இலங்கை வந்து திரும்பிய 10 தமிழ்நாட்டுத் தமிழர்களை கைது செய்ய தனிப்படை
இலங்கை வந்து போராடிவிட்டு தமிழகம் திரும்பிய தமிழ்நாட்டுத் தமிழர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில், 1990 செப்டம்பர் 22ம் தேதி குண்டு வைத்தது தொடர்பாக, கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கரூர் மாவட்டம் சின்னக்குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் (40) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், குண்டு வைத்த சில ஆண்டுகளில் தமிழர் பாசறை தலைவர் இளங்கோ தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு சென்றதாகவும், அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக போரிட்டதாகவும், 2008ம் ஆண்டு தமிழகம் திரும்பி விட்டதாகவும் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து இளங்கோ உட்பட 10 பேர் தமிழகத்தில் தலைமறைவாக இருக்கலாம் என்று கியூ பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அவர்களை பிடிக்க ஐஜி சங்கர் ஜுவால் உத்தரவின் பேரில் எஸ்பி அசோக்குமார், கூடுதல் எஸ்பி சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் தமிழகம் முழுவதும் அவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் ஏதாவது அசம்பாவிதச் சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க உளவுப் பிரிவு போலீசாரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
மேலும், அண்டை மாநிலங்களில் உள்ள நக்சலைட்டுகளுடன் அவர்கள் சேராமல் இருக்க ஆந்திரா, கர்நாடகா மாநில போலீசாருடனும் கியூ பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
0 comments :
Post a Comment