Monday, December 14, 2009

தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுத விமானம் குறித்து தொடரும் சர்ச்சை!

வடகொரியாவில் இருந்து சிறிலங்காவுக்கு சென்று கொண்டிருந்தாக கூறப்பட்டு, தாய்லாந்தில் கைப்பற்றப்பட்ட ஆயுத விமானம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆயுதங்களுடன் பயணித்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் 35 தொன் ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த ஆயுத விமானத்துடன் கைது செய்யபப்ட்ட ஐந்து நபர்களை, நீதிமன்றுக்கு கொண்டு வந்த தாய்லாந்து அரசு அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியது.

இதன் போது, நிலத்துக்கு கீழ் எண்ணை உள்ளதா என அறிவதற்காக நிலத்தை குடையும் இயந்திரங்களும், அவற்றின் உதிரிப்பகங்களும் தமது விமானத்தில் ஏற்றபட்டிருந்ததாகவே தமக்கு தெரியும் எனவும் ஆயுதங்கள் இருப்பதாக தமக்கு தெரியாது எனவும் அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரிடம் கேட்கப்பட்ட போதும், குறித்த விமானம் சிறீலங்கா அல்லது பாகிஸ்த்தானுக்கு சென்று கொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் குறித்து தம்மால் எந்த பதிலும் வழங்கமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்காவுக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான வான் போக்குவரத்து ஒப்பந்தத்துக்கு இணங்கவே குறிப்பிட்ட விமானம், ஆயுதங்களுடன் வருவதாக அமெரிக்கா தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது.

மேலும் இந்த ஆயுதங்கள் அல்கைதாவினருக்கு சிறிலங்கா ஊடாக தருவிக்கப்பட இருந்ததா எனவும் அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் தொடர்ந்து டொன்மியூங் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment