Tuesday, December 15, 2009

கோபன்ஹேகன் மாநாட்டில் இந்தியா திடீர் வெளிநடப்பு

கோபன்ஹேகனில் நடந்து வரும் புவிவெப்ப மாற்ற மாநாட்டில் 'பேசிக்' எனப்படும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பின்னர் இந்த நாடுகள் மீண்டும் கலந்து கொண்டன.

கியோட்டோ பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2வது உறுதியளிப்பு காலம் குறித்து கோபன்ஹேகன் மாநாட்டில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்து இந்த திடீர் வெளிநடப்பு மேற்கொள்ளப்பட்டது.

கியோட்டோ பிரகடனத்தின் 2வது உறுதியளிப்பு காலத்தில், வளர்ந்த நாடுகள் புகை மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகள் இது குறித்து விவாதம் நடத்துவதை தவிர்க்கப் பார்ப்பதால் வளரும் நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியக் குழுவின் சார்பில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பேசிக் குழுமத்தின் மற்ற தலைவர்கள் எழுந்து சென்று மாநாட்டின் தலைவரும், டென்மார்க் அதிபருமான கோனி ஹெட்கார்டை சந்தித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 2வது உறுதியளிப்பு காலத்தின் அம்சங்கள் குறித்து கோபன்ஹேகன் மாநாட்டில் முறையாக விவாதிக்கப்படாதது குறித்து 'பேசிக்' அமைப்பின் அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றார்.

இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இதுதொடர்பான விவாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பின்னர் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ரமேஷ் உள்ளிட்டோர் ஹெட்கார்டுடன் பேச்சு நடத்தினர். பின்னர் ரமேஷ் உள்ளிட்டோர் வெளியே வந்தபோது பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டதாக ரமேஷ் தெரிவித்தார்.

பிரச்சினை தீர்ந்ததா என்று ஜெய்ராம் ரமேஷிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படித்தான் நினைக்கிறேன். நான் மீண்டும் கூட்ட அரங்குக்கு செல்கிறேன் என்றார்.

இந்த குறுகிய கால வெளிநடப்பால் மாநாட்டில் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.

No comments:

Post a Comment