Wednesday, December 30, 2009

கம்பத்தில் வைகோ கைது

முல்லைப்பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கேரள மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை கண்டித்து கம்பத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கேரள மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையும் மீறி கேரள அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டம் இன்று நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து கம்பம் வ.ஊ.சி. திடலில் வைகோ தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடினார்கள். அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக சென்றார்கள். குமுளிகம்பம் மெட்டு மலைப் பாதைக்கு சென்று மறியலில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அங்கு தயாராக இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 5 தென் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆகியோர் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வேன்களில் ஏற்றிச் சென்றனர்.முன்னதாக வைகோ பேசுகையில், மத்திய அரசும், கேரள அரசும் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதாக குற்றஞ்சாட்டினார். பெரியார் அணை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழக அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அணைகள் பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றி இருக்கிறது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதனை மத்திய அரசு ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று வைகோகேள்வி எழுப்பினார்.கேரளாவுக்கு பொருளாதார தடையை ஏற்படுத்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment