Thursday, December 31, 2009

சபாஷ் சரியான போட்டி. மகின்த ராஜபக்ஷ Vs சரத் பொன்சேகா. – யஸியா வாஸித்-

அது கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் இரவுப் புகையிரதம். உட்கார்ந்து கொண்டு பலபேர், நின்று கொண்டு சிலபேர். அந்த கோணர் சீட்டில் ஒரு வாட்டசாட்டமான இளைஞர் தூங்கி வழிந்து கொண்டு இருக்கின்றார். மற்றவர்கள் வளைத்து இருந்து கொண்டு இன்றைய அரசியல் பேசுகின்றார்கள். றெயின் கண்டி, பேராதனையை தாண்டியதும் கோணர் சீட்காறர் கண் விழித்துக் கொள்கின்றார்.

புகையிரதம் இப்போது நாவலப்பிட்டியை தாண்டுகின்றது. கதைத்துக் கொண்டிருந்த ஒருவர் அருகிலிருந்த ஒருவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கின்றார். ஒருவரிடமும் தண்ணீர் இல்லை. அந்த வாட்டசாட்டமான இளைஞர் திடீரென எழுந்து, சீட்டுக்கு மேல் இருந்த தனது பேக்கை திறந்து, அதற்குள்ளிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து, தண்ணீர் கேட்டவருக்கு கொடுக்கின்றார். பின்னர் அவர் தன்பாட்டுக்கு ஜன்னல் வழியாக புதினம் பார்த்துக்கொண்டும், மற்றய பிரயாணிகள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் பிரயாணம் தொடர்கின்றது. ஆனால்

அவர் பேசவே இல்லை. அடிக்கடி அனைவரையும் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துக் கொள்கின்றார். அவ்விடத்தில் இருந்த ஒருவர் திடீரென அவரைப்பார்த்து, உங்கள் பெயர் என்ன, எங்கு போகின்றீர்கள் எனக் கேட்டதும், ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு பேனாவையும், பேப்பரையும் கையில் எடுத்து சிங்களத்தில் எழுதத் தொடங்குகின்றார்.

அவர் ஒரு இராணுவவீரர். இராணுவத்தில் 17 வருடமாக வேலைசெய்கின்றாராம். 10 வருடத்துக்குமுன் அலிமன்கடவில் நடந்த ஒரு ஒப்பரேஷனில், விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில், துப்பாக்கி குண்டொன்று நெற்றிப்பொட்டுக்குள்ளால் சென்று மண்டையோட்டுக்குள் தங்கிவிட்டதாம். அதனால் பேசும் சக்தி பிளஸ் கேட்கும் சக்தி இரண்டையும் முற்றாக இழந்துவிட்டாராம். தற்போது அங்கவீனமுற்ற, உறவினரை இழந்த தமிழ் உறவுகளுக்கு ஒரு முகாமில் இராணுவ ஆசிரியராக தொழில் புரிகின்றாராம். யார் தன்னை சுட்டார்களோ, யார் தனது பேசும் சக்தி பிளஸ் கேட்கும் சக்தியை பறித்தார்களோ அவர்களின் உறவுகளுக்கு உதவுகின்றாராம்.

இவர் மற்றவர்களின் வாயசைவின் மூலம் விடயங்களை புரிந்து கொள்கின்றார். அரசியலும் நன்றாகவே எழுதுகின்றார். மகின்த ராஜபக்ஷ பெமிலிதான் ஆட்சிக்கு வரவேண்டும் என அடித்துக் கூறுகின்றார். ஏன் அப்படி ? என்றதும். ஒரு துண்டுக்காகிதத்தில் குட்டிக்கதை ஒன்றையே எழுதிக் காட்டுகின்றார்.

ஒரு ஊருல ஒரு முதளை இருந்ததாம். அந்த முதளைக்கு குரங்கொன்றுடன் நட்பிருந்ததாம். அந்த குரங்குங்கு பல வருடங்களாக ஒரு ஆசையிருந்ததாம். ஆற்றின் மறுகரைக்கு போய், அங்கு என்ன இருக்கின்றது என பார்க்க வேண்டும் என்று. ஆனால் முதளைக்கோ அந்த குரங்கை கொன்று அதன் ஈரலை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று. ஒரு நாள் முதளை குரங்கிடம் உன்னை மறுகரைக்கு அழைத்துச் செல்கின்றேன் என் முதுகில் ஏறிக்கொள் என்றதும் குரங்கும், கள்ளம் கபடம் தெரியாமல் முதுகில் ஏறிக்கொண்டதாம். அப்படியே இருவரும் ஆற்றைக்கடந்து போய்க்கொண்டிருக்கும் போது, ஆற்றின் நடுவில் வைத்து முதளை தன் உள்ளக்கிடக்கையை சொல்லியுள்ளது. நான் உன்னைக் கொன்று உன் ஈரலை உண்ணப்போகின்றேன் என்றதாம். உடனே குரங்குக்கு பொறிதட்டி, இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே, நான் என் ஈரலை அக்கரையில் உள்ள மரத்தின் கொப்பில் அல்லவா வைத்துவிட்டு வந்து விட்டேன். வா திரும்பிப்போய் முதலில் அதை எடுத்துத் தருகின்றேன். அதை சாப்பிட்டுவிட்டு பின்னர் அக்கரைக்கு போகலாம் என்றதாம். முதளையாரும் இக்கதையை நம்பி குரங்கை கொண்டுபோய் மற்ற கரையில்விட்டு, எந்த மரத்தில் உன் ஈரல் இருக்கின்றது என்றாராம். குரங்கும் ஏதோ ஒரு மரத்தைக்காட்டி, அதில் வசதியாக ஏறி இருந்துகொண்டு, அட மட முதளையாரே, எந்த மடையனால் ஈரலை களட்டி வைக்க முடியும். நீ ஒரு முட்டாள் என முதளையை திட்டி அனுப்பிவிட்டதாம்.

