தடையின்றி இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க சகல ஏற்பாடுகளும் முன்னெடுப்பு.
இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வவுனியாவிலும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு தாம் மீள்குடியேற்றப்பட்ட இடங்களிலும் வாக்களிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் திணைக்களம் இடம் பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துவரும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் அதிகமானவர்களின் பெயர்கள் 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதெனவும் அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கான சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இடம் பெயர்ந்த மக்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கிராம சேவகர்களினூடாகப் பதியப்பட்டுள்ளதோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்ட வாக்காளர்கள் தேர்தலில் விண்ணப்பிப்பதற்காக (இன்று) 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதோடு மேலும் பலர் இறுதி நேரத்தில் விண்ணப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நலன்புரி முகாம்களில் உள்ள முல்லைத் தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களுக்கு நேரடியாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப் பட்டுள்ளதாகவும் தேசிய அடையாள அட்டை மற்றும் தற்காலிக அடையாள அட்டை என்பன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவு னியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளர் ஏ. கருணாநிதி கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment