Wednesday, December 16, 2009

பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா ஜனாதிபதி தேர்தலில் போட்டி. மொத்தம் 21 வேட்பாளர்கள்

எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பங்குகொள்வதற்காக பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். இதுவரை குறிப்பிட்ட தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக 17 வேட்பாளர்களும் சுயேட்சையாக 4 வேட்பாளர்களுமாக மொத்தம் 21 பேர் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளர் கட்டுப்பணமாக 50000 ரூபாவையும் சுயேட்சை வேட்பாளர் கட்டுப்பணமாக 75000 ரூபாவையும் செலுத்தவேண்டும் என தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பரபைஸ் வரவேற்பு மண்டபத்தில் 13.12.2009 நடைபெற்ற பிரதேச மக்களுக்கு தனது முடிவை அறிவிக்கும் கூட்டத்தில் எம்.எம்.மயோன் முஸ்தபா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டிலுள்ள சகல இன மக்களும் சுதந்திரமாக தாம் நினைத்த எந்த இடத்திற்கும் சென்று வர வழியமைத்துக் கொடுத்ததோடு, மக்கள் எந்தவித தடையுமின்றி தமது நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் சிறுபான்மை மக்கள் அன்று தொட்டு இன்று வரை எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவு காணாத ஒரு நிலை காணப்படுவதால் தனது பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற பதவிகளை துறக்க மக்களின் ஆசியுடன் முடிவு செய்துள்ளேன்.

1994 ஆம் ஆண்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக முதன் முதலில் பாராளுமன்ற தேர்தலில் குதித்த நான் இன்று வரை அரசியலில் பல தியாகங்களை என்னை நம்பியிருக்கும் மக்களுக்காக செய்து வந்துள்ளேன். எனக்குக் கிடைத்த காலத்திற்குள் மக்களுக்காக எனது கடமையை சரியாக செய்துள்ளதுடன் என்னிடம் ஒப்படைத்த அமானிதமான உயர்கல்வி பிரதியமைச்சர் பதவியையும் துறக்க முடிவுசெய்துள்ளேன்.

எனது அபிலாசைகளையும் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்குகின்ற அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் தான் எதிர்காலத்தில் முன்மொழியவுள்ள திட்டங்களையும் இலங்கை வாழ் சகல மக்களுக்கும் தெளிவுபடுத்துவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளேன் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment