ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த அஸாத் சாலி இப்போது அக் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கின்றார். பொன்சேகாவைப் பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அஸாத் சாலி கட்சியின் செயற்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பொன்சேகா தமிழ், முஸ்லிம் மக்களைச் சிறுமைப்படுத்தும் கருத்துகளை அடிக்கடி தெரிவித்தவர் என்பதற்காகவே அஸாத் சாலி எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கை சிங்களவர்களின் நாடு என்றும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களின் விருந்தாளிகளாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கனேடிய பத்திரிகையொன்றுக்கு பொன்சேகா பேட்டி அளித்திருந்தார்.
பொன்சேகாவின் இவ்வாறான இனவாதக் கருத்துகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினரான அஸாத் சாலி எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலில் ஒதுங்கும் மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் பொன்சேகாவை ஆதரிக்கின்றார்கள். இவர்கள் எதற்காகப் பொன்சேகாவை ஆதரிக்கின்றார்கள் என்பது விளங்கவில்லை.
இவர்கள் இருவரும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் பற்றி அடிக்கடி பேசுபவர்கள். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிப் பேசுவதற்காக அண்மையில் சூரிச் நகருக்குச் சென்றவர்கள். தமிழ் பேசும் மக்களைச் சிறுமைப்படுத்தும் இனவாதக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்ட பொன்சேகா மூலம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இப்போது இவர்கள் முயற்சிப்பதை என்னவென்று சொல்வது?
பொன்சேகாவைப் பொது வேட்பாளராக நிறுத்தினால் ஆதரிக்க முடியாது என்று கூறிய மனோ கணேசன் திடீரென மனம் மாறியதற்கான காரணம் என்ன?
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பொன்சேகாவைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று மனோ கணேசனின் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. இனப் பிரச்சினையின் தீர்வில் உண்மையாகவே அக்கறை உள்ளவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்க வேண்டும். இனப் பிரச்சினை தொடர்பான அண்மைக்கால வரலாற்றையும் சமகால யதார்த்தத்தையும் சரியாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் இதைத் தவிர வேறு முடிவுக்கு வரமாட்டார்கள்.
இனப் பிரச்சினையின் தீர்வு முயற்சி இன்று சிக்கலான நிலைக்கு வந்திருக்கின்றது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பிரதான பொறுப்பாளி. பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டத்தை எதிர்த்ததற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வெவ்வேறு தலைவர்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்ற போதிலும் உண்மையான காரணத்தை ரணில் கூறியிருக்கின்றார். அத்தீர்வுத் திட்டம் பிராந்திய சபைகளை உருவாக்குவதாலேயே எதிர்த்ததாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரணில் கூறினார்.
அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டத்தின் பிராந்திய சபை பெருமளவு அதிகாரங்களைக் கொண்ட அமைப்பு. அச்சபையின் அதிகாரங்களையும் எல்லைகளையும் சபையின் சம்மதம் இல்லாமல் எவ்விதத்திலும் மாற்ற முடியாது. இனப் பிரச்சினைக்கு இது மிகவும் உயர்வான தீர்வு.
பிராந்திய சபைகளை உருவாக்குகின்றது என்பதற்காக அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை எதிர்த்ததாக ரணில் கூறுவதன் அர்த்தம் இனப் பிரச்சினைக்கு உயர்வான தீர்வு வருவதை அவர் விரும்பவில்லை என்பதாகும்.
ரணிலின் இந்த முடிவினால் ஏற்பட்ட பாதகமான நிலைமைக்கு அவரைக் கண்ணை முடிக்கொண்டு ஆதரிக்கும் மகோகணேசனும் ரவூப் ஹக்கீமும் பதில் கூறியாக வேண்டும்.
அந்தத் தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அன்று ஆதரவளித்திருந்தால் இன்று இனப் பிரச்சினை இருந்திருக்காது. அண்மையில் இடம்பெற்ற அழிவுகள் ஏற்பட்டிருக்கமாட்டா. புலிகள் இயக்கம் அரசியல் அரங்கிலிருந்து மெல்ல மெல்ல மறைந்திருக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சி அன்று மேற்கொண்ட பிழையான முடிவினால் புலிகள் பலமடைந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்படும் நிலை ஏற்பட்டது. அரசியல் தீர்வு பற்றிப்பேசிய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படத் தொடங்கியதன் விளைவாகத் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகள் தலைதூக்கும் நிலை ஏற்பட்டது. அதன் படிப்படியான வளர்ச்சிப் போக்கு இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைச் சிக்கலான நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது.
பொன்சேகாவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று மனோ கணேசன் கூறுகின்றார். இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்று மேலோட்டமாக எல்லோராலும் கூற முடியும். தீர்வுக்கான சரியான திட்டமும் தெளிவான அணுகுமுறையும் இல்லாமல் தீர்வை அடைய முடியாது. சமகால யதார்த்தத்தையும் பல்வேறு சமூக சக்திகளின் ஒப்புவலுவையும் கவனத்தில் எடுத்தே அணுகுமுறையைத் தீர்மானிக்க வேண்டும். இந்த வகையில் சிந்தித்துச் செயற்படாமல் தமிழ்த் தலைவர்கள் கடந்த காலங்களில் யதார்த்தத்துக்குப் புறம்பாக உயர்வான தீர்வை வலியுறுத்தியதால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இன்று ஒரு படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத் திட்டத்தை வகுப்பதே பலன் தரக்கூடிய அணுகுமுறை.
இன்றைய நிலையில் அரசியல் தீர்வு முயற்சி பதின்மூன்றாவது திருத்தத்துடனேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். பதின்மூன்றாவது திருத்தம் பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் மனோ கணேசன் கேள்வி எழுப்புகின்றார். இத்திருத்தம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என்று சொல்கிறார்.
ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்குப் பின்னர் வருவோம். முதலில் மனோ கணேசன் தனது நேச அணியினரிடம் அக் கேள்வியைக் கேட்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணி பதின்மூன்றாவது திருத்தத்தை வன்மையாக எதிர்க்கின்றது. மனோ கணேசன் முதலில் இன்றைய நேச அணியான மக்கள் விடுதலை முன்னணியுடன் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டு மற்றவர்கள் பக்கம் திரும்பலாம்.
எதிரணியின் பொது வேட்பாளர் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க மேலான தீர்வு என்று கூறுகின்ற போதிலும் அவரிடமோ அவரை ஆதரிக்கும் கட்சிகளிடமோ அதற்கான எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் திட்டம் உண்டு.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதின்மூன்றாவது திருத்தத்துக்கு மேலான தீர்வு பற்றித் தேர்தல் காலத்தில் மாத்திரம் பேசவில்லை. தேர்தல் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னரே பதின்மூன்றாவது திருத்தத்துக்கு மேலான தீர்வு பற்றிப் பேசியிருக்கின்றார். அவ்வாறான தீர்வை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டமும் அவரிடம் உண்டு.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கின்றது. பதின் மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க மேலான தீர்வுக்கான ஆலோசனைகள் அந்த அறிக்கையில் உள்ளடங்கியிருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை அளிப்பது மக்களின் பொறுப்பு.
பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த பின் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக மனோ கணேசன் கூறுவதைக் கேட்பதற்கு நன் றாகத்தான் இருக்கும். ஆனால் நடை முறையில் சாத்தியமா என்று நிதானமாகச் சிந்திக்கும் போது இதிலுள்ள ஓட்டை தெரியும். பொன்சேகா ஏன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்ற கேள்வி இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்டது.
ஒரு வேட்பாளரை நிறுத்திப் போட்டியிடும் அளவுக்கு ஐக்கிய தேசிய கட்சியிடம் பலம் இல்லை. மக்கள் விடுதலை முன்னணியிடமும் இதே கதைதான். எனவே இரண்டு கட்சிகளும் கூட்டாக ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன. ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் இவை கூட்டாகப் போட்டியிடப் போவதில்லை. தனித்தனியாகவே போட்டியிடுவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான பலம் இல்லையென்பதால் மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து வேட்பாளரை நிறுத்தியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என்பது அளவுக்கு மிஞ்சிய கற்பனை.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது நடக்க முடியாத காரியம். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் எனக் கூறுவது வழமையான ஐக்கிய தேசியக் கட்சிப் பாணி ஏமாற்று.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் பெறும் மற்றைய விடயம் இடம் பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம்.
இடம் பெயர்ந்தவர்கள் நிவாரணக் கிராமங்களிலேயே தங்கவைக்கப் பட்டனர். அவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள போதிலும் அரசாங்கம் இயன்றளவுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது. அந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி போன்றன அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தன. இடம் பெயர்ந்த மக்களை அரசாங்கம் சிறை வைத்திருக்கின்றது என்று கூடக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இப்போது மீள்குடியேற்றம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. பெரும்பாலானோர் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட்டுவிட்டனர். எஞ்சியவர்களும் விரைவில் மீளக் குடியேற்றப்படுவர். முகாம்களில் உள்ளவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களின் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டைப் பலர் பாராட்டுகின்றார்கள். முன்னர் விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராட்டுத் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடு தலை முன்னணியும் கூட்டாக நிறுத்தி யிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் இராணுவத் தளபதியாகத் தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் ‘இடம் பெய ர்ந்தவர்களை இப்போதைக்கு மீள் குடியேற்றக் கூடாது’ எனக் கூறினார்.
இராணுவத் தளபதியாக இவர் கூறிய இக்கூற்றை அரசாங்கத்துக்கு வழங்கிய ஆலோசனையாகவே கொள்ள வேண்டும். அரசாங்கம் அவரின் ஆலோசனையை ஏற்கவில்லை. மீள்குடியேற்ற நடவடிக்கையைத் துரிதப்படுத்தியது.
தினகரன் 06.12.2009
No comments:
Post a Comment