Thursday, December 31, 2009

யாழில் இருந்து வன்னிக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் இலவச பஸ் சேவை

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னியில் கடமையாற்ற வரும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்காக திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இலவச பஸ் போக்குவரத்துச் சேவை ஜனவரி முதல் நடத்தப்படுகின்றது. குறிப்பாக ஆசிரியர்களின் நலன்கருதி இந்த இலவச பஸ் சேவை ஒழங்கு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாணத்தின் கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

வன்னியில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியர்கள், யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் இணைப்பு ஜனவரியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இவர்கள் அனைவரையும் தாம் முன்பு கடமையாற்றிய வன்னிப் பாடசாலைகளுக்குக் கடமைக்குத் திரும்ப வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வருவதற்காக இலவச பஸ் சேவை நடாத்தப்படுகின்றது. திங்கட்கிழமை யாழில் இருந்து வருவதற்கும், வெள்ளிக்கிழமை திரும்பிச் செல்வதற்கும் அரச ஊழியர்கள் இந்த இலவச பஸ் சேவையைப் பயன்படுத்த முடியும்.

அரச பணியாளர்கள் வெள்ளிக்கிழமை வரை வன்னிப் பகுதிகளில் தங்கியிருப்பதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளங்கோவன் கூறினார்.

வன்னிப் பாடசாலைகளில் கடமையாற்ற வேண்டிய சுமார் 650 ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment