ஜனாதிபதி மஹிந்தவுக்கு பூரண ஆதரவு வழங்க 64 தொழிற்சங்கங்கள் தீர்மானம்
பல்வேறு துறைகளைச் சார்ந்த 64 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பூரண ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளன. கொழும்பு மகாவலி நிலையத்தில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவை இதனை அறிவித்தன.
64 தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பொன்றை அமைத்துள்ளதாகவும் இந்தத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகார பணிப்பாளர் நாயகம் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே அதிகாரி ஒருவரை நியமித்தார்.
மூன்று மாதத்துக்கு ஒரு தடவை தொழிற்சங்கங்களை சந்தித்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக உழைக்க உள்ளன என்றார்.
அரச சேவை தொழிற்சங்க சம்மோனத் தலைவர் டபிள்யு. பியதாஸ கூறியதாவது,
2001 - 2004 இடையிலான ஐ. தே. க. ஆட்சிக் காலத்தில் அரசாங்க நிறுவனங்களை தனக்கு நெருக்கமானவர்க ளுக்கு குறைந்த விலைக்கு விற்பதையே ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் பிரதானமாக மேற்கொண்டு வந்தது. 6 இலட்சமாக இருந்த அரசாங்க ஊழியர்கள் 3 இலட்சமாக குறைக்கப்பட்டனர். ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது.
ஆனால் 2005 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு அரச நிறுவனத்தை கூட தனியார் மயப்படுத்தவில்லை. 7 இலட்சமாக இருந்த அரசாங்க ஊழியர்களை 12 இலட்சமாக அதிகரித்தார். மீண்டும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
யுத்தத்திற்கு மத்தியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டன என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்க செயலாளர் லெஸ்லி தேவேந்திர கூறியதாவது,
கடந்த காலங்களில் யுத்தத்தை காரணங்காட்டி தொழிற்சங்கங்கள் ஒடுக்கப்பட்டன. அபிவிருத்திப் பணிகள் நிறுத்தப்பட்டன. அரசாங்க பணம் மோசடி செய்யப்பட்டது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாடு அபிவிருத்தி செய்யப்பட்டது.
3 மாதத்துக்கு ஒரு தடவை தொழிற்சங்கங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை செவிமடுக்கவும் தீர்க்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகா ஏகாதிபத்தியவாதிகளின் தேவைகளை நிறைவேற்றும் கையாளாக மாறியுள்ளார் என்றார்.
லங்கா தொழிற்சங்க சம்மேளனப் பிரதிச் செயலாளர் ஜகத் பிரேமசந்திர கூறியதாவது,
1994 இல் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்க மேம்பாட்டுக்கு பெரிதும் பாடுபட்டார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அவர் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக செயற்பட்டு அவற்றின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் என்றார்.
தொழிற்சங்கத் தலைவர், பண்டார பதுரேகம கூறியதாவது, ஐ. தே. க. ஆட்சியில் தொழிற்சங்கங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் பேசி தொழிற்சங்க பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றார். (ஐ - ஜ)
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment