எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா சார்பாக புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சர்மிலா பெரேரா சற்று நேரங்களுக்கு முன்னர் வேட்பு மனுவை பாரமளித்தார். ஜெனரல் பொன்சேகா சார்பாக வேட்பு மனு பாரமளிக்கப்பட்டபோது ஐ.தே.க.,ஜே.வி.பி உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
வேட்பு மனுபாரமளிக்கப்பட்ட பின்னர் தேர்தல் திணைக்கள வாசலில் குழுமியிருந்த ஊடகவியாலளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜெனரல் பொன்சேகா சார்பான தேர்தல் பிரச்சாரங்கள் டிசம்பர் 18ம் திகதி கண்டியில் ஆரம்பித்து வைக்கப்படும் எனவும், அவருடைய வெற்றிக்காக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் 16 கட்சிகளும் நாடுமுழுவதிலும் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அவ்வப்பிரதேச அமைப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இத்தேர்தலானது நாட்டை ஆளுகின்ற அதிமுக்கியமான தலைவர் ஒருவரை நாட்டின் மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகும் எனவும், அதை எவ்வித வஞ்சகங்கள், சீர்கேடுகளும் இல்லாமல் நாடாத்தி முடிப்பதற்கு அரசின் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஒத்துழைக்கவேண்டும் என வேண்கோள் விடுப்பாதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மஹிந்த ராஜபக்க ஜனாதிபதியாக இருந்தாலும் தற்போதைய நிலையில் அவர் ஓர் வேட்பாளரே எனவும் அவருடைய வெற்றிக்காக தான் வகிக்கும் ஜனாதிபதி பதவியை பயன்படுத்தி நாட்டின் பொது உடமைகளை தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திவருவதாகவும் தெரிவித்த அவர், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளவதுடன் இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் அலரி மாளிகைக்கு 3000 பொலிஸார் அழைக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு விருந்துபாசாரம் ஒன்றை அளிப்பதற்கு நாட்டின் தலைவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இது தேர்தல் நடைமுறைகளுக்கு முரணானது எனவும், தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிக்காக்க வேண்டிய பொலிஸாரை தவறான வழிக்கு திசைதிருப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்த அவர், குறிப்பிட்ட நிகழ்வை ரத்துச்செய்யுமாறு தேர்தல் ஆணையாளரை வேண்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment