Monday, December 21, 2009

பிரபாகரனின் பெற்றோர் ஆதரவை ஏற்கமாட்டேன்:

போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு அளித்தால் அதை ஏற்கப் போவதில்லை என, அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபட்ச உறுதிபடத் தெரிவித்தார். அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்து, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு அளித்தால், அதை ஏற்றுக் கொள்வதில் தனக்கு தயக்கம் எதுவும் இல்லை என பொன்சேகா கூறியதாகச் செய்தி வெளியானது.


இந்த நிலையில், பிரபாகரனின் பெற்றோரிடமிருந்து எந்த உதவியையும் பெறப் போவதில்லை என ராஜபட்ச கூறியுள்ளார். பிரபாகரனின் பெற்றோர் தற்போது வன்னிப் பகுதியில் அரசு நலவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.

வட மத்திய இலங்கையில் உள்ள அனுராதபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அளித்த ரூ. 3 லட்சம் நன்கொடையை சனிக்கிழமை பெற்றுக் கொண்டு, இங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ராஜபட்ச பேசியது:

இலங்கையில் கடுமையாக உழைத்து வரும் விவசாயிகள் அளிக்கும் நன்கொடையை மகிழ்ச்சியுடன் நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், பிரபாகரனின் பெற்றோர் 10 லட்சம் ரூபாய் அல்லது நூறு கோடி ரூபாய் அளித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

இலங்கையின் வளர்ச்சிக்காக உலகில் உள்ள எந்தவொரு வங்கியிடமிருந்தும் கடன் பெறுவேன். ஆனால், பிரபாகரனின் பெற்றோரிடமிருந்து எதையும் பெறமாட்டேன்.

இலங்கையில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்ததால்தான், இந்தத் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அச்சமின்றி பெருமளவில் மக்கள் வந்துள்ளனர்.

இலங்கையின் மேம்பாட்டுக்காக எந்த நாட்டிடமிருந்தும் உதவியைப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், இதற்காக ஏதாவது நிபந்தனை விதித்தால் அதை ஏற்கமாட்டோம்.

வாக்குகளைப் பெறுவதற்காக தவறான வாக்குறுதிகளை நாங்கள் அளிக்கமாட்டோம். நாங்கள் ஏதாவது வாக்குறுதி அளித்தால் அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார் ராஜபட்ச.

கடந்த மாத இறுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத் பொன்சேகா, அதிபர் தேர்தலில் பிரபாகரனின் பெற்றோரின் ஆதரவையும் ஏற்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதோடு, நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நிரந்தரமான எதிரிகளும் இல்லை என்றும் அப்போது பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com