Thursday, December 3, 2009

புலிகளிடம் 14 கப்பல்கள்; கே.பியின் பெயரில் 600 வங்கிக் கணக்குகள்,


5 கப்பல்கள்; மூன்றை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை :
புலிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடு

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசுட மையாக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புலிகளிடம் 14 கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பெயரில் மாத்திரம் ஐந்து கப்பல்களும் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கே.பியின் பெயரிலுள்ள ஐந்து கப்பல்களில் மூன்று கப்பல்களை இலங்கைக்கு எடுத்துவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த சொத்துக்களை சுவீகரிப்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.

இதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள குழுக்களிடமும் தனி நபர்களிடமும் தற்போது இருக்கும் புலிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசாங்க புலனாய்வுத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். தற்பொழுது தனி நபர்களினதும், குழுக்களினதும் கட்டுப்பாட்டிலுள்ள சொத்துக்களை அரசு சுவீகரிக்கவுள்ளது.

கே.பி.யின் பெயரில் உள்ள சுமார் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
புலிகளின் நிதி மார்க்கங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப் பதற்காகவே கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றார். கே.பி.யின் வங்கிக் கணக்குகளின் மொத்த பெறுமதி தொடர்பாக இன்னும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார, கடற்படை பேச்சாளர் கெப்டன் அதுல செனரத், பொலிஸ் ஊடகப் பேச்சாளர்களான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com