ஜனநாயகப் பயங்கரவாதம் தோற்கடிகப்படுமா?
புதிய பொலிஸ் மா அதிபர் எதிர்நோக்கும் ஜனாதிபதித் தேர்தல்: ஜனநாயகப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பாரா?
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஜனவரி 26ம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கா அறிவித்துள்ளார். புதிய பொலிஸ் மா அதிபராக அண்மையில் பதவியேற்றுள்ள மஹிந்த பாலசூரிய அவர்கள், இந்நாட்டில் தேர்தல் காலங்களில் நடைபெற்றுவரும் ஜனநாயகத்திற்கு விரோதமான வன்முறைகளை எல்லாம் எவ்வாறு கட்டுப்படுத்தி தோற்கடித்து நீதி யாகவும், சுதந்திரமாகவும் இத்தேர்தலை நடாத்தி முடிப்பார்? என்பதே இன்று அவருக்கும் எமக்கும் முன்னால் எழுந்துள்ள கேள்வியாகும்.
ஏனெனில், நாட்டு மக்கள் அனைவருக்கும் சிவில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஜனநாயக ரீதியான சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கும் பொலிஸ் திணைக்களமே பொறுப்பாக உள்ளது. ஆயினும் அவ்விரு விடயங்களும் ஒருசில பொலிஸ் அதிகாரிகளினால் சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டு வராததன் காரணமாக நாட்டு மக்களின் பார்வையில் நம்பிக்கையீனம் நிறைந்த கட்டமைப்பாக பொலிஸ் திணைக்களம் கருதப்பட்டு வருகின்றது.
பொலிஸ், தேர்தல் திணைக்களங்கள் என்பன தமது கடமைகளைச் சரியாக மேற்கொள்ள முடியாது போனமைக்கு அவை சுயாதீனமாக இயங்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை என்பதும் ஒரு பிரதானமான காரணமாகும்.
பொலிஸ் திணைக்களத்திலுள்ள ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் பந்தம் வாங்குதல், பாரபட்சம் காட்டுதல், அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகச் செயற்படுதல் போன்ற நடவடிக்கைகள் காரணமாகவே நாட்டு மக்கள் மத்தியில் பொலிஸ் திணைக்களம் தொடர்பான இவ்வாறான சந்தேகப் பார்வைகளும், நம்பிக்கையீனங்களும் நீண்டகாலமாக நீடித்து வருகின்றன.
பொலிஸாரின் பாரபட்சமான அல்லது பாராமுகமான நடவடிக்கைகள் காரணமாகவே கொலைகள், கொள்ளைகள், தாக்குதல்கள், கடத்தல்கள், போதைப் பொருள் விற்பனை, விபச்சாரம், சிறுவர் துஷ்பிரயோகம், வெள்ளைவேன் நடமாட்டங்கள், பாதாள உலகக் கும்பல்களின் கைவரிசைகள் போன்ற சிறிய பெரிய குற்றச் செயல்களெல்லாம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. புலிகளின் பயங்கரவாதத்தைக்கூட ஒழித்துக்கட்டிய இந்த அரசாங்கத்தினாலும், அரச படைகளாலும், பொலீஸாராலும் இன்னமும் இத்தகைய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தப்பட முடியாதிருப்பதுடன் நாட்டின் மூலை முடுக்குகளெங்கும் அவை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன.
எதிர்வரும் தேர்தல் காலத்தின் போதும் இவ்வாறான குற்றச் செயல்களெல்லாம் அரசியல் பலத்துடன் இன்னும் அதிகமாகவே நாட்டில் அரங்கேறவும் செய்யும். என்னதான் படுபாதகச் செயல்களைச் செய்தாலும் தம்மிடமுள்ள பணபலத்தால் அல்லது அரசியல் செல்வாக்கு அதிகாரத்தால் பொலீஸாரை மடக்கி விடலாம், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற அசட்டுத் தைரியம் அரசியல் அதிகாரம் பெற்றவர்களுக்கும், கடத்தல் மன்னர்களுக்கும், போதைப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் சுல்தான்களுக்கும், பாதாள உலகக் குண்டர்களுக்கும் ஏற்பட்டிருப்பதானது, பொலிஸ் திணைக்களக் கட்டமைப்பிலுள்ள ஒருசில உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் உழைக்கும் நோக்குடனான செயற்பாடுகளினால்தான் என்பது நாடறிந்த கசப்பான உண்மையேயாகும்.
நாடு எக்கேடு கெட்டால் என்ன? நமக்கான மாமூல் வந்தால் போதும்! என்கிற தேசப்பற்றற்ற கடமையுணர்வு குன்றிய சுயநல மனப்பாங்கு பொலிஸ் திணைக்களத்திலுள்ள சிலரிடம் மிகைத்துக் காணப்படுவதை இங்கு கூறாமலிருக்க முடியாது. நமது நாட்டின் குற்றச் செயல்களும், பொலிஸாரின் செயற்பாட்டு நிலவரங்களும் இவ்வாறிருக்கின்ற ஒரு மோசமான காலகட்டத்தில்தான் புதிய பொலிஸ்மா அதிபராக திரு. மஹிந்த பாலசூரிய அவர்களும் தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
அவர் பதவியேற்றது தொடக்கம் ஊடகங்களின் வாயிலாகத் தெரிவித்துவரும் பொலிஸ் திணைக்களத்தைப் புனரமைப்புச் செய்வதான ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய கருத்துக்களையும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகளையும் நோக்கும்போது அவர்மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை தினமும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
எனினும், அவரது இந்தச் சீர்திருத்த நடவடிக்கை களையெல்லாம் எதிர்வரும் ‘மெகா தேர்தல் களத்’ தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தி அதில் முழுமையான வெற்றியையும் காண்பாரோ? என்பதுதான் வாக்காளர்கள் மத்தியில் இன்று கேட்கப்படும் கேள்வியாகக் காணப்படுகின்றது.
நாட்டில் மலிந்துள்ள பொலிஸ் திணைக்களத்தினால் கட்டுப்படுத்த முடியாதுள்ள ஏனைய வகைக் குற்றச் செயல்களை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, இத் தேர்தல் திருவிழாக் காலங்களில் தேசம் முழுவதிலுமாக ஏககாலத்தில் இடம்பெறவிருக்கின்ற அரசியல் வாதிகளின் அதிகாரம் நிறைந்த அடாவடித்தனங்களையெல்லாம் அவர் எவ்வாறு கட்டுப்படுத்தி நீதியும் நேர்மையும் நிறைந்த சுதந்திரமான தேர்தலை நடாத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிககவும் அவர் வழிவகுப்பார்? என்பதே நாட்டு மக்கள் மத்தியிலுள்ள பரவலான எதிர்பார்ப்பாகும்.
தேர்தல் காலங்களில் எதிரணி முகாமை விடவும், அதிகாரத்திலுள்ள ஆளுந்தரப்பு முகாமில் இருந்தே அதிகளவு அட்டகாசங்களும், அச்சுறுத்தல்களும், அடாவடித்தனங்களும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்படுவதென்பது அனைவரும் அறிந்ததாகும். என்ன விலை கொடுத்தேனும் வெற்றி தமக்கே வந்தாக வேண்டுமென்பதில் ஆளுந்தரப்பினர் ஆவேசம் நிறைந்த அக்கறையுடன் செயற்படுவதுடன் தம் அதிகாரக் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து அரச அதிகார மையங்களையும், அரச வளங்களையும் அதற்காக அச்சமின்றிப் பயன் படுத்தி வரும் நம் தேச வழமையை நாம் இதற்கு முன்னர் நடைபெற்ற எல்லாத் தேர்தல் திருவிழாக்களிலும் கண்கூடாகவே கண்டுள்ளோம்.
ஓராயிரம் உலகளாவிய தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் நம் நாட்டுக்குள் வந்து ஓடியாடித் திரிந்தாலும் ஆளுந்தரப்பின் இம்முறைகேடான அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளுக்கும், அட்டகாசமான சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் தாக்குப் பிடித்து தேர்தலொன்றைச் சந்திப்பதென்பது, எதிரணிக்கு மாத்திரமன்றி வாக்காளர்களான நமக்கும்கூட அது பெரும் அச்சுறுத்தலான விடயமேயாகும். ஆளுந்தரப்பின் இத்தகைய அதிகாரப் பிரயோகங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் வகையில் அல்லது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் எதிர் முகாம்களின் பக்கமிருந்தும் தேர்தல் வன்முறைகள் நடைபெறுகின்றன. இச்சமர்க்களத்தில் அப்பாவி வாக்காளர்களின் வாக்குகளை கள்ளத்தனமாக வாக்குப் பெட்டிகளுக்குள் திணிக்கும் கெட்டித்தனத்தில்தான் ஆளுந்தரப்பின் வெற்றி தோல்விகள் தங்கியுள்ளன.
போஸ்டர்கள் ஒட்டுவதிலிருந்து வாக்களிப்பு முடியும் வரை ஏராளமான சட்டவிரோதச் செயற்பாடுகளை ஆளுந்தரப்பு வேட்பாளர்கள், அவர்களின் தேர்தல் முகவர்கள், ஆதரவாளர்கள் போன்றோர் நாட்டின் சட்ட ஒழுங்கை ஒரு மயிர்க் கனத்திற்கேனும் மதியாது அரசியல் அதிகார பலத்துடன் கட்ட விழ்த்து வருவதானது மறைவான விடயமன்று.
பொது இடங்களில் போஸ்டர்கள் ஓட்டுவது என்பதே சட்ட விரோதமாகயிருக்க ஆளுந்தரப்பு போஸ்டர் நாடெங்கும் முதலில் ஒட்டப்படும் பகிரங்கமான சட்டமீறலில் இருந்துதான் தேர்தல் வன்முறைகள் முஷ்டியை முறுக்கிக்கொண்டு ஆரம்பமாகின்றன. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ஆளுந்தரப்பு வேட்பாளர் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் போஸ்டர்களே முதன்முதலில் ஒட்டப்பட்டிருந்ததை பொலிஸ் மா அதிபர் அவர்களும் அவதானித்து இருப்பார் என்று நம்புகின்றேன்.
இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டுவதைத் தொடர்ந்து இருதரப்பு ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல்கள், அவர்களின் தேர்தல் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது தீ வைக்கும் பழிவாங்கல்கள், அச்சுறுத்தல்கள், அசிட் வீச்சுக்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள், துப்பாக்கிச் சூடுகள் என்பன போன்ற பல்வேறு வகைப்பட்ட வன்முறைகளும் தமிழகத் திரைப்படப் பாணிகளில் பகிரங்கமாகவே நமது நாட்டிலும் நர்த்தனமாடும்.
இவைதவிர, தபாலகங்களுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைக் கட்டுக்கட்டாகக் கொள்ளையிடுவதுடன் தபால் சேவகரிடமிருந்தும் அவற்றைப் பலவந்தமாகப் பறித்தல், பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்துவதற்குப் பொருத்தமான மைதானங்கள், மண்டபங்களுக்கு முன்கூட்டியே தமது அரசியல் அதிகாரப் பலத்தைப் பிரயோகித்து மொத்தமாக பொலிஸ் அனுமதியைப் பெறுதல், நள்ளிரவைத் தாண்டியும் தமது பிரச்சாரக் கூட்டங்களில் ஒலி பெருக்கிகளைப் பாவித்தல், ஆதரவாளர்கள் புடைசூழ வாகனாதிகளில் ‘பெலபாலி’ செல்லுதல், அதன் போது மாற்றுக் கட்சியினரின் வீடுகள், வர்த்தக நிலையங்களுக்கு கல்லெறிந்து தாக்குதல், மோட்டார் சைக்கிள்களில் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின்கள், உருட்டுக் கட்டைகளுடன் அச்சுறுத்தும் வகையில் வீதிகளில் ஓடித் திரிதல், வாக்குச் சாவடிகளுக்குள் அத்துமீறி நுழைந்து மாற்றுக் கட்சிகளின் முகவர்களுக்கு கொலை எச்சரிக்கை விடுத்தல், அங்கு கடமையிலிருக்கும் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி வாக்குச் சீட்டுக்களைப் பறித்து தமது ஆளுந்தரப்பு வேட்பாளருக்கு கள்ள வாக்குகளைத் திணித்தல் போன்ற இத்தியாதி அட்டகாசங்களும் தேர்தல் கொடியேற்றத்திலிருந்து தீர்தோற்சவம் வரைக்கும் சர்வ சாதாரணமாகவே நமது நாட்டில் நடைபெறும்.
வாக்களிப்புத் தினத்தன்று நாம் நமது வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தால் அதுவரை காலமும் நாம் அப்பிரதேசத்திலேயே கண்டிராத பல புதிய முகங்கள் பெரும் ஆராவாரமாக ஆளுந்தரப்பு வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ஏதோ பெரிய கலவரமொன்று இன்னும் சொற்ப நேரத்தில் வெடிக்குமோ? என்கிற அச்சம் தானாகவே நமக்குள் ஏற்பட்டு விடும். ஒரு அரசியல் வியாபாரிக்கு வாக்களிக்கப்போய் நாம் ஏன் வீண் வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டும்? என்கிற பீதியுணர்வில் வாக்காளர்கள் தமது கதவுகளை இறுக மூடிக்கொண்டு வீட்டிலுள்ள டீ.வி.யையோ வானொலி யையோ திருகிவிட்டு அதன் முன்னால் அமர்ந்து அன்றைய தேர்தல் வாக்களிப்பு நடப்புக்களை அறிந்து கொள்வதில் தமது கவனத்தைச் செலுத்துவர். மாலை 4 மணிக்குப்பின் ஜனநாயக ரீதியில் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் நமது தேசத்தின் ‘சுதந்திரமான’ தேர்தல் திருவிழா இனிதே நிறைவடையும்.
இத்தனை அநியாயங்களும், அக்கிரமங்களும், அடாவடித்தனங்களும் ஒன்று சேர நடைபெறும் நம்நாட்டுத் தேர்தல் கூத்தைத்தான், வாக்களிப்பு முடிந்ததும், தேர்தல் சுமூகமாக நடைபெற்றதென்றும், 80-85 வீதமான மக்கள் தமது வாக்குகளைச் சுதந்திரமாகப் பதிவு செய்தனர் என்றும், ஆங்காங்கே ஒருசில தேர்தல் வன்முறைகள் மாத்திரம் நடைபெற்றன என்றும் மக்களை மடையர்களாக்கி கண்காணிப்புக் குழுக்களைக் குருடர்களாக்கி செய்திகளும், அறிக்கைகளும் ஊடகங்களில் அலறும் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளாகவும் மறுநாள் பிரசுரமாகும். இதுவரை காலமும் நடைபெற்று வந்துள்ள இவ்வாறான தேர்தலையொத்த தேர்தலொன்றுதான் புதிய பொலிஸ் மா அதிபரின் நிர்வாகக் காலத்திலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி இந்நாட்டில் நடைபெறுமாக இருந்தால் இப்போது அவர் தெரிவித்து வரும் சீர்திருத்தக் கருத்துக்களை ஊடகங்களில் படித்துவிட்டு இந்நாட்டின் சட்டம் ஒழுங்கிலும், ஜனநாயக விழுமியங்களிலும் பாரியமாற்றமொன்று ஏற்படுமென பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கும் பொதுமக்களான நாமே ஏமார்ந்தவர்களாவோம்.
இந்நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின்னர் அச்சப்பட்டும், அடிமைப்பட்டும் வாழ்ந்த நாட்டு மக்களும், இலங்கை ஒரு சுதந்திர பூமியாக பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு விட்டது என்று நம்பியுள்ள சர்வதேச நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ஜனாதிபதித் தேர்தலானது நம் புதிய பொலிஸ் மா அதிபரின் மறுசீரமைப்பான நடவடிக்கைகளுடனும், முழுமையான ஜனநாயக விழுமியங்களைக் கொண்டதாகவுமே நடைபெற வேண்டும் என்கிற ஆதங்கத்துடன்தான் கடந்த காலங்களில் நடைபெற்ற இவ்வாறான தேர்தல்கால அவலங்களையும், கள நிலவரங்களையும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
மேற்கூறப்பட்ட சட்டவிரோதமான சம்பவங்கள் எதுவும் எதிர்காலத் தேர்தல் களங்களில் இடம்பெறாத வகையிலும் ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்கிற பாரபட்சம் காட்டப்படாமலும் இந்நாட்டின் தேர்தல் சட்ட விதிமுறைகளையும், சிவில் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளையும் முழுமையாக அமுல்படுத்திச் செயற்படுத்துவதற்காக முன்கூட்டியே தீர்க்கமான திட்டங்களை வகுத்தும் கண்டிப்பான கட்டளைகளைப் பிறப்பித்தும் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலை யாவரும் வியக்கத்தக்க வகையில் நடாத்திக் காட்டுவதன் வாயிலாக பயங்கரவாதத்தை முற்று முழுதாக அழித்தொழித்த வரலாற்றையும் விஞ்சிய ஒரு மகத்தான புதிய சரித்திரத்தை நம் பொலிஸ் மா அதிபர் அவர்கள் இத்தேசத்தில் படைக்க வேண்டும் என்பதே என்னுடையதும், என்போன்ற பாதிக்கப்பட்டவர்களினதும் உள்ளார்ந்த பிரார்த்தனையுமாகும்.
அவ்வாறு சட்டம் ஒழுங்குக்கு அமைவாகவும், ஜனநாயக பாரம்பரியங்களைப் பேணியும், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தும் இந்நாட்டில் ஒரு தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அது இந்நாட்டில் விடுதலைப் புலிகளை வேரோடு சாய்த்த போராட்டத்தை விடவும் பன்மடங்கு பாராட்டத்தக்க வேண்டியதொரு வீரச் செயற்பாடாகவே இந்நாட்டு மக்களாலும், சர்வதேச நாடுகளாலும் போற்றப்படும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
பயங்கரவாதிகளைத் தோற்கடித்தோம், ஆயுதங்களைக் களைந்தோம் எனக் கூறுவதினால் மட்டும் நாட்டில் ஜனநாயகமும், சட்டம் ஒழுங்கும் தானாக ஒருபோதும் மலர்ந்து விடாது. தேர்தல் காலங்களில் சில இலட்சங்களைச் செலவிட்டு பல கோடிகளைக் கொள்ளையிட எத்தனிக்கின்ற வியாபார நோக்கமுடைய அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்கள் எனும் காவி படிந்த அதிகாரப் பற்களையும் சட்டத்தைப் பாதுகாக்கும் காவலர்கள் அதன் அடிவேருடன் பிடுங்கிக் களைந்தால்தான் மக்களுக்கு உண்மையான சுதந்திரமும் நாட்டில் யதார்த்தமான ஜனநாயகமும் மலரும்.
இந்த வகையில் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்த்தரப்பு பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர்களை விடவும் நமது புதிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியா அவர்களுக்குத்தான் பெரும் சவாலாக இருக்கும் என்பதில் இன்னுமென்ன சந்தேகம்?? தேர்தல் காலச் சீர்கேடுகளையெல்லாம் இத்தேசம் முழுவதிலும் புதைத்து அழித்திட சிலிர்த்தெழுமா நம் ஸ்ரீலங்கா பொலீஸ்..? நாம் எல்லோரும் பொறுத்திருந்து பார்க்கலாம்!
தேச புத்திரன் (நன்றி வார உரைகல்)
0 comments :
Post a Comment