Monday, December 21, 2009

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கொலை: சிறிலங்கா அரசிடம் விளக்கம் கேட்கும் ஐ.நா.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் அவர்களுடைய குடும்பத்தினரும் எவ்வாறான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர் என்பதையிட்டு விளக்கமளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது.

சட்டத்துக்குப் புறம்பான எழுந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் சிறிலங்கா அரசாங்கத்திடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

கடந்த வாரம் வெளியான சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோதாபய மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே வெள்ளைக்கொடிகளுடன் படையினரிடம் சரணடைவ வந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.

இது தொடர்பான செய்திகளை அரசாங்கம் மறுத்திருந்த போதிலும், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஐ.நா. தற்போது கோரிக்கை விடுத்திருப்பது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவிலுள்ள சிறிலங்காவின் நிரந்திரப் பிரதிநிதி செனிவிரட்ணவுக்கு இது தொடர்பான கடிதம் ஒன்றை ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் அனுப்பிவைத்திருக்கின்றார்.

"சம்பவம் இடம்பெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்ட சூழ்நிலைகளை 58 வது படையணியுடன் இருந்த ஊடகவியலாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்" என இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் இந்தப் படுகொலைகள் இடம்பெற்ற சூழ்நிலை தொடர்பாக சிறிலங்கா அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment