Tuesday, December 15, 2009

மற்றுமொரு மலையக தமிழ்ச்சிறுமி குமுதினி அவிசாவளையில் மர்ம மரணம் :

தூக்கிட்டு மரணித்ததாக தொலைபேசி தகவல்.
கொலையா ? தற்கொலையா? விசாரணைகள் தொடர்கின்றன.(காரைதீவு நிருபர் விரி. சகாதேவராஜா)

மலையக தமிழ்ச் சிறுமியொருவர் அவிசாவளையில் வீட்டுவேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த வேளையில் மர்மமான முறையில் மரணமாகியுள்ளார். இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

மலையகத்தின் தெல்தோட்ட, லூல்கந்துர டிவிசன், லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமசாமி ராமையா – துரைசாமி மாரியாயி தம்பதிகளின் மகளான குமுதினி (15 வயது) என்ற தழிழ்ச் சிறுமியே 2009.12.10 ஆம் திகதி இவ்விதம் மர்மமானமுறையில் மரணமாகியுள்ளார்.

இவரது மரணம் கொலையா தற்கொலையா என்பது தெரியவில்லை.ஆனால் பொலீஸ் விசாரணைகன் தொடர்கின்றன.

ஹெலியகொட பம்பெகம தோட்டம், அவிசாவலைக்கு வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி மர்ம மரணம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

தெல்தொட்ட, லூல்கந்துர டிவிசன், லூல்கந்துர தோட்டத்தை சேர்ந்த ராமசாமி ராமையா – துரைசாமி மாரியாயி தம்பதிகளின் மகளான குமுதினி (15 வயது) என்ற தழிழ்ச் சிறுமி தெல்தோட்ட மலைமகள் மத்திய கல்ல}ரியில் 8 ஆம் தரத்தில் கல்வி பயின்றவர்.

பின்னர் ஹெவாஹெட்ட முள்ளோயா தோட்ட அதிகாரி ஜயந்த அசோக விஜயகருனாரத்தின என்பவரின் வீட்டில் தரகர் அருனாச்சலம் பாலசுப்பிரமணியம் என்பவரால் வீட்டு வேலையாளாக 01.08.2009 ஆம் திகதி சேர்க்கப்பட்டுள்ளார்.

ராமையா குமுதிலி என்ற இச்சிறுமியை வேலையாளாக ஹெவாஹெட்ட முள்ளோயா தோட்ட அதிகாரி ஜயந்த அசோக விஜயகருனாரத்தின என்பவரின் வீட்டிற்கு வேலைக்கு விடுவதற்கு முன்னர், ஜெயந்தி என்ற 27 வயதுடைய தனது மகளையும் (இளம் பெண்) தரகர் அருனாச்சலம் பாலசுப்பிரமணியம் என்பவரே ஜயந்த அசோக விஜயகருனாரத்தின என்பவரின் வீட்டிற்கு 17.07.2009 ஆம் திகதி வேலையாளாக அமர்த்தியுள்ளார்.

மேலும் ஹெவாஹெட்ட முள்ளோயா தோட்ட அதிகாரி ஜயந்த அசோக விஜயகருனாரத்தின என்பவர், இவர்களை வேலைக்குமர்த்தி 2 மாதங்களுக்கு பின்னர் இடமாற்றம் பெற்று ஹெலியகொட, பம்பேகம தோட்டத்திற்கு சென்ற போது ராமையா குமுதிலியையும், பாலசுப்பிரமணியம் ஜெயந்தியையும் அவர்களின் பெற்றோருக்கு தெரியாமலே அவருடன் அழைத்து சென்றுள்ளார். இவ்விடயம் தரகர் அருனாச்சலம் பாலசுப்பிரமணியத்திற்கு மட்டுமே தெரிய கூயடியதாக இருந்தது.

அதன் பிறகு ஹெலியகொட, பம்பேகம தோட்ட இருப்பிடத்தில் இருந்து ராமையா குமுதிலி தனது தந்தையான ராமையாவிற்கு (081 3815622) தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதன் பிறகு ராமையா தனது மகளை தேடி ஹெலியகொட, பம்பேகம தோட்டம், அவிசாவலைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற போது மகள் தந்த விலாசம் சரியாக இல்லாதபடியாலும் தனது மகளை காணமுடியவில்லை என்று அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள்.

ராமையா தனது மகளை பார்க்க முடியாததால் தரகர் அருனாச்சலம் பாலசுப்பிரமணியத்திடம் மகள் குமுதிலியைப்பற்றி விசாரித்துள்ளார். தரகர் அருனாச்சலம் பாலசுப்பிரமணியம் ராமையா குமதிலியை பார்த்துவருவதற்காக ஹெலியகொட, பம்பேகம தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற சந்தர்ப்பத்தில் ராமையா குமுதினியையும் தனது மகளான பாலசுப்பிரமணியம் ஜெயந்தியையும் கட்டிவைத்து அடித்துள்ளனர். அதன் பிறகு அவ்வீட்டு உரிமையாளர் ஜயந்த அசோக விஜய கருணாரத்ன என்பவர் தரகர் பாலசுப்பிரமணியத்திடம் 'இவர்களுக்கு லீவு இல்லை, இவர்களை அனுப்ப முடியாது வேறுயாரையாவது கூட்டிவந்து விட்டுவிட்டு இவர்களை கூட்டிக்கொண்டு செல்லவும்' என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு பாலசுப்பிரமணியம் ராமையாவிடம் வந்து 'இவர்களுக்கு லீவு இல்லையாம், இவர்களை அனுப்ப முடியாது வேறுயாரையாவது கூட்டிவந்து விட்டுவிட்டு இவர்களை கூட்டிக்கொண்டு செல்லவும் என்று கூறியதால் நான் திரும்பி வந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். அதன் பிறகு ராமையா இவ்விடயம் தொடர்பாக அக்கறை எடுக்கவில்லை.

அதேநேரம் தீடீர் என்று 2009.10.12 ஆம் திகதி காலை 6 மணியலவில் 081-3815622 என்ற தொலைபெசி இலக்கத்தில் இருந்து 'நீ ராணியின் அப்பாவா' என கேட்டுள்ளனர். ராமையா 'ஆம்' என்று பதிலளித்துள்ளார். பிறகு அவர்கள் ராமையாவிடம் 'நீ ஹெலியபொட பொலீஸில் என்னைப்பற்றி என்ன சொன்னாய்' என்று மிரட்டியுள்ளதோடு 'உனது மகள் ராணி தூக்கில் தொங்கி இறந்து விட்டாள் வந்து ஹெலியகொட பொலீஸில் அவளது உடலை எடுத்துக்கொள்' என்று ராமையாவிடம் சிங்களத்தில் அறிவித்துள்ளனர்.

அதன் பிறகு ராமையாவின் மைத்துனர் (மனைவியின் தம்பி) 081-3815622 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கதைத்துள்ளார். இவ்வீட்டு பெண் ஒருவர் 'ஆம் ராணி தான் தூக்கில் தொங்கி இறந்து விட்டாள் என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டாள் என்றும் இவர்கள் எமக்கு சரியான பதில் எதுவும் கூறவில்லை' என்றும் ராமையாவின் மைத்துனர் தெரிவித்தார். அதன் பிறகு 'நான் திருப்பி ஒரு முறை எடுத்தும் இந்த தொலைபேசி இலக்கம் இயங்கவில்லை' என்று அவர் கூறினார்.

அதன் பின் 2009.12.10 அன்றைய தினமே காலை 9.00 மணியளவில் கலஹா பொலீஸார் ராமசாமி ராமையாவின் வீட்டிற்கு சென்று ஹெலியகொட பொலீஸ் நிலையத்தில் இருந்து வந்து ரசீது ஒன்றை கொடுத்துள்ளனர்.

அதில் 'தெல்தோட்ட, பட்டியகம தோட்டத்தில் வசிகின்ற ராமசாமி ராமையாவின் மகளான ராமையா குமுதினி ஆகிய ராணி பம்பேகம தோட்ட அதிகாரியான ஜயந்த அசோக விஜயகருனாரத்தின என்பவரின் வீட்டில் தூக்கிட்டு மரணமாகியுள்ளார் என்றும் இவ்விடயம் சம்பந்தமாக பெற்றோரிடம் முறைப்பாடு ஒன்றை பெறுவதற்காக 2009.12.10 அன்று காலை 9.00 மணிக்கு ஹெலியகொட பொலீஸ் நிலையத்திற்கு வரும்படி அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது'. இவ் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்திற்கு அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை.

அதன் பின்னர் மனித அபிவிருத்தி தாபனத்திடம் தொலைபேசியூடாகவும் கடிதம் மூலமாகவும் ராமசாமி ராமையா முறைப்பாடு செய்தார். எமக்கு இம்மரணம் தொடர்பாக சந்தேகமுள்ளதாகவும் அதற்கான தகுந்த சட்ட நடடிவக்கை எடுக்க உதவுமாறு தாபனத்திற்கு முறைப்பாடு செய்தனர்.

இச்சிறுமி தற்கொலை செய்துகொள்வதற்கான சூழ்நிலைகளைப்பற்றி நோக்கும் போது, இவர் தற்கொலை செய்துகொள்வதற்கானதொரு எந்த ஒரு பிரச்சினையும் சூழ்நிலை குடும்பத்தில் காணப்படவில்லையென ராமசாமி ராமையாயும், குடும்பத்தாரும் குறிப்பிட்டனர். இச்சிறுமி தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட விடயம் எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என இறந்த குமுதிலியின் அப்பா ராமசாமி ராமையா தெரிவிக்கின்றார். அத்தோடு தன்னுடைய ஒரு காலும் ஒரு கையும் ஊனமுற்றிருப்பதாள், தனக்கு எந்த ஒரு வேலையும் செய்யதுடியாதனப்படியாலும் அவர்களின் குடும்பம் வறுமையில் கஷஸ்டப்படுவதாகவும், போதியளவான வருமானமின்மையினால் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ராமசாமி ராமையா குறிப்பிட்டர்.

