Thursday, December 24, 2009

உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் மீள்குடியேற்றம்.

ஜனாதிபதியின் சிரேட்ட ஆலோசகர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களின் துரித நடவடிக்கை.
போர் முடிவுற்றதும் வன்னிப் பகுதி இடைத்தங்கல் முகாம்களிலிருந்து இலட்சக் கணக்கான மக்களின் மீள்குடியேற்றமும் அவர்களுக்கான கட்டுப்பாடுத் தளர்வுகளும் துரிதமடையத் தொடங்கின. மக்கள் தத்தம் இடங்களில் குடியமரத் தொடங்கிவிட்டனர். வன்னிப் பகுதி தவிரவும் யாழ்ப்பாணப் பகுதியிலும் உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து குடிபெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் தனது அக்கறை மிகுந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றது.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து குடிபெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வசித்த தமிழ் மக்கள் மீளவும் குடியேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்குப் பின்பு கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களினால் வழிபடுத்தப்படுகின்றன.

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதனைத் தலைமைதாங்கி நடாத்துகின்ற ஜனாதிபதி அவர்களின் சிரேட்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 'அபிவிருத்திகள் மட்டுமல்ல அவற்றைப் பயன்படுத்தும் வகையிலும் பூரணமாக அனுபவிக்கும் வகையிலும் மக்கள் சுமுகச் சூழலுக்குள் வாழுதல் வேண்டும். அதற்கேற்றவாறு அவர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். இந்த வகையில் வன்னிப் பகுதி முகாம்களில் மட்டுமல்ல ஏனைய பாதுகாப்பு வலயங்கள், மக்களுக்கிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அவர்களுக்கான சுமூகவாழ்வுச் சூழல் ஏற்படுத்தப்படல் வேண்டும். இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிய மக்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அவர்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புதல் வேண்டும்' என்று குறிப்பிட்டதோடு உடனடியாக முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமாகிய திரு.கணேஷ் அவர்களுக்குப் பணிப்புரைகளை வழங்கியிருக்கின்றார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.கணேஷ் அவர்கள் இது சம்பந்தமாக நடாத்திய ஊடகவியலாளர் கலந்துரையாடலில் இதுபற்றிய விளக்கங்களைக் கொடுத்தார்.

யாழ்பாணத்தினுள்ளேயே 495 குடும்பங்களும் வன்னி, திருகோணமலை, மன்னார் போன்ற இடங்களில் 20,247 குடும்பங்களும் புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து 2,833 குடும்பங்களும் இந்த உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்தவை. வன்னிப் பகுதியிலிருந்து சுயமாக வெளியேறிய 1,344 குடும்பங்கள் இந்தப் பகுதிகளில் குடியேற்றப்படவளள்னர். இவற்றில் முதல்கட்டமாக 371 குடும்பங்களைச் சேர்ந்த 1,246 பேர் வலிகாமம் பகுதியின் தெல்லிப்பளை, கோப்பாய், உடுவில் ஆகிய இடங்களில் குடியேற்றப்படவுள்ளனர்.

இந்த மக்கள் குடியேறும்பொழுது 5,000 ரூபா பணம் அவர்களுக்கான கொடுப்பனவாகவும் யு.என்.எச்.சீ.ஆர் ஊடாக தற்காலிக வதிவிடங்களை அமைத்துக்கொள்ள 20,000 ரூபா பணமாகவும் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு மட்டுமல்லாமல் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஏற்கனவே வசிக்கின்ற குடும்பங்களுக்கும் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி மீள்குடியேற்றத்துக்கான உடனடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதியின் சிரேட்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். எஞ்சியுள்ள ஏனைய குடும்பங்களும் அடுத்தடுத்த கட்டங்களில் குடியேற்றப்படவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com