Sunday, December 20, 2009

தமிழ் தேசிய ஐக்கியத்தை சிதைக்காமல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம்: மனோ கணேசன்

சிவாஜிலிங்கத்தின் தன்னிச்சையான முடிவு தமிழ் தேசியத்தை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளதாம்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மீண்டும் விடுத்துள்ள தமது பகிரங்க அழைப்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது, மலையகம், மேல்மாகாணம் உள்ளிட்ட தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்காக சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிய அதேவேளையில், வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் தமிழர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை எடுப்போம் என அறிவித்திருந்தேன்.

வடகிழக்கிலே வாழுகின்ற எமது தமிழ் உறவுகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வகிக்கும் அரசியல் பாத்திரத்தை அங்கீகரிக்கும் முகமாகவும், தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தை ஊறுவிளைவிக்காமலும் இத்தகைய நிலைப்பாட்டை நாம் எடுத்திருந்தோம்.

எமது பேச்சுவார்த்தைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளுடன் முன்னேற்றகரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த வேளையில் நாம் நடத்திய மக்கள் சந்திப்புகள் வெற்றிகரமாக அமைந்தன. யாழ்ப்பாண மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை அறிந்து எனது மனம் நெகிழும் வண்ணம் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.

யாழ் பல்கலைகழக சமூகம், வணிகர் சங்கம், நல்லை ஆதினம் மற்றும் இந்து நலன்புரி அமைப்புகள், கத்தோலிக்க பேராயர் மற்றும் சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் ஆகியோருடன் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே நமது ஒன்றுபட்ட செயற்பாடுகள் இருந்திடவேண்டும் என்பதை நான் தெளிவாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூறியிருந்தேன்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நண்பர் சிவாஜிலிங்கம் திடீரென ஜனாதிபதி தேர்தலிலே வேட்பாளராக தன்னை அறிவித்துள்ளார். அவரது செயற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், அவரது கட்சியான ரெலொ இயக்கத்திற்கும் தொடர்புடையது அல்ல என தற்சமயம் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த தன்னிச்சையான முடிவு தமிழ் தேசிய ஐக்கியத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாடு என்பது தொடர்பாக எமக்கு இருக்கின்ற அக்கறையைகூட இத்தகைய தன்னிச்சையான செயற்பாடு நகைப்பிற்கிடமாக்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பை உறுதி செய்து எமது அடுத்தகட்ட ஜனநாயக நகர்விற்கு அடித்தளமிடும் ஒன்றுபட்ட செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வரவேண்டும்.

வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, எமது எதிர்கால ஜனநாயக இலட்சியங்களை மனதில் கொண்டு, இன்றைய நெருக்கடி மிக்க காலகட்டத்திலே உறுதியான முடிவுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்பதே ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment