26/11 பாணியில் லண்டனில் தாக்குதல்- ஸ்காட்லாந்து போலீஸ் எச்சரிக்கை
மும்பை யில் தீவிரவாதிகள் புகுந்து வெறித் தாக்குதல் நடத்தியது போல அடுத்த ஆண்டு துவக்கத்தில் லண்டனில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் எச்சரித்துள்ளனர். லண்டன் நகரில் உள்ள சில முக்கிய தொழிலகங்களை குறிவைத்து மும்பை 26/11 பாணியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு தகவல்கள் கிடைத்ததை அடுத்து லண்டனில் உள்ள தீவிரவாத தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
புலனாய்வுத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் முக்கியமான 'ஜிகாதிஸ்ட்' இணையதளத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்களும் 'சாட்டிங்' மூலம் பரிமாறப்பட்டுள்ளதை போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
லண்டனில் உள்ள நைட்கிளப், விளையாட்டு மையங்கள், போலீஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறக் கூடு்ம் என கணிக்கப்படுகிறது.
எவ்வித சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் லண்டன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீவிரவாத தாக்குதல் சதி உண்மையானதாக இருக்கும் என நாடாளுமன்ற தீவிரவாத எதிர்ப்பு துணைக் கமிட்டியின் தலைவர் பாட்ரிக் மெர்சர் கூறியுள்ளார்.
வர்த்தக நிறுவனங்கள் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் அதை சமாளிப்பது, துப்பாக்கிச் சூட்டிலிருந்து எப்படித் தற்காத்துக் கொள்வதை, பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டால் எப்படி தப்ப முயல்வது என்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை பார்த்துக் கொள்ளுமாறும் ஸ்காட்லாந்து யார்டு அறிவுறுத்தியுள்ளது.
முன்பு ஊகமாக இதுகுறித்த தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது உறுதியான தகவல்கள் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் லண்டன் மக்கள் உஷாராக இருக்கமாறு போலீஸார் எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
லண்டன் பெருநகர போலீஸார் தீவிரவாத தாக்குதல் அபாயம் குறித்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment