Saturday, December 19, 2009

இராணுவ மயமாக்கலை நீக்கினால் தேர்தலில் விலகிக் கொள்வேன் : சிவாஜிலிங்கம்


வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் என தடுப்பு முகாம்களில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதம வேட்பாளர்கள் இருவரும் பகிரங்கமாக வாக்குறுதி தந்தால் நான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதில் இருந்து விலகிக் கொள்கின்றேன்" என ஜனாதிபதி வேட்பாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

தாம் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கும் பொருட்டு சிவாஜிலிங்கம், இன்று காலை 9.45 மணியளவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை யாழ்ப்பாணம் பஸ்தியான் விடுதியில் நடத்தினார். அச்சமயம் "தமிழ் மக்களின் வரலாற்றில் மிகவும் மோசமான பின்னடைவுகள், பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள முக்கியமான காலகட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் எம் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது கேள்விக்குரியாகவே உள்ளது. இதனையிட்டு பெரும் கருத்துக் கணிப்புகள் வெளிநாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் அதற்கு சம்பந்தரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதெனவும் ஓர் அபிப்பராயம் காணப்பட்டது. இந்நிலையில் நான் இந்தியா சென்ற வேளையில் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் எவரையும் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. கடந்த அறுபது வருடங்களாக நாம் பலராலும் ஏமாற்றப்பட்டுள்ளோம் இந்நிலைமை இனிமேலும் தொடரக் கூடாது எனவும் வலியுறுத்தினேன. இதனாலேயே எதிர்வரும் ஜனவரி 26ஆம் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com