Sunday, December 20, 2009

த.தே.கூ அவசரமாக கூடுகின்றது.

அதிபர் தேர்தல் நிலைப்பாடு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள கட்சிளிடையே பெரும் குழப்பமும், பிளவுகளும் ஏற்படத் தொடங்கியிருப்பதால், இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவு ஒன்றை எடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த எம். பி.க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தற்போது நாடு திரும்பியுள்ளனர்.

அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இன்று சந்தித்துப் பேசவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சந்திப்பின்போது கட்சியின் சில கோரிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் விவாதிக்கப்படவுள்ளதாம்.

இதன் பின்னர் அடுத்து வரும் நாட்களில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களின் வட்டாரங்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

அதேசமயம், கட்சிக்குள் தோன்றியுள்ள சிக்கல் நிலை குறித்தும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயவுள்ளதாகத் தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரின் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அந்த மக்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளி எந்தவித முடிவினையும் எடுக்காது.

ஒரு சிலரின் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை. கட்சிக்குள் எழுந்துள்ள நிலை தொடர்பாக ஆராய்ந்து ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படும்.

எமது கட்சியைச் சேர்ந்த அனைவரும் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மதிப்பவர்கள். அதனைத் தொடர்ந்து பேண வேண்டியது எமது கடமை என்றார் அவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யாருக்கு ஆதரவு என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. இந்த நிலையில் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த யாழ்ப்பாணம் எம்.பி. சிவாஜிலிங்கம் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com