பும் புலிகளின் முன்நோக்குக்கு கிடைத்த தீர்ப்பாகும். புலிகளினுடைய இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைத் திட்டமானது தமிழ் நாட்டில் அல்லது இந்தியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் ஒரு புறமிருக்கும் அதே நேரத்தில், புலிகள் சிங்களத் தொழிலாளர்களுக்கு கூட வேண்டுகோள் விடுக்க முடியாதவர்களாக்கிருந்ததுடன் சிங்கள பொது மக்கள் மீது இரத்தம் தோய்ந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சகல அரசியல் எதிர்ப்புக்களையும் இரக்கமின்றி நசுக்கியதன் மூலம் வெளிப்பட்ட புலிகளின் ஜனநாயக விரோதப் பண்பு, தமிழ் மக்களை அந்நியப்படுத்த மட்டுமே வழி செய்ததோடு இறுதியில் அவர்களது ஆதரவை இழக்கவும் வழிவகுத்தது.
புலிகளின் அரசியலானது அரசியல் நிலைமைகளின் மாற்றங்களில் இருந்து, குறிப்பாக 11 செப்டெம்பர் 2001 தாக்குதலின் பின்னர் அமெரிக்காவினால் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என பொய் பெயரிட்டு முன்னெடுத்த யுத்தத்தில் இருந்து அவர்களை தப்பிக்க முடியாதவர்களாக்கியது. இலங்கையிலும் இந்து சமுத்திரத்திலும் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சி அடைவதையிட்டு இந்தியாவும் அமெரிக்காவும் மேலும் மேலும் கவலை கொண்ட நிலையில், இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்ந்து நடைபெறுமானால் அவர்களது நலன்களுக்கு பாதகமாக இருப்பதாக பெரும் வல்லரசுகள் முடிவெடுத்தன. இராஜபக்ஷ புலிகளுக்கு எதிரான தனது சொந்த இரக்கமற்ற "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" நியாயப்படுத்த புலிகளின் பயங்கரவாத தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டதோடு பெரும் வல்லரசுகள் அனைத்தும் இராஜபக்ஷவுக்கு உதவி செய்தன.
தெற்காசியாவில் பெரும் வல்லரசுகளின் போட்டி
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவு சமாதானத்தை கொண்டுவராது. மாறாக, அது பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் மேலும் மோதல்களை மட்டுமே கொண்டுவரும் உலக அரசியலிலான நெருக்கடியின் ஆழத்தின் அளவு பற்றிய எச்சரிக்கையை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. 2008 செப்டெம்பரில் வெடித்த பூகோள நிதி நெருக்கடியில் வெளிப்பட்ட, முதலாளித்துவ அமைப்பின் தீர்க்க முடியாத நெருக்கடியால் சர்வதேச உறவுகள் ஆழமாக ஸ்திரமிழந்துள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கான பாரிய படை நகர்வு பற்றிய ஒபாமா நிர்வாகம் அண்மையில் அறிவித்தமையும் மற்றும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு பாகிஸ்த்தானை அது அழுத்தம்கொடுக்கின்றமையும் அமெரிக்காவின் பிரதிபலிப்புக்கு எடுத்துக்காட்டாகும். "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் " என்ற போர்வையின் பின்னால், அமெரிக்கா அதனது பிரதான எதிரிகளுக்கு எதிராக, குறிப்பாக சீனாவுக்கு எதிராக, உலக அரசியலில் நீதிபதியாக அதனடைய பாத்திரத்தை பேணிக்கொள்வதன் பேரில், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகிய எரிசக்தி வளம்கொண்ட பிராந்தியங்களின் மீது மூலோபாய நிலையை ஸ்தாபித்துக்கொள்ள முயற்சிக்கின்றது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ள அதன் மூர்க்கத்தனமான இராணுவாதம், ஏற்கனவே மத மற்றும் இனப் பகைமைகளால் கிழிந்து போயுள்ள முழு இந்திய உபகண்டத்தையும் நிலைகுலைய செய்துகொண்டிருக்கின்றது.
இந்தச் சூழ்நிலையிலேயே இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தது. இராஜபக்ஷ அவரது நன்மைக்காக ஒரு பெரும் வல்லரசுக்கு எதிராக இன்னொரு வல்லரசை பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தார். அவர் யுத்தக் குற்றங்கள் பற்றி விசாரிக்குமாறு அமெரிக்காவும் ஐரோப்பாவும் விடுத்த வேண்டுகோளுக்கு எதிராக சீனவின் ஆயுத, நிதி ஆதரவிலும் இராஜதந்திர உதவியிலும் கனமாக தங்கியிருந்தார். அதற்கு பிரதியுபகாரமாக, ஹம்பந்தோட்டையில் ஒரு பிரதான துறைமுக வசதி உட்பட சீனாவின் முதலீட்டுக்கு முன்னுரிமையளித்தார். இலங்கையில் சீன செல்வாக்கின் வளர்ச்சியானது இந்தியாவும் அமெரிக்காவும் இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில் அவருக்கு ஆதரவளிக்க முடிவெடுத்ததில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளது.
இராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டங்கள், முதலாளித்துவ உலக ஒழுங்கை கிழித்து எறிந்துகொண்டிருக்கும் கசப்பான சர்வதேச முரண்பாடுகளுக்குள் இலங்கையை இழுத்துத் தள்ளியுள்ளது. அண்மைய அமெரிக்க செனட் வெளியுறவு குழுவின் அறிக்கையானது இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கையானது ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவுக்கும் இடையிலான இந்து சமுத்திரத்தின் கடல் மார்க்கத்தின் "மையப்பகுதியில்" அமைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. தனது எதிரிகளிடம் "இலங்கையை இழக்காமல் இருக்க" வாஷிங்டனின் உறுதிப்பாட்டை அது வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்கவாறு, அமெரிக்க புவிசார் மூலோபாய யதார்த்தங்களை கவனத்தில் எடுக்கும் "ஒரு வலுவான அணுகுமுறைக்காக" வாஷிங்டனின் முன்னைய மனிதாபிமான பாசாங்குகளை குப்பைக் கூடைக்குள் போடுமாறு அந்த அறிக்கை வேண்டுகோள் விடுக்கின்றது.
வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி
உலகம் முழுவதுமுள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளைப் போலவே, இலங்கைத் தொழிலாளர்களும் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மற்றும் உரிமைகள் மீதான முதலாளித்துவ தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். பூகோள நிதி நெருக்கடியானது இலங்கையில் யுத்தத்தால் அழிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேலும் பொடியாக்குகிறது. அரச கடனானது மொத்த தேசிய உற்பத்தியில் 90 வீதமாக, அதாவது 4.1 ட்ரில்லியன் ரூபாய்களாக இப்போதுள்ளது. இதற்கு இராணுவச் செலவே பிரதான காரணமாகும்.
தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் அதிருப்தியும் சீற்றமும் பெருந்தோட்டங்கள், துறைமுகம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார மற்றும் நீர்வளங்கள் சபைகளிலும் புதுப்பிக்கப்பட்ட போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசாங்கச் சார்பு மற்றும் எதிர்க்கட்சிச் சார்பு தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் நசுக்கி வந்துள்ளன. இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் எதிர்க்கும் அவர்கள் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு தலைவணங்கி அவர்களுடைய உறுப்பினர்களை விற்றுத் தள்ளியுள்ளனர்.
வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக துருப்புக்களை நிறுத்திய இராஜபக்ஷ, தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்ய தனது அவசரகால அதிகாரங்களைப் பாவித்ததோடு ஊடக விமர்சகர்கள் மீதான அடுத்தடுத்த தாக்குதல்களை ஊக்குவித்தார். அவரது யுத்தத்துக்கு பின்னரான "தேசத்தை கட்டியெழுப்பும்" நடவடிக்கை சந்தை சார்பு மறுசீரமைப்பையும் தனியார்மயத்தையும் துரிதப்படுத்துகிறது. இது இலங்கைத் தீவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதாகும். நாட்டை "சர்வதேச ரீதியில் போட்டியிடத் தக்கதாக" ஆக்குவதற்கு அடுத்து வரும் அரசாங்கம் சம்பள மட்டத்தையும் பொதுச் செலவையும் வெட்டித்தள்ள முயற்சிக்கும். உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தொழிலாள வர்க்கம் வறுமைக்குள் தள்ளப்பட்டதனால் ஏற்கனவே சீரழிந்து போயுள்ள மேற்கத்தைய ஏற்றுமதி சந்தைகளுக்கு ஆசிய நாடுகள் வாய்ப்புத் தேடி போட்டியிடும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் குறிப்பாக கடுமையானதாக இருக்கும்.
இலாப நோக்கம் கொண்டதும் மற்றும் காலாவதியான தேசிய-அரச அமைப்புமுறைக்கும் எதிராக வழிகாட்டப்படும் முழு அனைத்துலக தொழிலாள வர்க்கத்துக்குமான ஒரு சோசலிச மூலோபாயத்தினாலேயே வறுமை மற்றும் உலக யுத்த ஆபத்துக்கு எதிராக தொழிலாளர்களால் அவர்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
சம்பள உயர்வு போராட்டத்தின் போது, அக்கரபத்தனையில் பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் ஒத்துழைப்புடன் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமாக தமது நடவடிக்கை குழுவை ஸ்தாபித்ததுடன் ஏனைய பகுதி தொழிலாள வர்க்கமும் அதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்கள். தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, இலாப அமைப்புக்கும் மற்றும் அதன் பாதுகாவலர்களுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் அணிதிரள்வதற்கான தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான முதல் படியை அவர்களது நடவடிக்கை பிரதிநிதித்துவம் செய்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கைகள்
*வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்
முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவுகட்டுமாறும் சகல கைதிகளையும் விடுவிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. உண்மையான ஜனநாயக ரீதியான தீர்வுக்கான அடித்தளத்தை உருவாக்க, தீர்க்கப்படாத சகல ஜனநாயக பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதன் பேரில் அரசியலமைப்புச் சபை ஒன்றை கூட்டுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய ஒரு சபை சாதாரண உழைக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்பட வேண்டும். உண்மையான ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த சகல பாகுபாடான சட்டங்களுக்கும் முடிவுகட்டப்பட வேண்டும்.
*சகலருக்கும் பாதுகாப்பான சிறந்த சம்பளத்துடனான தொழில்கள் வேண்டும்
சிறந்த சம்பளத்துடனான இலட்சக்கணக்கான தொழில்களை உருவாக்கவும் பொது வீடமைப்பு, பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், கலாச்சார மற்றும் விளையாட்டு வசதிகள், வீதிகள் மற்றும் வடிகாலமைப்புத் திட்டங்களையும் கட்டியெழுப்பவும் பொதுத் தேவைகளுக்காக பில்லியன் கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். சம்பளக் குறைப்பின்றி மற்றும் வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கேற்ற ஊதியத்துடன் வேலை வாரத்தை 30 மணித்தியாலங்களாக குறைப்பதன் மூலம் தொழில் வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பிரேரிக்கின்றது. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது நிறுத்தப்படுவதையும் மற்றும் பெண்களையும் இளைஞர்களையும் இரவு வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்படுவதையும் சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்ள, பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தேசியமயமாக்கவும் மற்றும் சுதந்திர வர்த்தக வலயத்தில் இருப்பவை உட்பட சகல பிரதான தொழிற்துறை கூட்டுத்தாபனங்களையும் பொதுச்சொத்தாக ஜனநாயக கட்டுப்பாட்டில் இருப்பவையாக மாற்றப்பட வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
* இலவச மற்றும் உயர்தரம் வாய்ந்த கல்வி ஏற்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய கல்விமுறையானது சமத்துவமின்மையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்க மற்றும் கிராமப்புற பகுதிகளிலுள்ள சிறுவர்கள் வசதிகள் பற்றாக்குறையான, ஆசிரியர்கள் பற்றாக்குறையான பொது பாடசாலைகளில் படிக்கத் தள்ளப்பட்டுள்ள அதே சமயம், செல்வந்தர்களின் மகன்மாரும் மகள்மாரும் நவீன வசதிகள், வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை தனியார் பாடசாலைகளில் அனுபவிக்கின்றனர். தமது கல்வியை முன்னெடுக்க விரும்பும் சகலருக்கும் பல்கலைக்கழக மட்டம் வரை இலவச மற்றும் உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்க அரசாங்கப் பாடசாலை முறையை பரந்தளவில் விரிவுபடுத்த வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. தற்போதுள்ள பாடசாலைகள் விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள், கணனி வசதிகள் மற்றும் நவீன ஒலி-ஒளி உபகரணங்கள், அதே போல் விளையாட்டு மற்றும் கலைத்துறை நடவடிக்கைகளுக்கான வசதிகளுடன் தரம் உயர்த்தப்படல் வேண்டும்.
* பூரணமான சுகாதார பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்
டெங்கு, மலேரியா, அம்மை மற்றும் காசநோய் போன்ற தடுக்கக்கூடிய நோய்களால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர். புதிய நோய்களாக H1N1 மற்றும் பறவைக் காய்ச்சலும் பரவுகின்றன. சமாளித்துக்கொள்ளக் கூடியவர்கள் தனியார் வைத்தியர்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களை நாடும் அதே வேளை, வெகுஜனங்கள் மேலும் மேலும் நிதிப் பற்றாக்குறை நிலவும் பொது சுகாதார முறையிலேயே தங்கியிருக்கின்றனர். இலவசமான பூரணமான உயர்ந்த தரத்திலான சுகாதார பராமரிப்பை வழங்க நல்ல வசதிகள், தக்க ஊழியர்களை கொண்ட அரசாங்க ஆஸ்பத்திரிகளை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்ய வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.
* சகலருக்கும் பொருத்தமான வீடமைப்பு வசதிகள் கட்டியெழுப்படவேண்டும்
பல குடும்பங்கள் குழாய் நீர், மின்சாரம் மற்றும் தக்க மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தரங்குறைந்த வீடுகளில் வாழ்வதோடு உரிமையாளர்களின் வாடகை அதிகரிப்பு மற்றும் சட்டப்படி வெளியேற்றும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். சகலருக்கும் பொருத்தமான தங்குமிடங்களை வழங்குவதற்கு சகல அத்தியாவசிய வசதிகளும் உள்ளடக்கிய, செலவைத் தாங்கக்கூடிய, வாடகை கட்டுப்பாட்டுடனான பொது வீடமைப்பை கட்டெயெழுப்ப சோ.ச.க. பரிந்துரைக்கின்றது.
* பெண் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்
குறைந்த ஊதியத்துடனான தொழில் மற்றும் வீட்டு வேலைப்பளு ஆகிய இரட்டைச் சுமைகளை பெண் தொழிலாளர்கள் தாங்கிக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஆடைத் தொழிற்சாலைகளில், தேயிலை கொழுந்து பறிப்பதில், இறப்பர் மரம் கீறுவதில் மற்றும் ஏனைய விவசாயத் தொழில்களில் மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். பூகோள பொருளாதார நெருக்கடியால் பத்தாயிரக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைப் பெண் தொழிலாளர்கள் தொழிலை இழக்கத் தள்ளப்பட்டதோடு பொருளாதார பின்னடைவானது மத்திய கிழக்கையும் தாக்கிய நிலையில் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக அல்லது ஊழிய வேலைகளைச் செய்து பெற்ற வருமானத்தையும் தொழிலையும் இழக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இலவச மற்றும் உயர்ந்த தரத்திலான சிறுவர் பராமரிப்பு மற்றும் முழு சம்பளத்துடனான கர்ப்ப கால விடுமுறை உட்பட பெண் தொழிலாளர்களுக்குச் சம சம்பளம் மற்றும் நிலைமைகள் வழங்கப்படுவதை சோசலிச சமத்துவக் கட்சி பாதுகாக்க போராடுகிறது. திருமண சட்டங்கள் உட்பட பால் பாகுபாட்டை சட்ட விரோதமாக்க நாம் அழைப்பு விடுக்கின்றோம். கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதாக ஆக்கப்படுவதோடு சகலருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும். ஆண்களும் பெண்களுமாக தமது திறமைகளையும் ஆளுமைகளையும் முழுமையாக மேம்படுத்திக்கொள்ளும் ஒரு அறிவுபூர்வமான கலாச்சார சூழ்நிலையை முன்நிலைப்படுத்துவதற்காவும் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.
* சிறு விவசாயிகளுக்கு உதவிகள் அளிக்கப்பட வேண்டும்
நிலப் பற்றாக்குறை பெரும்பாலான சிறு விவசாயிகளை துன்பத்துக்குள்ளாக்கியுள்ளதோடு இந்தப் பிரச்சினை உள்நாட்டு யுத்தத்தை தூண்டுவதிலும் குறிப்பிடத்தக்க பாத்திரம் ஆற்றியுள்ளது. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் வடக்கில் வன்னிப் பிரதேசத்திலும் மற்றும் கிழக்கிலும் தமிழர்கள் பெருவாரியாக வாழும் பிரதேசங்களில் நிலமற்ற சிங்கள வறியவர்களை காலனிகளை ஏற்படுத்தி வேண்டுமென்றே குடியேற்றின --இது இனவாத பதட்ட நிலைமைகளுக்கு தூபமிட்டது. யுத்தத்தின் முடிவுடன் இத்தகைய கொள்கைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நிலமற்ற விவசாயிகளுக்கு இனப் பாகுபாடின்றி அரச நிலங்களை பகிர்ந்தளிக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. வறிய விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பெற்ற சகல பழைய கடன்களும் இரத்துச் செய்யப்படும் அதே வேளை, செலுத்தக்கூடிய நிபந்தனைகளின் படி கடன்கள், விவசாய உபகரணங்கள், உரம் மற்றும் மருந்துகள், மற்றும் மீனவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக
இலங்கையில் கால்நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தம், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் ஒரு அடிப்படைக் கொள்கையை நிரூபித்துள்ளது: முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவம் அடிப்படை ஜனநாயகக் கடமைகளை இட்டு நிரப்ப இயற்கையிலேயே இலாயக்கற்றது என்பதே அது. சமுதாயத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதற்கான போராட்டத்தில் தம்மைச் சூழ ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டிக்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே, சகலருக்கும் சமாதானம் மற்றும் உண்மையான ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்ய முடியும். வெகுஜனங்களை முதலாளித்துவத்துடன் கட்டிப்போடும் சகல அரசியல் சக்திகளிடம் இருந்தும் அடிப்படையில் பிரிந்து செல்வதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.
முதலாளித்துவக் கட்சிகள் இராஜபக்ஷ அல்லது பொன்சேகாவுக்கு பின்னால் அணிதிரண்டிருப்பது போல், இலங்கை முதலாளித்துவம் இதற்கு முன்னர் இந்தளவு அரசியல் ரீதியில் அம்பலமாகியிருக்கவில்லை. ல.ச.ச.க. மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய முன்னாள் இடது கட்சிகள், உறுதியாக இராஜபக்ஷவின் பின்னால் நிற்கும் அதே வேளை, ஜே.வி.பி. யின் சிங்கள பேரினவாதம், அந்தக் கட்சி வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் நிறைவாக அம்பலத்துக்கு வந்துள்ளது. மே மாதம் வரை புலிகளின் ஊதுகுழலாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இரு யுத்தக் குற்றவாளிகளில் யார் அவர்கள் வழங்கும் ஆதரவுக்கு பிரதியுபகாரம் செய்வார் எனத் தெரிந்துகொள்ள கேலிக்கூத்தான பின்னறைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது.
விக்கிரமபாகு கருணாரட்னவை நிறுத்தியுள்ள நவ சம சமாஜக் கட்சி மற்றும் சிறிதுங்க ஜெயசூரியவை நிறுத்தியுள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் பக்கமே எவ்வாறெனினும் மிகவும் நச்சுத்தனமான பாத்திரம் இட்டுநிரப்பப்பட்டுள்ளது. அவர்கள் யுத்தத்தின் எதிரிகளாகவும் சோசலிசத்தின் ஆதரவாளர்களாகவும் காட்டிக்கொள்கின்றனர். ஆனால், பிரதான முதலாளித்துவ கட்சிகளுடன் சந்தர்ப்பவாதிகளாக திறமையாகச் செயற்படுபவர்களாக அவர்களின் நீண்டகால இழிந்த வரலாற்றால் காட்டப்பட்டுள்ளது போல், அவர்கள் சுயாதீன தொழிலாள வர்க்க அரசியலை முழுமையாக எதிர்ப்பவர்களாகும்.
இந்த ஆண்டு முற்பகுதியில் "சுதந்திரத்துக்கான மேடை" என்ற யூ.என்.பி. யின் போலி மேடையில் கூட்டுச் சேர்ந்துகொண்ட பின்னர், நவ சம சமாஜ மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் இப்போது பொன்சேகாவும் இராஜபக்ஷவும் முதல் சுற்றில் வெற்றிபெறுவதை தடுப்பதை இலக்காகக் கொண்டே போட்டியிடுவதாக தெரிவிக்கின்றனர். முன்னைய ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் செய்தது போல், தேர்தல் இரண்டாவது சுற்றுக்குச் செல்லவேண்டுமெனில், ஏதாவதொரு முதலாளித்துவ வேட்பாளரை "குறைந்த கெடுதி கொண்டவர்" என அங்கீகரிக்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் பற்றிய ஊனமுற்ற இந்த முன்மொழிவுகள், இந்த அரசியல் ஸ்தாபனத்துடன் முழுமையாக உடன்படுவதோடு, வெகுஜன அதிருப்தியை தணிப்பதற்கான ஒரு தீர்க்கமான பாதுகாப்பு வால்வு ஆக முதலாளித்துவத்துக்கு சேவை செய்கின்றன.
தெற்காசியாவில் சோசலிசத்துக்கான போராட்டம்
இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ளடங்கியுள்ள அனைத்துலக சோசலிசத்தின் உயர்ந்த கொள்கைகளே சோசலிச சமத்துவக் கட்சியின் அடித்தளமாகும்.
லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி 1917 ரஷ்ய புரட்சிக்கு தலைமை கொடுத்த வேலைத்திட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாக்கின்றது: அந்தப் புரட்சி முதலாளித்துவம் மற்றும் வர்க்க ஒடுக்குமுறையில் இருந்து மனிதகுலத்தை விடுவிப்பதற்கான உலக சோசலிசப் புரட்சியாகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக போராடுவதற்கு ட்ரொட்ஸ்கி 1938ல் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். சோவியத் ஒன்றியத்தில் அரசியல் அதிகாரத்தை அபகரித்துக்கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம், தோன்றிவரும் பழமைவாத ஆளும் கும்பல் என்றவகையில், தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள "தனி நாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிச விரோத முன்நோக்கை அபிவிருத்தி செய்தது. 1991ல் ஸ்ராலினிஸ்டுகள் சோசலிசத்தை கைவிட்டு, சோவியத் ஒன்றியத்தை கலைத்ததுடன் முதலாளித்துவத்தை பதிலீடு செய்த போது, ஸ்ராலினிசத்துக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எதிர்ப்பு இறுதியாக சரியென மெய்ப்பித்துக்காட்டப்பட்டது.
சோசலிச அனைத்துலகவாதத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்த, பாட்டாளிகளின் தூரதிருஷ்டியுள்ள பிரதிநிதிகளின் மரபுரிமையை சோசலிச சமத்துவக் கட்சி தனது அத்திவாரமாகக் கொண்டுள்ளது. 1940களில், தெற்காசிய தொழிலாள வர்க்கத்தினுள் ஆழமாக வேரூன்றிய இந்திய போல்ஷவிக் லெனினிச கட்சியின் (பி.எல்.பி.ஐ.) ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இந்தியத் துணைக் கண்டத்தில் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச முன்நோக்கை அபிவிருத்தி செய்தனர். அதைத் தொடர்ந்து 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி முதலாளித்துவ கூட்டரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டமை, சோசலிசத்துக்கும் இலங்கை பாட்டாளிகளின் ஐக்கியத்துக்கும் எதிரான ஒரு பெரும் அடியாகும்.
லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான நேரடியான அரசியல் போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு தசாப்தங்களாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சோசலிச சமத்துவக் கட்சியும் முதலாளித்துவ இனவாதத்தை சளைக்காமல் எதிர்த்துப் போராடிவந்துள்ளன. சிங்களத்தை தேசிய மொழியாக்கிய மற்றும் பௌத்தத்தை அரச மதமாக்கிய அரசியலமைப்புக்கும், ஜே.வி.பி. யின் போலி மக்கள்வாத சிங்களப் பேரினவாதத்துக்கும் மற்றும் புலிகளின் பிரிவினைவாதத்துக்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி போராடி வந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை இடைவிடாது எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்க கோரிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் வர்க்கப் போராட்டம் புத்துயிர் பெறும் நிலையில், இத்தகைய போராட்டங்களின் படிப்பினைகள் தொழிலாள வர்க்கத்துக்கு அத்தியாவசியமான அரசியல் வழிகாட்டியாக அமையும்.
எங்களது முன்நோக்கையும் வேலைத்திட்டத்தையும் ஆதரிக்கும் அனைவரையும் எமது தேர்தல் பிரச்சாரத்தில் நடைமுறையில் பங்குபற்றுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது வேட்பாளரை பிரச்சாரப்படுத்தவும் கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் உதவுவதோடு, எமது தேர்தல் இலக்கியங்களை விநியோகிக்கவும் கலந்துரையாடவும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் சர்வதேச பிரசுரமான உலக சோசலிச வலைத் தளத்துக்கு பரந்தளவில் வாசகர்களை ஊக்குவிக்கவும் உதவுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
உலக சோசலிச வலைத்தளத்திலிருந்து
0 comments :
Post a Comment