Thursday, December 17, 2009

புவிவெப்ப மாநாட்டில் பங்கேற்க கோபன்ஹேகன் கிளம்பினார் மன்மோகன்

புவிவெப்ப மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பெரும் இழுபறிக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கோபன்ஹேகன் கிளம்பிச் சென்றார். கோபன்ஹேகன் புவிவெப்ப மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்தார் பிரதமர். அவர் போகக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அவர் கோபன்ஹேகன் கிளம்புவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏஅவர் பயணம் செய்யவிருந்த விமானத்தில், டேங்கர் வாகனம் ஒன்று மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பிரதமரின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாலை 5.30 மணிக்கு பிரதமர் கிளம்பிச் செல்வார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாலை 5.40 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கஜூராஹோ என்று பெயரிடப்பட்ட இன்னொரு சிறப்பு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

கோபன்ஹேகனில் நடைபெறும் புவிவெப்ப மாற்ற மாநாட்டில் மன்மோகன் சிங் இந்தியா வின் கருத்தையும், வளரும் நாடுகளின் கருத்தையும் எடுத்து வைத்து சுமூகமான முடிவு ஏற்பட முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது பயணத்திற்கு முன்பாக பிரதமர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில்,

புவிவெப்ப மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்த, ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கும், அணுகுமுறைக்கும் உட்பட வேண்டும்.

வளர்ந்த நாடுகள் நிதியுதவியும், தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கும் நம்பகமான முறையில் முன்வர வேண்டும். இதுதொடர்பான உத்தரவாதங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தால் நிச்சயம் அதிக அளவில் இதுதொடர்பான பணிகளில் ஈடுபட இந்தியா முன்வரும்.

வளரும் நாடுகளின் ஏழ்மை நீடிக்க வேண்டும் என்ற கோணத்தில் புவிவெப்ப தடுப்பு நடவடிக்கைள் அமைவதை ஏற்க முடியாது. அந்த ரீதியில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் முடியாது.

உலக சமுதாயத்தில் இந்தியா ஒரு பொறுப்பான அங்கமாகும். 2020ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைப்பதாக இந்தியா முன்வந்து அறிவித்துள்ளது.

மேலும், புவிவெப்ப மாற்ற தடுப்பு தொடர்பான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அது எடுத்து வருகிறது. இதுதொடர்பாக எட்டு தேசிய அளவிலான அமைப்புகளும் கூட ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியது நமது பொதுவான பாரம்பரியம். சுற்றுச்சூழல் பாதுகாப்பே நாம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்லும் பரம்பரை குணமாக அமையும்.

உலகளவில் புவி வெப்பமயமாவதால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியா தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும்.

ஏற்கனவே கடந்த 2007ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழியின்படி, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவது வளரும் நாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

கோபன்ஹேகன் மாநாட்டின் பிரகடனம் அனைத்து நாடுகளின் கூட்டான விருப்பத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் அமையும் என்றார் அவர்.

நன்றி துனியா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com