Friday, December 11, 2009

யார் ஜனாதிபதியானாலும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமான உறவு தொடரும்.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்கா தனது தார்மீக கடமையைச் செய்துள்ளது.
இலங்கை வந்துள்ள இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் அமெரிக்காவின் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி செயலாளருமான ரொபேர்ட் பிளேக் அவர்கள் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்துவிட்டு கொழும்பில் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றை நாடாத்தினார்.

அங்கு பேசிய அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும், அவர் அமெரிக்காவில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அமரிக்கா எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாக செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா இலங்கையின் சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் மாற்றம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இன்னும் இலங்கையின் வர்த்தக பங்காளியாக திகழ்கிறது. அதேநேரம் கல்வி,விஞ்ஞானம் மற்றும் கலாசாரங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் வலுவாகவே உள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்வியின் மூலம் இலங்கையில் நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன என குறிப்பிட்ட அவர் இலங்கை மக்கள் இணக்கமான ஒரு தீர்வுக்காகவும் புனர்நிர்மாணத்திற்காகவும் உழைக்கவேண்டும் என கேட்டுள்ளார். ஊடக சுதந்திரம் உட்பட்ட அனைத்து சுதந்திரங்களும் இலங்கையில், பேணப்பட்டு மனித உரிமைக்காப்புகள் முன்னேறவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

இலங்கையில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தற்போது குறைந்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது யுத்தக்குற்றம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் அவர் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.

அதேநேரம், அமரிக்காவில் வசிக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைளும் எடுக்கப்படமாட்டாது எனத் தெரிவித்த அவர், உருத்திரகுமாரன் அமெரிக்காவில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment