உயிர்வாழும் உரிமை மறுக்கப்பட்ட மனிதனின் மகன் நான் : மனித உரிமை நாளில் சித்தார்த்தன்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி நேற்று மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் சிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்திருந்தனர். நிகழ்வில் தமிழாராச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அருகே மரநடுகை இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் பேசுகையில், வீரசிங்கம் மண்டபத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் இந்த மரம் நடுகை இடம்பெற்றுள்ளது. 1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி இடம்பெற்ற 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 36ம் ஆண்டு நினைவு தினத்திற்கு இன்னும் ஒருமாதகாலமே உள்ளது. இந்நிலையில் அன்றே மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அனைத்துமே தமிழ் மக்களுடைய அரசியல் மற்றும் மனித உரிமைகளை மீறி வந்திருக்கின்றன. அதன்காரணமாக ஆரம்பத்தில் சாத்வீக ரீதியிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்டமாக மாற்றம்பெற்றது.
ஆனால் துரதிஸ்டவசமாக மனித உரிமை மீறல்கள் என்ற விடயத்தில் போராட்ட இயக்கங்களான நாங்களே ஒவ்வொருவருடைய கருத்துச் சுதந்திரங்களையும், பேச்சு சுதந்திரங்களையும் மீறி நடந்திருக்கிறோம். இவ்விடயங்களில் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினாலும், பொதுவாக நாம் அனைவருமே மற்றையவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கத் தவறியுள்ளோம். இங்குள்ள யாவரும் ஒற்றுமை ஒற்றுமை என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஒற்றுமை என்று கூறிக்கொண்டு நாம் பழைய நிலையை நோக்கிச் செல்லமுடியாது. எனினும் ஒற்றுமையை நாமும் விரும்புகிறோம்.
வடகிழக்கில் ஜனநாயகம், பன்முகத்தன்மை என்பன நிச்சயமாக இருக்கவேண்டும். நான் ஒரு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட ஒரு தகப்பனின் மகன் என்ற ரீதியிலும், அதேபோல வாழ்வுரிமை மறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான எங்களுடைய தோழர்களின் அடிப்படையிலும் கூறுகிறேன், நாங்கள் மே 18க்குப் பிறகாவது தமிழர்களுக்குள்ளும், தமிழ்க் கட்சிகளுக்குள்ளும் ஒருவருக்கொருவர் மற்றைவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மற்றையவர்கள் தமது கருத்தினைக் கூறக்கூடிய சுதந்திரத்தையாவது அனுமதிக்க வேண்டும்.
இதேவேளை போராட்டத்தில் பங்குபற்றிய அல்லது ஆதரவளித்த எந்த ஒரு கட்சியும் மனிதஉரிமை மீறல்களில் தமக்குச் சம்பந்தமில்லையென்று கூறமுடியாது. அது மாத்திரமல்ல பொதுமக்கள்கூட சில சாராருடைய மனிதஉரிமை மீறல்களை கைகட்டி நின்று பார்த்தது மாத்திரமல்லாமல், அதற்கு ஆதரவும் அளித்திருக்கிறார்கள். இந்த நிலைகளில் மாற்றம் வந்தால்தான் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற்று மானத்துடன் வாழலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தினால் வந்த அழிவுகள், தமிழ்மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளால் பிரித்தாளப்பட்டமை என்பவற்றை எடுத்துவிளக்கும் வகையில் மிகவும் சிறந்த நிகழ்வாக சிறுவர்களின் நாட்டிய நாடகமொன்றும் இடம்பெற்றது. அடுத்ததாக வீரசிங்கம் மண்டபத்திலிருந்து யாழ். பஸ் நிலையம் வரையில் மனித உரிமையை வலியுறுத்தும் வகையிலான பேரணியொன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு ஆரியகுளக் கரையில் தீபங்கள் ஏற்றப்பட்டு மனித உரிமை நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment