Sunday, December 20, 2009

மகிந்த சிந்தனையா? இராணுவச் சிந்தனையா? வெற்றிவாகைசூடும்! - தேவன். (கனடா)

'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' – காந்தி. உண்மையில் மேலே குறிப்பிட்ட வாக்கியம் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பொருந்தும். அதுவும் முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கே மிகவும் பொருந்தும். புலிகளுக்கெதிரான யுத்தம் இவருக்கு முகவரியை கொடுத்தது.கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையை அனைத்து வாழ்வியல் மட்டத்திலும் பாதித்திருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது பாராட்டுக்குரியது. இதற்கு கூட்டு இராணுவ முயற்சியும் உறுதியான அரசியல் தலைமையுமே காரணம். இந்த வெற்றியை யாரும் சொந்தம்கொண்டாட முடியாது.

கடந்த கால அரசாங்கங்களும் புலிகளுக்கெதிரான யுத்தத்தை மேற்கொண்டிருந்தன. ஆனால் மகிந்த அரசாங்கம் போன்று யாராலும் செயற்பட முடியாமல்போனது. யூ.என்.பி உள்நாட்டுப் போரை தனது பேரினவாதத்தை நிலைநாட்டவும், இலாபமீட்டும் தொழிலுக்காகவும் நடத்தியது. சந்திரிகா அரசாங்கம் புலிகளை வெற்றிகொள்ளும் வகையில் பல காத்திரமான நடவடிக்கைகளைக் மேற்கொண்டிருந்தபோதிலும் பல பிராந்திய சர்வதேச அரசியல் குறுக்கீடுகள் காரணமாக யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவர முடியவில்லை. அத்துடன் இராணுவமும் சுதந்திரமாக செயற்பாடமுடியாதபடி அரசியல் தலையீடுகள் இடம்பெற்றவந்தன.

வரலாறுகள் எப்படி இருந்தபோதிலும் பிளவுபடாத ஐக்கிய இலங்கையை பாதுகாப்பதற்காக சரத்பொன்சேகா மட்டுமல்லாது பல இராணுவத் தளபதிகள் இராணுவ வீரர்கள் போராடியிருக்கிறார்கள். உதாரணமாக 80களின் பிற்பகுதியில் 'ஒப்பிசேரன் லிபிரேச' னுக்கு தலைமை தாங்கிய இராணுவ தளபதி கொப்பே கடுவ வடமாராட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மட்டுமல்லாது அப்பிரதேச தமிழ் மக்களின் நற்பெயரையும் சம்பாதித்துக்கொண்டார்.

அவ்வேளையில் புலிகள் தமது கரும்புலி தற்கொலைப் போராட்டத்தை மில்லர் ஊடாக ஆரம்பித்து நெல்லியடி மகா வித்தியாலயத்தையும் சேதப்படுத்தி 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினரையும் கொன்றார்கள். அப்போதும்கூட சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கொப்பே கடுவ தவிர்த்துக்கொண்டார். பின்னாளில் புலிகள் கொப்பே கடுவாவை கொன்றொழித்தார்கள்.

ஆக பொதுமக்களின் அபிமானத்தை பெற்றெடுத்த இராணுவத் தளபதிகளே தேசத்தின் உயர் பதவிக்கு ஆசைப்படாமல் இருக்கும்போது பொன்சேகா மட்டும் அப்பதவிக்கு குறிவைப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதற்காக அவர்கூறும் காரணங்களும் விந்தையாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை, யுத்தத்தால் பாதிக்கப்ட்ட மக்கள் மீழ் குடியேற்றப்படவில்லை என குற்றச்சாட்டுகளை மகிந்த அரசாங்கத்தின் மீது அடுக்கிக்கொண்டே போகிறார்.

இதேமனிதர்தான் யுத்தம் முடிந்த கையோடு அவசர அவசரமான ஒரு இலட்சம் படையணியை இராணுவத்துக்கு திரட்ட இருந்தார். அத்துடன் பல படைமுகாம்களையும் வரிவாக்க திட்டங்கள் போட்டிருந்தார். நல்ல வேளையாக மகிந்த அரசாங்கம் விழித்துக்கொண்டதால் ஏற்படப்போகும் ஆபத்தை தவிர்த்துக்கொண்டது.

சிறுபான்மையினர் தொடர்பாக சரத்பொன்சேகா தெளிவான முடிவோடுதான் இருக்கிறார். இலங்கையானது சிங்கள மக்களுக்கே சொந்தம் என்றும் சிறுபான்மை இனமக்கள் இங்கு வாழலாம், ஆனால் உரிமை அது இது என்று அரசியல் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடாது என்று இனவாதத்துடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துவருகிறார்.

இத்தகைய கடும்போக்குவாத மனிதர் பல்லின தேசத்தின் தலைமைப் பதவிக்கு வந்தால் கலாசாரத்தை பின்னோக்கி நடகர்ததுவதாகவே அமையும். இராணுவத் தலைவர்கள் ஆட்சிபுரியும் தேசங்களில் நடைபெறும் அதிகார சீர்கேடுகளையும் வகுப்புவாத வன்முறைகளையும், ஜனநாயக மறுப்புக்களையும் கவனத்தில் எடுப்பதுடன் பாகிஸ்தான், பர்மா, பங்காளதேஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற, நடைபெறுகின்ற வரலாறுகளையும் ஒரு தடவைக்கு பல தடைவ சீர்தூக்கிப் பார்த்து இலங்கை பல்லின வாக்காளர்கள் செயற்படவேண்டும்.

அண்மையில் பாகிஸ்தான் ஊடக அமைச்சர் அந்நாட்டு நிலவரம்பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'மேற்கு நாடுகளின் சூழ்ச்சிக்கும் சுயநலத்துக்கும் அரசியலத் தலைமைகள் விலைபோனதாலும், உள்நாட்டு பிராந்திய நலன்களை கவனத்திலெடுக்காததாலும் இத்தேசத்தில் இரத்த ஆறு ஓடுவதாக' கூறியிருந்தார்.

ஆகவே இலங்கை வாக்காளப்பெருமக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உலக வரலாறுகளையும், அனுபவங்களையும் கவனத்தில் எடுத்து யுத்தப் பிரியர்களையும் கடும்போக்கவாதிகளையும், இனவாதிகளையும் தோற்கடிப்பதுடன் 'மகிந்த சிந்தனை' யை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதுடன் யுத்தத்துக்கு பின்னான இலங்கையை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வதுடன் வகுப்பலாதமற்ற, இனவாதமற்ற, அடிமைத்தனமற்ற புதிய யுகத்தை அடுத்த சந்ததிக்கு கையளிக்கும் வகையில் 'மகேசன் சிந்தனையே மக்கள் சிந்தனை' என்பதை மாற்றி 'மக்கள் சிந்தனையே மகேசன்' சிந்தனை என்பதினை உலகுக்கு உறுதிப்படுத்தவேண்டும்.

பொதுவாக ஒரு தேசத்தில் தேர்தல் நடக்கும்போது ஒரு அரசு அல்லது கட்சித் தலைவர்கள் தாம் என்ன செய்தவை என்ன செய்யப்போகின்றவை என்பதையே வாக்காளர்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்ப்பார்கள். நமது தேசத்தின் துர்ப்பாக்கியம் வெற்றிகொள்ளப்பட்ட யுத்தமே பேசு பொருளாக இருக்கிறது.

இலங்கையில் யுத்தத்தை சிறுபான்மை இனம்மீது திணித்தவர்கள் ஐ.தே.கட்சியும் தமிழ் சமூகத்தை ஏமாற்றி வந்த மிதவாதத் தலைமைகளுமே என்பது வரலாறு. புற்றுநோய் போல நீண்டகாலம் தொடர்ந்த யுத்தத்தை மகிந்த தலைமையிலான அரசாங்கம் முடிவுக்குக்கொண்டுவந்தது நன்றிக்குரிய விடையமாகும்.

அத்துடன் புலிகளின் அழிவின் பின் வடக்கு கிழக்கில் அனேமேதயக் கொலைகள், இனந்தெரியாதோர் கொலைகள் முடிவுக்கு வந்தமையையும் தமிழ் வாக்காளர்கள் கவனத்தில் எடுத்து புலிகளின் சிதைவில் புதுயுகம் என்பதா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 'மகிந்த சிந்தனையை' பலப்படுத்த முன்வரவேண்டும்.

பிரபாகரன் இறப்பதற்கு முன்பு இலங்கையில் நடைபெறும் தேர்தலில் பிரபாகரனே கிங்மேக்கர் என்று புலிவாலுகள் புகழாங்கிதம்கொள்வர். நடைபெறப்போகும் தேர்தலிலும் இறந்த பிரபாகரனே முக்கிய பாத்திரம் வகிக்கிறார். அதாவது வெல்ல முடியாத அணுகமுடியாத தேசியத் தலைவரை வெற்றி கொண்டது யார்?

எது எப்படி இருப்பினும் 'எல்லாம் சுபம்' என்பதுபோல கடந்த கால்நூற்றாண்டு 'துன்பியலை' துணிவுடன் மகிந்த சிந்தனை நான்கு வருடத்தில் முடிவுக்குக்கொண்டுவந்திருக்கிறது. மேலும் பல்வேறு விடையங்களை சாதித்திருக்கிறது. மகிந்த சிந்தனை – 2க்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிப்பதன் மூலம் யுத்தத்தின் பின்னான இலங்கையின் பல்லின சமூகத்தை ஏற்றத்தாழ்வின்றி கட்டியெடுப்பும் சந்தர்ப்பத்தை மகிந்தவுக்கு வழங்கவேண்டும்.

அழிவுகரமான தொடர் யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டது, மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணியாத தலைமை தேசவிடையத்தில் வளைந்துகொடுக்காத உறுதி, நீண்ட அரசியல் பாரம்பரியம், பிராந்திய – ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்லுறவு, இன – மத – மொழி பேதங்களுக்கு அப்பால் தேச உணர்வை வளர்த்தது, உள்நாட்டு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது, விவசாயம் - மீன் பிடி துறைகளுக்கு மறுவாழ்வித்தது என மகிந்த சிந்தனையின் சாதனைகள் ஏராளம் ஏராளம்.

அரசியல் ஆழுமையற்றவர், பன்முகத்தன்மை இல்லாதவர், கடும்போக்கானவர், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரானவர் என மோசமான பக்கங்களைக்கொண்டவர்தான் எதிரணியின் ஜனாதிபதி பொதுவேட்பாளர். 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்று இவரை வீட்டுக்கு அனுப்புவதே வளமான எதிர்காலம் இலங்கைவாழ் மக்களுக்கு கிடைக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com