Thursday, December 3, 2009

சர்வதேச ஊனமுற்றோர் தினம் (International Day of Disabled Persons) - புன்னியாமீன்

உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின் நிற்கக்கூடாது என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகும். ஊனமுற்றோர் எனும் போது இவர்கள் நோயாளிகளாக அல்லாமல் சமூதாயத்தில் நம்பிக்கைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுவதுடன் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகின் மக்கள் தொகையில் பத்து வீதத்தினர் அதாவது 65 கோடிப் மக்கள் ஊனமுற்றவர்கள் என உலக சுகாதார நிறுவகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 80 வீதத்தினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறாரில் 90 வீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை (2008) கூறுகிறது. ஊனமுற்ற நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலத்திலோ அல்லது குழந்தைப் பிறப்பின் போதோ பெற்றுள்ளனர்.

1981-ம் ஆண்டை "சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டா"க அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை, 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் திகதியை சர்வதேச ஊனமுற்றோர் தினமாகவும் அறிவித்தது. அன்று தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலக நாடுகளால் 'சர்வதேச ஊனமுற்றோர் தினம்" என அனுசரிக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது
. இந்தியாவில் தமிழ்நாட்டு அரசு 2009 ம் ஆண்டு முதல் சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3ம் திகதியை, சிறப்பு அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊனமுற்றோர், சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாட ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும்" என்று கேட்டிருந்தது.

பல நாடுகள், அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிந்து வருகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்த சிறப்புக் கருத்தரங்குகள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்கின்றன. மேலும் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு விளம்பரங்கள், பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இவற்றினூடாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊனம் என்பது, பொதுவான நிலையில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதையே குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் அல்லது பிறப்பிலேயே ஏற்படலாம்

ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாகக் காணப்படுவதினால்
, பாதிக்கப்பட்ட தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாகச் செயற்படவைக்க முடியும் என்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய நோக்கு ஊனத்துக்கான மருத்துவ மாதிரியை ஒத்தது. மேலும் இத்தகைய பார்வை ஊனம் தொடர்பில் மக்களுக்கும், அவர்களுடைய சூழல், சமூகம் என்பவற்றுக்குமான தொடர்புகளுக்கு வாய்ப்பினை அளிக்கக்கூடும். மனித உரிமைகள் அல்லது ஊனத்துக்கான சமூக மாதிரி என்பவற்றுடன் இவை தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.

இந்தியாவில் 2001 ஆண்டு கணிப்பீட்டின் படி மொத்த சனத்தொகையில் 2.31 சதவிகிதமானோர் ஊனமுற்றவர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. 2.19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்;. ஊனமுற்றோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும், உடல் திறன் குறைந்தோரில் 49 சதவிகிதத்தினர் படித்தவர்கள் என்றும், 34 சதவிகிதத்தினர் பணிபுரிபவர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2001 ஆண்டு Census India 2001 அறிக்கையின் படி இந்தியாவில் இயங்கும் திறன் (Movement) 28 %, பார்க்கும் திறன் (Seeing) 49%, கேட்கும் திறன் (Hearing) 6%, பேசும் திறன் (Speech) 7%, மூளைத் திறன் (Mental) 10% குறைந்தவர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு 2002 (National Sample Survey Organisation 2002) இல் ஊனமுற்றோர் குறித்து வெளியிட்டுள்ள தகவல்களின்படி இயங்கும் திறன் (Movement) 51%, பார்க்கும் திறன் (Seeing) 14%, கேட்கும் திறன் (Hearing) 15%, பேசும் திறன் (Speech) 10%, மூளைத் திறன் (Mental) 10%, குறைந்தவர் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவில் சமுதாய நீதி மற்றும் அதிகார அமைச்சின் ஊனமுற்றோர் நலப்பிரிவு
(The Disability Division in the Ministry of Social Justice & Empowerment), ஊனமுற்றோரின் அதிகாரங்களையும் உரிமைகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தெற்காசிய நாடுகளைப் பொருத்தவரையில் ஊனமுற்றோருக்கு பல்வேறு வசதிகள் வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் கீழ் சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை, சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச்சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொண்டதாகவே அமைய வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் உறுப்புரை 253 இல் யூனியன் பட்டியல் (மாநில அதிகாரப் பட்டியல்) இலக்கம் 13 இல் இந்திய அரசாங்கமானது, 'ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1995" (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995) என்ற சட்டத்தை இயற்றியது. ஊனமுற்றோருக்குச் சமஉரிமையைத் தருவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, உருவாக்குதலுக்கு ஊனமுற்றோரின் பங்களிப்பை உறுதி செய்வதுமே இச்சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டம் இந்தியாவின் அனைத்துப் மாநிலங்களிலும் (ஜம்மு - காஷ்மீர் நீங்கலாகப்) பரவியுள்ளது. ஐம்மு - காஷ்மீர் அரசாங்கம் 'ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1998 (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights & Full Participation) Act, 1998) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.

மேலும் ஆசியா பசிபிக் பகுதியில், ஊனமுற்றவர்களின் சமஉரிமை மற்றும் முழு பங்களிப்பு குறித்த அறிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. அத்துடன் எல்லோரும் இணைந்த தடைகளற்ற உரிமைகளை உடைய சமுதாயத்தை விரும்பும் பிவாக்கோ மில்லேனியம் ஃபிரேம்ஒர்க் (Biwako Millennium Framework) ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஊனமுற்றோரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் அல்லது அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாடு மார்ச் 30, 2007-இல் நடைபெற்றது; இந்தியா உலகநாடுகளின் ஒப்பந்தத்தை 01.10.2008 இல் ஏற்றுக்கொண்டது.

2008 சர்வதேச ஊனமுற்றவர்கள் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்த செய்தியில் 'ஊனமுற்றவர்களும், அவர்களின் நிறுவனங்களும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் 2008 இல் இத்தினம், சர்வதேச மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இடம் பெறுகிறது என்றும், இவ்விரு உலக தினங்களிலும் நம் அனைவருக்கும் மாண்பும் நீதியும் என்ற தலைப்பே கருப்பொருள் என்றும் குறிப்பிட்ட பான் கீ மூன் மிலேனிய வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் ஊனமுற்றோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டார்.

ஊனமென்பது முயற்சிகளுக்கு தடையாக அமைவதில்லை. முயற்சியுடைய பல ஊனமுற்றவர்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர். கல்வி, கலை, கலாசாரம் என்ற அடிப்படையில் இத்ததைய சாதனைகள் தொடர்கின்றன. அது மட்டுமல்ல ஊனமுற்றவர்கள் இன்று விளையாட்டுத் துறையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு வருகின்றார்கள். ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1960 முதல் நடைபெறுகிறது. உடல் ஊனமுற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியான இப்போட்டி கடைசியாக 2008ம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் 2012ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் தேசிய போட்டிகளும், சர்வதேச ரீதியில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே ஊனம் என்பதை ஒரு தடையாக பார்க்காமல் ஊனம் உள்ளவர்களையும் திறமைமிக்கவர்களாகவும், மனிதாபிமான நோக்குடனும் நோக்குவதும் சாலப் பொருத்தமானதாக இருக்கும். இத்தினத்தில் இத்தகைய உணர்வினை வளர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுவோமாக.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com