இக் குறிப்பிட்ட தோட்ட சூழ்நிலையை எடுத்து நோக்கும்போது 25 மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு சென்று கல்வி பயில வேண்டிய வயதில் வீட்டு வேலைக்கு மற்றும் பல வேலைகளுக்காக அடிமைகளாக அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிய வருவதுடன் மேலும் பல யுவதிகள் வீட்டு வேலைகளுக்கு கொழும்பு போன்ற இடங்களில் அமர்த்தப்பட்டுள்ளமை அறியக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு சிறுவர்களையும் யுவதிகளையும் வீட்டு வேலைகளுக்கு கொண்டு செல்லும் உப தரகர் வேலையை அப்பகுதியை சேர்தவர்கள் செய்து வருவதாக அத்தோட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

எவ்வாறெனினும் மலையக தோட்ட பிரதேசங்களில் இருந்து தமிழ் சிறுவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் வீடுகள், கடைகள், கராஜிகள், கட்டிட நிர்மானம், ஹொட்டல் போன்ற இடங்களுக்கு வேலை செய்வதற்காக அழைத்துச்செல்லப்படுகின்றனர். பல்வேறு இனத்தவர்கள் இவ்வாறான கீழ்நிலை தொழில்களுக்கு மலையக தோட்ட தமிழ் சிறுவர்களையே குறிவைப்பது இம்மக்களின் அடிமை நிலையை உணர்த்தி காட்டுகின்றது. மலையக தோட்ட பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி மாற்றங்கள் இடம்பெற்று வந்தாலும் கூட, அவை நகரங்களை அண்மிய பகுதிகளிலேயே காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. மிக தொலை தூரத்திலுள்ள தோட்டங்களிலுள்ள நிலமைகள் மிகவும் மோசமான நிலமையிலேயே காணப்படுகின்றன.

மேற்படி தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. பாடசாலை ஒன்றும் காணப்படுகின்றது. ஆனால் பல சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் வேலைகளுக்கு அமர்த்தப்பட்டு, இறுதியாக பிணமாக கொண்டுவரப்படும் சம்பவம் மலையக பிரதேசங்களில் புதிய விடயமல்ல. இது போன்று மஸ்கெலியாவை சேர்ந்த சிறுமியர் சுமதி, ஜீவராணி ஆகியவர்களும் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டு இறந்த விடயம் இன்று 2009.12.11 ஆம் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு இருக்கும் போதே இன்றும் இவ்வாறு ஓர் மரணமா? மலையகத்தில் பெறும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

கீழ்வரும் விடயங்கள் மேற்படி ராமையா குமுதிலியின் உரிமை மீறலாக கருதுவதற்கான சான்றுகள் காணப்படுகின்றமையால் இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனித உரிமைகள் ஆணைக்குழு, கொழும்பு
மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய காரியாலயம், கண்டி
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கொழும்பு
சறுவர் மற்றும் பெண்கள் விவகாரப்பிரிவு, கொழும்பு

இவ் நிறுவனங்களுக்கு மேற்படி ராமையா குமுதினியின் மரணம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மனித அபிவிருத்தி தாபனம் முறைப்பாடுகளை செய்திருக்கின்றது.

மேற்படி ராமையா குமுதினியின் வயது 15 ஆக காணப்படுகின்றமையால் இச்சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட முடியாது என்பதுடன் கட்டாயமாக பாடசாலைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் ஆவர். இச்சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்டமை இலங்கையின் சிறுவர் மற்றும் கல்வி சம்பந்தமான சட்டங்களுக்கு முரணானதாகவும் காணப்படுகின்ற அதேநேரம் சிறுவர் உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 32 சிறுவர்கள் வேலைக்கு அமர்த்துதல் தொடர்பாக குறிப்பிடும் முறைமைகளையும் மீறியுள்ளது.

2.மேற்படி ராமையா குமுதினி பெற்றோருடன் வாழ வேண்டிய வயதில் அடிமைக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது அவரின் வாழ்வதற்கான மற்றும் அன்பு, பாதுகாப்பு பெறுவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு மரணித்துள்ளமை மற்றுமோர் அடிப்படை மனித உரிமை மீறலாகும். சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 9 பிள்ளைகளின் சிறந்த நலன் முன்னிட்டு அல்லாமல் பெற்றோரைப்பிரிதல் ஆகாது என வலியுறுத்தப்பட்டுள்ள போதும் இச்சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எனவே இம்மரணம் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்குமாறு மனித அபிவிருத்தி தாபனம் சம்பந்தப்பட்டவர்களை, வலியுறுத்திவருகின்றது.

மனித அபிவிருத்தி தாபன உண்மை கண்டறிதல் குழு விசாரணையில் ஈடுப்பட்டபோது

பிரேத அறையில் ராமையா குமுதினியின் பூதவுடல்.

ராமையா குமுதினி ஆகிய குமுதினியின் பூதவுடலுக்கு மனித அபிவிருத்தி தாபன திட்ட இணைப்பாளர் திருமதி பொ. லோகேஸ்வரி, கள இணப்பாளர் திரு. ரா. நடராஜா ஆகியவர்கள் அங்சலி செலுத்துவது

முதினியின் பெற்றோர் சகோதர சகோதரிகள்.


(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com