Thursday, January 7, 2010

யாழ் உயர் பாதுகாப்பு வலயங்களில் 1,792 பேர் நேற்று மீள்குடியமர்வு.

யாழ்ப்பாணம் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் 1,792 பேர் நேற்று (06) மீளக் குடியமர்த்தப்பட்டனர். தெல்லிப்பளை, கோப்பாய், உடுவில் ஆகிய உயர் பாதுகாப்பு வலய பகுதிகளிலேயே மக்கள் மீளக்குடியேறியதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

மீளக்குடியேறியவர்களுக்கு ஒவ்வொரு சைக்கிள் வழங்கப்பட்டதுடன் ஏனைய நிவாரண உபயோகப் பொருள்கள் மற்றும் நிதியுதவி என்பனவும் வழங்கப்பட்டதாக அரச அதிபர் கூறினார்.

ஏற்கனவே மீளக் குடியமர்ந்துள்ளவர்களும் இந்த நிவாரண உதவிகளுக்கு உரித்துடையவர்களாக உள்வாங்கப்பட்டதாகவும் அரச அதிபர் கூறினார்.

உயர் பாதுகாப்பு வலயங்களில் மீளக்குடியமரவென 882 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 509 குடும்பங்களே நேற்று மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன.

உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நியமிக்கப்பட்ட குழு, முதற் கட்டமாக 882 குடும்பங்களைப் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, யாழ் அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் ஏற்கனவே மீளக்குடியேற்றத் திட்டத்தின்கீழ் உள்ளடக்கி அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகின்றது. அதேநேரம் இங்கு வாழும் மக்களின் போக்குவரத்து கருதி பஸ் சேவைகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் கூறினார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com