Tuesday, December 22, 2009

3 விண்வெளி வீரர்களுடன் ரஷிய விண்கலம் விண்ணில் சீறி பறந்தது

ரஷிய விண்கலம் சோயுஸ் டி எம் ஏ-17, நேற்று கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைகானூர் ராக்கெட் தளத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விண்கலத்தை சோயுஸ் ராக்கெட் சுமந்து கொண்டு நேற்று அதிகாலை 5.22 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது.

ரஷிய விண்வெளி வீரர் ஒலெக் கோடோவ், அமெரிக்க வீரர் டிமோதி கிரீமர், ஜப்பான் வீரர் சோய்ச்சி நோகுச்சி ஆகியோர் இந்த விண்கலத்தில் பயணம் செய்கிறார்கள். இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையை திட்டமிட்டபடி அடைந்தது என்று கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார். நாளை 23-ந் தேதி இந்த விண்கலம், விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைகிறது.

அதன் பிறகு இந்த 3 விண்வெளி வீரர்களும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த அக்டோபரில் இருந்து தங்கி இருக்கும் விண்வெளி வீரர்கள் ஜெப் வில்லியம்ஸ் (அமெரிக்கா), மாக்சிம் சுராவே (ரஷியா) ஆகியோருடன் இணைந்து செயல்படுவார்கள். ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்று இருக்கும் இந்த 2 வீரர்களும் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகிறார்கள். இப்போது விண்வெளிக்கு சென்று இருக்கும் 3 வீரர்களும் 126 நாட்கள் அதாவது மே மாதம் வரை அங்கு தங்கி இருப்பார்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com