Sunday, January 31, 2010

தமிழகத்தில் புலிகள் : 100,000 டாலர் மதிப்புள்ள அரை கிலொ ஹெராயின்

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவியதற்கான வலுவான ஆதாரங்களைத் தமிழகப் போலிசார் கைப்பற்றியிருக்கின்றனர். அண்மையில் கைதான நான்கு சந்தேக நபர்களிடமிருந்து விடுதலைப் புலிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் பல்வேறு ஆயுதங்கள் சிக்கியதைத் தொடர்ந்து இந்தியாவில் தளம் அமைக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தமிழகத்தில் ஊடுருவியதாகக் கருதப்படும் விடுதலைப் புலிகள் இந்தியாவில் வன்முறை, தாக்குதல் போன்ற வற்றில் ஈடுபடலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து துப்பாக்கிக் குண்டுகள், துணைக்கோள உதவியுடன் பயன்படுத்தப்படும் தொலைபேசி, போதைப் பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

இதில் மீனவரான ஜீவா எனும் செல்வகுமார் என்பவரிடமிருந்து எட்டு லட்சம் இந்திய ரூபாய் நோட்டுகள், உலகச்சந்தையில் 100,000 டாலர் மதிப்புள்ள அரை கிலொ ஹெராயின் போன்ற பொருட்களை போலிசார் பறிமுதல் செய்தனர். இவற்றில் துணைக் கோளம் வழி செயல்படும் தொலை பேசி, வெடிகுண்டுகள் போன்றவை விடுதலைப்புலிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஆயுதங்களாகும்.

போலிசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கடத்தல் தொழில் மூலம் விடுதலைப் புலிகளின் கடல் பிரிவைச் சேர்ந்த சில தளபதிகளுக்கு இவர் நெருக்கமாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

போலிசிடம் சிக்கிய 39 வயது செல்வகுமார், கடந்த டிசம்பர் 24ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் நடுக் கடலிலிருந்து தம்முடைய படகுக்கு மாற்றி கரைக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். தம்பதியர் இருவரும் ஒரு காரில் ஏறிச் சென்று விட்டனர். ஆனால் அவர்கள் இருக்கும் இடம் செல்வகுமாருக்குத் தெரியவில்லை. செல்வகுமாரை விடுதலைப் புலிகள் தங்களுடைய முக்கிய ஏஜண்டுகளில் ஒருவராக அங்கீகரித்திருக்கலாம் என்பதும் போலிசாரின் சந்தேகம்.

விசாரணையில் என்னைப் போன்று மேலும் சிலர் இருக்கின்றனர் என்று செல்வகுமார் தெரிவித்தார். இவருடைய ஒப்புதல் வாக்குமூலம், இந்தியாவிலும் இந்திய முக்கியத் தலைவர்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அபாயமும் அதிகரித்துள்ளது.

மேலும் தங்களுடைய இயக்கம் அழிவதற்கு காரணமான இந்தியாவின் முக்கியத்தலைவர்களையும் அவர்கள் குறி வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் இந்திய ஆளும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலொசகர் எம்கே. நாராயணன் ஆகிய தலைவர்களும் அவர்களில் அடங்குவர்.

கடந்த காலங்களில் இந்தியாவைத் துரோகி என்று விடுதலைப் புலிகளின் தரப்பில் முத்திரை குத்தப்பட்டிருந்தது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவாகச் செயல் பட்ட தமிழக முதல்வர் கருணாநிதி மீது அவர்கள் தங்களுடைய ஆவேசத்தைக் காட்டியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் பற்றிய புதிய விவரங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் ஊடுருவிய புலிகளைக் கண்டறிவதற்காக, அனைத்து அகதிகள் முகாம், தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் போலிசார் தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். தமிழகக் கடலொரப் பகுதிகளில் உள்ள சோதனை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகும் புலிகள் மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என்று இலங்கை அரசு சந்தேகித்து வருகிறது. கடந்த 1991ம் ஆண்டில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது.

No comments:

Post a Comment