யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை நிரந்தரமாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக குறித்த இடம்பெயர் மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
120000 இடம்பெயர் மக்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்கப்பட்டமை வரவேற்கத் தக்கது எனவும், நிபந்தனைகள் இன்றி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை நிபுணர் யொலென்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்.
15 நாட்களுக்கு வெளியே சென்று திரும்புவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்களை ஆதாரமாகக் காட்டி சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நிரந்தரமாக மக்களின் சுதந்திர இடம்நகர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தமது எதிர்காலம் குறித்து இடம்பெயர் மக்கள் சுதந்திரமான தீர்மானங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர் மக்களை எவ்வித தங்கு தடையுமின்றி பார்வையிடுவதற்கு மனிதாபிமான மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment