இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடம் கோரியதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. சரணடைவது தொடர்பில் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளைத் தொடர்பு கொண்டதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் சீ.என்.என் தொலைக்காட்சி சேவைக்கு அளித்த நேர் காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரணடையும் செயற்பாடுகளை கண்காணிப்பு செய்ய ஐக்கிய நாடுகள் ஒப்புக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த காரணத்தினால் குறித்த பிரதேசத்திற்கு செல்வதற்கோ அல்லது நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கோ போதியளவு கால அவகாசம் கிடைக்கப் பெறவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.
சரணடைவதற்கான தமது விருப்பத்தினை புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் வெளிப்படுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் எவரும் சரணடைய எத்தனிக்கவில்லை எனவும், சரணடைய முயற்சித்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment