Monday, December 7, 2009

இலங்கை கிழக்குப் பகுதியில்மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு?

பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் மற்றும் கியூபாவுடன் தொடர்புடைய மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு, இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்களின் பின்னர் கிழக்குப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு புதிய அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு ஒன்று கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததாகவும் இது தனித் தமிழ் நாடு ஒன்றை கோரி அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவிருப்பதாகவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் விடுதலை இராணுவத்தின் கட்டளைத் தளபதி என கூறும் கோணேஸ் என்பவர், இந்த யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்திருப்பதாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களுக்கு உண்மையில் தீர்வு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ள அவர், இதன் நிமித்தமே இந்த இராணுவத்தை தொடக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தாம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, வடக்கிழக்கு மாகாணத்தை தனி தமிழ் ஈழமாக மீட்போம் என அவர் டைம்ஸ் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மக்கள் விடுதலை இராணுவம் விரைவில் தமது தாக்குதல்களை ஆரம்பிப்பர் எனவும் தமக்கு தெரிவித்துள்ளதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை தாம் தமீழ விடுதலைப் புலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இராணுவக் குழு என தெரிவித்துள்ள கோணேஸ், எனினும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் இதில் இணைந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைப்பில் தற்போது 300 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் 5000 உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியல் கொள்கையை ஏற்றுக்கொள்ளுவோர் இணைந்து கொள்வதில் தடையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தீவிரவாத இயக்கம் எனவும் அந்த அமைப்பு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இயக்கத்திற்கு பலஸ்தீன விடுதலை இயக்கம் இந்தியாவின் மாவோயிஸ்ட் மற்றும் கியூபா ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com