தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் சரத் பொன்சேகா தோற்றவரே. செழியன் வவுனியா.
இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான திகதி எதிர்வரும் ஜனவரி 26. இத்தேர்தலுக்காக 23 பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததுடன் நியோமல் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட 22 போட்டியிடுகின்றனர். தேர்தலில் 22 பேர் போட்டியிட்டாலும் போட்டி என்பது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் அரசியலில் புதுமுகமாக தேர்தலில் குதித்துள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவிற்கும் இடையிலேயே இடம்பெறப்போகின்றது.
அதனடிப்படையில் இவ்விரு பிரதானவேட்பாளர்கள் சார்பாகவும் பிரச்சாரங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சார்பாக இலங்கையின் புரதான நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்திலும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக போட்டியிடும் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா சார்பாக சிங்கள பௌத்த மத கோட்பாடுகளை வெளிப்படுத்தும் கண்டி நகரத்திலும் ஆரம்பித்துவைக்கப்பட்ட பிரச்சார மேடைகள் ஒன்றை ஒன்று குறை கூற முடியாத அளவிற்கு மக்கள் வெள்ளத்துடன் வானை பிளந்துநின்றது.
கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடையிலே பேசிய வேட்பாளர் சரத்பென்சேகா தமிழ் மக்களை எவ்வாறு கையாள்வார் என்பது அவருடைய முதலாவது பேச்சினூடாக தெளிவாகியுள்ளது. இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சிறுபாண்மையின மக்கள் இலங்கையில் உரிமைகள் எதனையும் கேட்க முடியாது எனவும் அவர்கள் இந்நாட்டில் வாழ்ந்துவிட்டுச் செல்லலாம் எனவும் கனடிய பத்திரிகைக்கு தெரிவித்திருந்த கருத்தை ஒத்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.
எதிர்வரும் தேர்தலில் வெற்றியை சிறுபாண்மையின மக்களது வாக்குகளே தீர்மானிக்க போகின்றது என்பதை உணர்ந்த ரணில்-ஜேவிபி தலைமையிலான கூட்டு சிறுபாண்மையின மக்களுக்கான தீர்வு விடயத்தில் தம்மிடையேயுள்ள வெளிப்படையான முரண்பாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட கூட்டினை உருவாக்கி கொள்வதற்கும் மனோகணேஷன், ரவூப் ஹக்கீம் போன்றோரை கூட்டினுள் இணைத்துக்கொள்வதற்கும் வழங்கியிருந்தாக ஊடகங்களில் வெளியாகிருந்த உறுதி மொழிகளை உறுதிப்படுத்துவதான எவ்வித பேச்சுக்களையும் மேடையில் பேசியவர்களின் வார்த்தைகளில் காணமுடியாது போனது.
இலங்கையில் நிலவுகின்ற அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக இலங்கை அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 13 வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்துவதுடன் அதற்கு அப்பாலும் சென்று 1310 என எதோ ஒரு விடயமும் கூறப்பட்டிருந்தது. ஆனால் கண்டியில் மேடையிலே பேசிய ரணில், சோமவன்ச, மனோகணேசன், ரவுப் ஹக்கீம் உட்பட 10க்கு மேற்பட்ட பேச்சாளர்களில் ஒருவரது வாயிலிருந்துகூட 13ம் திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்துவது, அல்லது 13 + அல்லது – என்ற விடயங்கள் பேசப்படாமையானது, சரத்பொன்சேகா இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அரசியல் தீர்வு என்ற வார்த்தைப்பிரயோகம் இல்லாது போவதற்கு மிகவும் உறுதியான சான்றாக அமைந்துள்ளது.
அதாவது இலங்கையின் 13வது திருத்தச் சட்டமானது தமிழீழமாகும் என பின்தங்கிய பாமர சிங்கள மக்களுக்கு அரசியல் அர்த்தம் கற்பித்து வந்த ஜேவிபி, நாமே 13 திருத்தச்சட்டத்தை எதிர்த்தோம், அச்சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்தவும் விடமாட்டோம் என இன்றும் வீரப்பிரசங்கம் செய்துவரும்போது ஜேவிபி யின் வாக்கு வங்கியினை நம்பி தேர்தலில் குதித்துள்ள சரத்பொன்சேகாவினால் சிறுபாண்மை மக்களின் விடயங்களில் இலகு போக்கை கடைப்பிடக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்ட மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இதனை ரவுப் ஹக்கீம் , மனோகணேசன் போன்ற சிறுபாண்மை மக்களின் உணர்வுகளுக்காக பல சந்தர்பங்களில் நிமிர்ந்து நின்று குரல்கொடுத்த அரசியல்வாதிகளால் உணர்ந்து கொள்ள முடியாமல் போனது துரதிஸ்டமானதாகும். ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் போன்றோருக்கும் ரணில் விக்கரமசிங்விற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேயான பிரிக்க முடியாத உறவிற்காக ஒரு சமுதாயத்தின், அல்லது நாட்டின் எதிர்காலத்தை குரங்கின் கைப்பூமாலையாக்க மக்கள் துணை போவார்களானால் துரதிஸ்டமே.
நாட்டின் எதிர்காலம் தொடர்பாக நேர் எதிர் கொள்கைகளை கொண்டுள்ளவர்களின் கூட்டினுள் மாட்டி முழிக்கும் சரத்பொன்சேகாவினால் சுதந்திரமாக வார்த்தைகளைக்கூட வெளியிட முடியாத நிலையினை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. திறந்த பொருளாதாரக் கொள்கையினை கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சிக்கும் உள்நாட்டுப் உற்பத்தியினை மேம்படுத்தவேண்டும் என்கின்ற மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் எவ்வாறு ஐக்கியம் ஏற்பட முடியும், அத்துடன் இவர்களது முரண்பட்ட கொள்கைகளில் பொது இணக்கம் ஏற்படாதவரைக்கும் சரத் பொன்சேகாவினால் எதுவும் செய்யமுடியாத ஓர் நிலைதோன்றும்.
இன்று சரத்பொன்சேகா தான் தொங்கியிருந்த மரக்கிளையை தானே வெட்டி வீழ்த்தியுள்ளதாகவே கூறமுடியும். ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் தேர்தல் ஒன்றை சந்திக்க முடியாதவராக , பங்கரவாதத்தினை நாட்டில் ஒழிப்பதற்கு பங்கு செலுத்தியவர் என சிங்கள பௌத்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சரத்பொன்சேவை பயன்படுத்தி அவர்களின் வாக்குகளைச் சூறையாடி ஆட்சியை கைப்பற்ற முடியும் என நினைக்கின்றார். ஆனால் சரத் பொன்சேகா அவ்வாறு ஆட்சியை கைப்பற்றினால் அங்கு நிகழப்போகும் அதிகாரப்போட்டி என்பது இலங்கையை 30 வருடங்கள் ஆட்டிப்படைத்த பயங்கரவாதத்தை விட கொடியதாக மாற்றி அமைக்கும்.
சரத் பொன்சேகா ஜனாதியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறையை ஒழிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க தரப்பினரால் அழுத்தம் பிரயோகிக்கப்படும். அவ்வாறு அதற்கு அவர் முன்வருவாரா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து ரணிலை சர்வ அதிகாரங்களும் கொண்டதோர் பிரதமமந்திரியாக்குவதற்கு ஜேவிபி ஒருபோதும் இசையப்போவதில்லை. எனவே அங்கே பலத்த அதிகார போர் வெடிக்கும். இந்நிலையில் சரத் பொன்சேகாவை பாதுகாத்துக்கொள்வதற்கு என அங்கு எந்த அரசியல் கட்சியும் முன்வரப்போவதில்லை. அவ்வாறு மங்களசமரவீர முன்வந்தாலும் அவரது பலம் என்பது அங்கு போதுமானதாக இருக்க மாட்டாது . எனவே சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முப்படைகளின் தளபதியாக உடனடியாக இராணுவ ஆட்சியினுள் செல்வார். இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி இராணுவ ஆட்சி ஒன்றை தாமாகவே தேடிக்கொண்டதாக முடியும்.
சரத் பொன்சேகாவின் கடந்தகால வரலாற்றை சற்று நோக்குவோமாயின் அவர் இராணுவ ஆட்சி ஒன்றிற்கான தயார்படுத்தலை செய்யவில்லை என எவரும் வாதிட முடியாது. யுத்தம் முடிவுற்ற நிலையில் உலகிலே உள்ள நாடுகளில் அதிபெரும் இராணுவத்தை இலங்கை கொண்டுள்ளபோதும் அவர் அவ் இராணுவத்தின் ஆட்பலத்தை மேலும் இருமடங்காக்க முயற்சித்துள்ளார். இங்கு உலகிலேயே மிகப்பெரிய இராணுவம் என நான் குறிப்பிட்டிருப்பது, நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும். அவ்வாறிருக்கையில் மேலும் அதன் பலத்தை இருமடங்காக்கின் நாட்டில் யுத்தம் ஒன்று இல்லாத நிலையில் அதன் தேவை என்ன என்ற கேள்விக்கு சரத்பொன்சேகாவிடம் சரியான பதில் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
அத்துடன் இடைத்தங்கல் முகாம் மக்களை தொடர்ந்தும் 3 வருடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவேண்டும் , சரணடைந்த புலிகள் மனநோயாளிகளாக மாறும் வரை அவர்களை சிறைகளில் அடைத்து வைத்திருக்கவேண்டும் , வன்னியில் புலிகளிடம் இருந்து மீட்ட பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையான முகாம்களை அமைத்து அப்பிரதேசம் இராணுமயப்பட்த்தப்பட்ட ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும் என்கின்ற அதிபயங்கரமான அறிவுறுத்தல்கள் சரத் பொன்சேகாவினால் தற்போதைய விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட யுத்தத்தினை வெல்வதற்கு தமிழ் மக்களின் தாராள உதவி கிடைத்துள்ளது என்பதனை எள்ளவும் பொருட்படுத்தாக சரத் பொன்சேகா தற்போது தமிழ் மக்கள் சார்பாக ஆசை வார்த்தைகளை பொழிந்தாலும் அதற்கும் அவர் நுழைந்துள்ள கூட்டினுள் குறிப்பிடத்தக்களவு எதிர்ப்பு உண்டு என்பதனை உணர முடிகின்றது. எனவே மக்கள் இன்று உள்ள நிலையிலும் நாடு சென்று கொண்டிருக்கின்ற போக்கிலும் எதிர்கட்சிகள் வேண்டி நிற்கின்ற மாற்றம் ஒன்று வேண்டுமா என்பததையும், சரத் பொன்சேகாவின் கடந்தகால, நிகழ்கால ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் முரண்பாடான நிலைப்பாடுகளையும் மக்கள் மிகவும் அவதானிக்கவேண்டும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள், மக்கள் அவ்வாறான நிஜமில்லாத மாற்றம் ஒன்றைவேண்டுவார்களாயின் அதன் சுமையை எதிர்வரும் 6 ஆண்டுகளுக்கு மாத்திரமல்ல, அந்த ஆறு ஆண்டினுள் நாடு அடையும் பின்னடைவை நிவர்த்தி செய்ய மேலும் 60 ஆண்டுகள் எடுக்கலாம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
0 comments :
Post a Comment