இப்படி ஒரு ஐந்நறிவு குரங்கே, இன்னொரு ஐந்தறிவு மிருகத்தை ஏமாற்றி இருக்கின்றது. இப்படி நிலைமைகள் இருக்க, இந்த ஆறறிவு பச்சைக் கட்சியினர் இப்போது என்ன புதுக்கதை கூறுகின்றார்கள். அவர் ஜனாதிபதியாக வருவாராம். வந்து, அடுத்த நிமிடமே பதவியை துறந்து, மற்றவரிடம் கையளிப்பாராம். அப்புறம் மற்றவர் பதவிக்கு வருவாராம். இதை மொத்த சிறிலங்கனும் நம்ப வேண்டுமாம். என்ன ? சிறிலங்கா வாக்காளர்கள் இன்னும் மரத்துக்கு மரம் தாவும் நிலையிலா இருக்கின்றனர் என ஒரு போடு போட்டார்.

ஆனால், மொனராகலை சியம்பளாந்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவரும், அப்பகுதியில் பெயர் சொல்லக்கூடிய நீலக்கட்சிக்காறருமான ஒருவர் இன்னொரு கதை சொல்கின்றார். நான் கடந்த 20 வருடகாலமாக இவர்களுக்குத்தான் சப்போட் பண்ணினேன். இம்முறை இராணுவத்தளபதிக்குத்தான் நம்ம ஓட்டு என்கின்றார். எய் மேவாகே தீரணய கத்தே ( ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தீர்கள் ) என்றதும். இவங்க நன்றாகத்தான் வேலை செய்கின்றனர். நாட்டில் அபிவிருத்திகள் நன்றாகத்தான் நடக்கின்றன. நாடு அபிவிருத்தியை நோக்கி போய்க் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் எங்கேயோ ஒரு அகம்பாவம் தெரிகின்றது. அதற்கு ஒரு மூக்கணாங்கயிறு போட வேண்டும். போட்டால்தான், நாட்டுக்கு நல்லது. நாட்டு மக்களுக்கும் நல்லது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அபிவிருத்தியை தடுக்க முடியாதே. அது உலகப்பொருளாதார வளர்ச்சிக்கேற்ப முண்டு கொடுக்கத்தானே வேண்டும் என்கின்றார்.

இப்படி நாடு பூராவும் ஏட்டிக்குப் போட்டியாகவே மேடைகள் களை கட்டுகின்றது. ஆனால் மக்கள் அடக்கியே வாசிக்கின்றார்கள். ஒன்று ஓடர் போட்டது. மற்றது ஓடரை கெரியவுட் பண்ணியது. ஓடர் போட்டவர் நல்லவரா ? ஓடரை கெரியவுட் பண்ணியவர் வல்லவரா ? மக்களுக்கு மூச்சு முட்டுகின்றது. முடிவுகள் எடுக்க சிரமப்படுகின்றாரகள். ஹோட்டல்கள், சலூன்களில் “இங்கு அரசியல் பேசவேண்டாம் பிளீஸ்” என அட்டைகள் தமிழிலும், சிங்களத்திலும் தொங்குகின்றது.

ஆனால் நிறையப்படித்த, விடயம் புரிந்த பலரும் ஆளும் கட்சி, மீண்டும் ஒரு தரம்தான் ஆளட்டுமே என மனம் திறக்கின்றார்கள். குடும்ப ஆட்சிதான் என்றாலும், எப்படி, எப்படி, எங்கெங்கு ஆப்பு வைக்க வேண்டுமோ, ஆப்பு வைத்து, 30 வருட பொருறாதார சீரழிவை நிவிர்த்தி செய்தவர்களாச்சே. நாட்டையும் ஒரு சிங்கப்பூராகவோ, ஹொங்கொங் ஆகவோ மாற்றுவார்கள் அது நிச்சயம் என அடித்துச் சொல்கின்றார்கள்.

இப்போது பிரச்சனைகள் எல்லாம் அரசியல் ஆய்வாளர்களுக்கும், சிறுபான்மை கட்சிக்காறர்களுக்கும்தான். ஆம் எப்போதும் பந்து அரசிடம்தான் இருக்கும். நீ முதலில் வீசு பந்தை நாங்கள் முடிவு எடுப்போம் என, புலிகளை மனதில் வைத்துக் கொண்டு அரசை மிரட்டுவார்கள். ஆனால் இம்முறை பந்தை மே 17ல், ஆய்வாளர்களையும், சிறுபான்மைக் கட்சிக்காறர்களையும் நோக்கி ஆளும் கட்சி வீசிவிட்டது.

இப்போது பந்தை, விக்கட் கீப்பரை நோக்கி வீசுவதா அல்லது அம்பயரின் மூஞ்சை நோக்கி வீசுவதா எனத் தெரியாமல் மொத்த போளர்களும் முழி முழி என முழித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 65 வீதமான மக்கள் மிக மிக தெளிவாகவே இருக்கின்றார்கள். கொழும்பில் இருந்து ஓடர் போடப்பட்டதால்தான், முள்ளி வாய்க்காலில், அது கெரியவுட் பண்ணப்பட்டது. ஓடர் போடப்படவில்லையானால், அது அங்கு கெரியவுட் பண்ணப்பட்டிருக்காது. எனவே ஓடர் போட்டவர்தான் பெஸ்ட், அதை கெரியவுட் பண்ணியவர் ஒரு வேஸ்ட் என அளகாகவே விளக்கம் சொல்கின்றார்கள்.


31-12-2009

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com