பிக்குகளை கொன்றொழித்த கருணா அரசுடன் இருக்க முடியுமென்றால் எமக்கு ஏன் முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதை அடுத்து அரசாங்கம் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக பிரச்சாரம் செய்துவருவதாகவும் அக்கூற்று முற்றிலும் தவறானது எனவும் இன்று காலை ஜேவிபியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கான தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் அங்கு பேசுகையில், இங்கே உள்ள கூட்டைப் பற்றி பேசுகின்றார்கள். நாம் அங்கே உள்ள கூட்டைப்பற்றி பேசுவோம். அறுந்தலாவையில் 60 பிக்குமாரை கொன்றொழித்த புலிகளுக்கு தலைமை தாங்கியவரும், சரணடைந்த சுமார் 650 பொலிஸாரை அவர்களது கைகளாலேயே கிடங்குகளை தோண்டவைத்து, அக்கிடங்குகளுள்ளேயே அவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு வழங்கியவருமான கருணா அக்கூட்டில் இருக்க முடியுமென்றால் : பிக்குகளை கொன்றொழித்த கருணாவுடன் பிக்குகள் ஒன்றாக இருக்க முடியுமென்றால் : புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கின்றேன் என பகிரங்கமாக தெரிவித்திருந்த சந்திரசேகரன் அக்கூட்டில் இருக்க முடியுமென்றால் நாம் ஏன் இருக்க முடியாது? ஆனால் நாம் கூட்டில் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எமக்கும் கூட்டுக் கிடையாது. நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம். ஆவர் தேர்தல் முடிந்து 6 மாத காலத்தினுள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பார். அப்போது அங்கு ரணில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் அல்ல. பாராளுமன்றில் அதிக பலத்தை நிருபிக்கின்ற கட்சி ஆட்சியமைக்கும் அக்கட்சியின் ஒருவர் பிரதமராவார். எனவே நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதாக அர்த்தம் கொடுக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment