ஜெனரல் பொன்சேகாவின் உதவியாளரான கப்டன் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு.
ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உதவியாளரான ஒய்வு பெற்ற கப்டன் கடத்தப்பட்டு சட்டத்திற்கு முரணாக அடையாளம் தெரியாத இடமொன்றில் இருநாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக சரத் பொன்சேகா தேர்தல் ஆணையளரிடம் முறையிட்டுள்ளார். தேர்தல் செயலகத்தில் தனது முறைப்பாட்டை செய்துவிட்டு வெளியேறுகையில் ஊடகவியலாளர்களிடம் அவர் பேசுகையில், தனது ஆதரவாளர்கள் மிகவும் தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் , அவற்றை எல்லாம் தாண்டி தாம் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யச் சென்றபோது அரசாங்கம் பாதைகளை மூடி தன்னை தடுக்க முயன்றதாக தெரிவித்த அவர், அரச சொத்து தேர்தலில் வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவிற்காக பயன்படுத்தப்படுவதாகவும், தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஜனாதிபதி அனுராதபுரத்திற்கு ஹெலிக்கொப்டர்களில் 1 மணித்தியாலயத்தில் சென்று திரும்பியதாகவும் தான் பெருந்தெருக்கள் ஊடாக அனுராதபுரத்தை அடைய 5 மணி நேரங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தேர்தல் பிரச்சாரங்களுக்காக சகல வேட்பாளர்களுக்கும் வழங்கப்படவேண்டிய ஒளி, ஒலிபரப்புநேரம் தனக்கு அரச ஊடகங்களில் வழங்கப்படாமையானது மிகவும் அநியாயமாகும் என்றும் தெரிவித்ததுடன் எவ்வாறாயினும் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் சகல வன்செயல்களையும் தேர்தல் ஆணையாளருக்கு தெரியப்படுத்தி வருவதாகவும், தேர்தல் ஆணையாளர் அவற்றுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுப்பததை கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளவரான கப்டன் ஜெனரல் பொன்சேகாவின் உள்ளக பாதுகாப்புக்கும் , தேர்தல் பிரச்சார மேடைகளுக்கான பாதுகாப்புக்கும் பொறுப்பானவர் என செய்திகள் வெளியாகியுள்ளதுடன் அவர் விடுவிக்கப்பட்டபோது தொடர்ந்தும் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்திருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேநேரம் ஜெனரல் சரத் பொன்சேகா அம்பலாங்கொடப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் வீடொன்றில் தங்கிச் சென்றுள்ளார். இன்று காலை அவ்வீடு விசேட பொலிஸ் குழுவொன்றினால் நீதிமன்ற உத்தரவில்லாமல் ஒரு மணித்தியாலயங்கள் சோதனையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறையிட்டுள்ளார். இவ்வாறானதோர் முறைப்பாடு பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளமை உண்மை என்பதை பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment