Thursday, December 31, 2009

யார் பிரதம மந்திரி? இரு பிரதான கட்சிகளுள்ளும் முறுகல்நிலை:

ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்படவிருந்த நிலையில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஏற்பட்ட போட்டிகளில், ஆட்சியை கைப்பற்றினால் யார் அடுத்த பிரதமர் என்பதுவும் ஒன்றாகும். ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டு வெற்றியீட்டினால் தான் பிரதமராக முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எஸ்பி திஸாநாயக்க, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமனம் பெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியினுள் இருந்து கொண்டு பிரதமர் பதவிக்கு குறிவைக்க முடியாது என்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாவிக்கொண்டார்.

அவர் அவ்வாறு தாவியிருந்தபோது, சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் பிரதமர் பதவியை இலக்கு வைத்திருந்தவர்கள் பலருக்கு அடிமனதில் குமுறல் இருந்தாலும் கூட சிலர் கட்சியின் தலைமைப்பீடம் எடுக்கும் முடிவுக்கு தாம் கட்டுப்பட தயாராகவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இருந்தபோதிலும் பிரதமர் விடயத்தில் அதிருப்தி அடைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சிதாவவுள்ளதாக செய்திகள் தொடர்சியாக வெளிவந்தவண்ணமுள்ளன.

இச்செய்திகள் ஆழும்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சிரேஸ்ட அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜோன் செனவிரத்தின ஆகியோர் தாம் அவ்வாறு கட்சி தாவப்போவதில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தலில் அதிபர் மஹிந்தவின் வெற்றிக்கு பூரணமாக ஒத்துழைக்கபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் சிறிலங்கா சுதந்திக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் ஒருவரான டிஎம் தயாரட்ண ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வென்றால் அடுத்தபிரதமர் தானே என லங்கா நீயுஸ் பேப்பர் எனும் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எஸ்பி திஸாநாக்க உட்பட பலர் பிரதமர் பதவிக்கு கண்வைத்துள்ளபோதும் அதே பதவிக்கு ஜனாதிபதியின் சதோதர்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் இலக்கு வைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்கேகா ஜனாதிபதியானால் தானே நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் என ரணில் தெரிவித்துள்ள நிலையில் அவ்விடயத்தை முற்றாக நிராகரித்துள்ள சரத் பொன்சேகாவின் நம்பிக்கைக்குரிய கட்சியாக செயல்படும் ஜேவிபியினர் சரத் பொன்சேகா தலைமையிலான அரசாங்கத்தில் எவருக்கும் அதிகாரங்கள் இருக்காது எனவும் அவ்வரசாங்கும் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட காபந்து அரசாங்கமாகவே செயற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com