உலகத் தொலைக்காட்சி தினம் (World Television Day) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தொலைக்காட்சியினூடாக சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருளாக கொள்ளப்படுகின்றது.
'தொலைவில் தெரியும் காட்சி" என்று தொலைக்காட்சி பொருள் பட்டாலும்கூட, பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியைக் குறிக்கும் ஒரு பதமாகவே இன்று இது பயன் படுத்தப்படுகின்றது. தொலைக்காட்சி என்பது கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி, ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது. இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும், கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தரப்படுகின்றது. நேரில் காணமுடியாத சம்பவங்களைக் கூட கண்டுகளித்திட தொலைக்காட்சி உறுதுணையாக விளங்குகின்றது என்பது மறுக்க முடியாததாகும். தொலைக்காட்சி கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.
1996-ஆம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21 ஆம் திகதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் டிசம்பர் 17, 1996 இல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தின்படி இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997-ம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. மேற்படி கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது.
இத்தினத்தில் தொலைக்காட்சியின் கண்டு பிடிப்பு பற்றி சற்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். 1926ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு எனும் அறிவியலறிஞர்தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். ஆனால் தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 'பில்லோ பான்ஸ்வர்த்' என்பவர் தொலைக்காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபைக் 'விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின்" என்பவர் கண்டுபிடித்தார். இருப்பினும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் தொலைக்காட்சியைக் அறிமுகம் செய்தவர் என்பதினால் 'ஜோன் லூகி ஃபெர்டு" 'தொலைக்காட்சிக் கண்டுபிடித்தவர்" என்று இனங்காட்டப்படுகின்றார். இயந்திரத் தொலைக்காட்சியை மட்டுமல்லாமல் ரேடார் தொழில்நுட்பம்இ 'பைபர் ஆப்டிக்ஸ்" என ஜோன் லூகி ஃபெர்டு இன் பங்களிப்பு முக்கியம் பெறுகின்றன.
ஸ்கொட்லாந்தில் பிறந்து வளர்ந்த 'ஜோன் லூகி ஃபெர்டு"டைய ஆய்வின் அடிப்படை ஸ்கொட்லாந்திலே ஆரம்பமானது. 'இயந்திரங்கள், மோட்டார், மின்சாரம்' போன்றவற்றில் 'ஜோன் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்.'Wireless World', 'Wireless Weekly' போன்ற வாரசஞ்சிகைகளை தொடர்ந்தும் வாசித்து வந்த ஜோன் 'டெலிவிஷன்' என்ற வார்த்தையை 1900-ல் பாரீஸ் மின்சார மாநாட்டில் கான்ஸ்டின் பெர்சிகி என்றவர் ஆற்றிய உரையின் சுருக்கத்திலிருந்து கண்டெடுத்தார்.
'தொலைவிலிருந்து பார்ப்பது' எனப் பொருள்படும் 'டெலிவிஷன்' என்ற வார்த்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பலரும் பல அமைப்புகளும் அப்படியொரு இயந்திரத்தை உருவாக்க முனைந்திருந்திருந்தனர். இந்த வகையில் 'பால் நிப்கோ" எனும் ஜெர்மனிய ஆய்வாளரின் ஆய்வுகள் ஜோனை வெகுவாகக் கவர்ந்தன. ஒரு விம்பத்தை மறு உருவாக்கம் செய்யும் முறையை 'பால் நிப்கோ" கண்டுபிடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முழுமையான தொலைக்காட்சியை ஏன் உருவாக்க இயலாது என ஜோன் சிந்தித்து வந்தார். தனக்கிருந்த தொழில் நுட்ப அறிவினைப் பயன்படுத்தி அதற்கான ஆய்வுகளில் முழு மூச்சாய் இறங்கினார். இதனைத் தொடர்ந்தே அவருடைய வாழ்க்கையில் தொழில் முறைச் சிக்கல்கள், பணப் பிரச்சினை, மனவிரக்தி ஆகிய போராட்டங்கள் ஆரம்பமாகின. இருப்பினும் தமது முயற்சியைக் கைவிட்டு விடவில்லை. இலண்டனுக்குத் தெற்கே சுமார் அறுபது மைல் தொலைவில் ஜோன் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். பணப் பிரச்சினை காரணமாக ஜோனின் ஆய்வுக் கூடத்தில் பழைய தட்டுமுட்டுச் சாமான்களே நிறைந்திருந்தன. பொருளாதார பலத்துடன் வேறு பல விஞ்ஞானிகளும் அதே ஆய்வுகளில் ஈடுபட்டிருந்ததனால், அவர்களுக்கு முன்னர் தனது கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டிய அவசியமும் ஆர்வமும் ஜோனுக்கு இருந்தது.
நிப்கோவின் கண்டுபிடிப்பைச் சார்ந்து 'டெலிவிசர்' என்னும் தொலைக்காட்சிப் பெட்டியை 1923-இல் ஜோன் உருவாக்கினார். 1924-இல் ஜோன் இலண்டனில் குடியேறினார். அந்த வருடத்திலே ஒரு கடையில் ஜானின் 'டெலிவிசர்' பொது மக்களுக்கு இயக்கிக் காட்டப்பட்டது. ஒரு பொம்மையின் உருவத்தை மக்கள் திரையில் கண்டு களித்தார்கள். 1925-ஆம் ஆண்டு அக்டோபரில் ஜோன் தனது கண்டு பிடிப்பை மேலும் மேம்படுத்தினார். விளக்கு ஒளியில் பயந்தவாறே காமிராவின் முன் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவன்தான் தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனிதன்.
1926-ஆம் ஆண்டில் இங்கிலாந்து 'ராயல் இன்ஸ்டியூசன்' முன்பு ஜோன் தனது தொலைக்காட்சிக் கருவியை இயக்கிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து ஜோனின் ஆய்விற்குப் பிரித்தானிய தபால் நிறுவனத்தாரின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிட்டியது. இலண்டனிலும் அதனருகே புறநகர் பகுதி ஒன்றிலும் ஆய்வுக்காக இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைக் கட்டடங்கள் நிறுவப்பட்டன. இதனைப் பயன்படுத்தி ஜோன் பல சாதனைகளை நிகழ்த்தத் தொடங்கினார். இலண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு (438 மைல் தொலைவு) தொலைக்காட்சி அலைவரிசைப் பரிமாற்றம் நிகழ்ந்தது. 1928-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து கடல் கடந்து நியூயார்க் நகருக்குத் தொலைக்காட்சி அலைவரிசைப் பரிமாற்றம் நிகழ்ந்தது.
சாதனைகள் ஜோனை மக்களிடத்தில் பிரபலப்படுத்தின. வெறும் வானொலி நிலையமாய் இருந்த பி.பி.சி. (பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) யிடம் தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி கேட்டபொழுது, அவரது கோரிக்கையை பி.பி.சி. நிராகரித்தது பி.பி.சி.யின் துணையில்லாமல் தன்னால் தனியே ஒளிபரப்பைத் தொடங்க முடியுமென்று கருதிய ஜோன் 1929-இல் பெர்லினிலிருந்து தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தார். பத்திரிகைகளின் பலத்த கண்டனத்தினால் பி.பி.சி. தனது நிலையை மாற்றிக் கொண்டு 1929 செப்டம்பரில் ஜோனுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது.
1933-ஆம் ஆண்டில் விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின், 'கேத்தோடு டியூபை"க் கண்டுபிடித்திருந்தார். அவருடைய முயற்சியினால் உருவாகிய 'All Electronic Scanning System' ஜோனின் தொலைக்காட்சியைக் காட்டிலும் தெளிவான படங்களை ஒளிபரப்பும் திறமையைக் கொண்டிருந்தது. இதனைக் காரணம் காட்டி பி.பி.சி. ஜோனுடன் தனது உடன்படிக்கையை முறித்துக் கொண்டு புதிதாய் நிறுவப்பட்ட 'EMI' நிறுவனத்தாருடன் பி.பி.சி. தன்னை இணைத்துக் கொண்டது. ஸ்வாரிகினின் நிறுவனமான 'RCA'யும், ''EMI' 'யும் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட தொலைக்காட்சிச் சேவையைத் தொடங்கின. உலகத்தையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவது இந்த மூன்று நிறுவனங்களின் நோக்கமாய் இருந்தது. இதனால் சிறு கண்டுபிடிப்பாளரான ஜோன் லூகி பெர்ட் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
இந்நிலையில் ஜோனிற்கு 'கேமாண்ட் பிரிட்டிஷ்' என்ற நிறுவனம் உதவி செய்ய முன் வந்தது. இயந்திரத் தொலைக்காட்சியின் மூலமாகவே புதிதாய் அறிமுகமான ஸ்வாரிகின்னின் இயந்திரத்தை மிஞ்ச முடியுமென ஜோன் முழுமையாக நம்பிக்கை கொண்டார். 'கேமாண்ட் பிரிட்டிஷ்' நிறுவனம் பில்லோ ·பாரன்ஸ்வர்த் என்கிற அமெரிக்க இளைஞனை ஜோனுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த அமெரிக்க இளைஞன் 'பாரன்ஸ்வர்த்", கேத்தோட் டியூபை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த ஒளிபரப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்திருந்தார். ஜோனும் பாரன்ஸ்வர்த்தும் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டு ஜோனின் முந்தைய கண்டுபிடிப்புகளையெல்லாம் மிஞ்சும் சாதனையைச் செய்தாலும், ''EMI' நிறுவனத்தாரின் ஆய்வு, முன்னேற்றத்தில் அவர்களுக்கு ஒரு படி முன்னே இருந்தது.
1937-38 வருட வாக்கில் ஜோன் மெல்ல மெல்லத் தனது ஆய்வுகளிலிருந்து ஒதுங்கித் தனிமையில் காலங் கடத்தலானார். தொடர்ந்து அவரது முக்கிய ஆய்வகம் நெருப்பில் அழிந்து போனது. எனினும் ஜோனின் மற்றொரு கண்டுபிடிப்பான தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றுக் கொள்ளும் சாதனம் பிரபலமடைந்தது. 1940-ஆம் வருடம் ஜோனின் நிறுவனம் 'சினிமா தொலைக்காட்சி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஜோனின் புது முயற்சி, இரண்டாம் உலகப் போரினாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினாலும் பல பிரச்சினைகளைச் சந்தித்தது. முடிவாகத் தன்னுடைய 'இயந்திரத் தொலைக்காட்சி' ஆய்வுகளைக் கைவிட்ட ஜோன், கேத்தோட் டியூப்களைக் கொண்டு ஆய்வுகளை நிகழ்த்தினார். வண்ணங்களையும் தொலைக்காட்சியில் கொண்டு வர முடியுமென ஜோன் நம்பினார். அதற்கான முயற்சிகளில் ஜோன் தீவிரமாக ஈடுபட்டு அதனை 1943-−ல் நிரூபிக்கவும் முயன்றார். அவருடைய முயற்சி தோல்வி எனினும் பின் வந்த காலங்களில் அவருடைய முயற்சிகளே வண்ணத் திரைக்கு அடிப்படையாக அமைந்தது. வண்ணத்திரைக்கு மட்டுமல்ல மின் (Electronic) துறையில் ஜோனின் பல முயற்சிகளே பின்னர் மற்றவர்களால் சாதனைகளாகவும் புதுக்கண்டுபிடிப்புகளாகவும் மாறின. 1946 ஜூனில் ஜோன் மரணமடைந்தார்.
இந்த அடிப்படையில் வளர்ச்சி கண்ட தொலைக் காட்சி தற்போது பல விதமான தொழிநுட்ப மாற்றங்களுடன் மிக முக்கியமான தொலைத் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. தொலைநுட்பத்தில் முன்னேறியுள்ள இக்காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் நடைபெறக்கூடிய தகவல்களை காட்சியுடன் உடனுக்குடன் அனைவருக்கும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பொது ஊடகமாகவே தொலைக்காட்சி திகழ்கின்றது. நவீன காலத்தில் சம்சொங் 102 அங்குலம், எல் ஜி 102 அங்குலம், பேனசானிக் 103 அங்குலம். இவை, பல்வேறு வணிக நிறுவனங்கள் காட்சிக்கு வைத்துள்ள மிக தெளிவான plasma தொலைக்காட்சிப் பெட்டிகளின் அளவுகளாகும். போட்டியின் முடிவில், 103 அங்குலம் அளவுடைய பேனசானிக் தொலைக்காட்சிப் பெட்டியே உலகில் மிக பெரிய plasma தொலைக்காட்சிப் பெட்டியாக விளங்குகின்றது.
இக்காலத்தில் மிக சிறிய செல்லிட தொலைபேசியிலும் தொலைக்காட்சியை காணக்கூடியதாக உள்ளது. சம்சொங் நிறுவனம் தயாரித்த Q1 என்னும் மிக சிறிய செல்லிட கணிணியின் திரை உள்ளங்கை அளவுடையதாக மட்டுமே இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் பெரிய அன்டனாக்கள் துணையுடன் இயங்கிய தொலைக்காட்சி, கேபல் தொலைக்காட்சி, இன்று செட்லயிட் தொலைக்காட்சி என்று நாளுக்கு நாள் வடிவமைப்புக்களிலும் முன்னேறிக் கொண்டேயுள்ளது.
தொலைக்காட்சி எனும்போது மூன்றாம் உலக நாடுகளில் ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக இலங்கை, இந்திய போன்ற நாடுகளில் திரைப்படங்களையும், நாடகங்களையும், மெகா சீரில்களையும் காண்பதற்கான ஒரு ஊடகம் என்ற ரீதியில் பெரும்பாலும் கருதப்படுகின்றது. ஆனால், தொலைக்காட்சி என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மாத்திரமல்ல. இன்றைய தொலைக்காட்சி சேவைகளில் காணப்படும் போட்டி காரணமாக நேயர்களை கவர்ந்திழுப்பதற்காக வேண்டி பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும்கூடää தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த பல விடயங்களும் பொதிந்திருப்பதைக் காணலாம். கல்விää அறிவியல்ää கலாசாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம், நாட்டு நடப்புகள், நிகழ்கால விடயங்கள்... என்று பல நல்ல பக்கங்களும் காணப்படுகின்றன.
எமது இலங்கையில் முதல் முதலாக 1978ம் ஆண்டு ஐ.டீ.என். தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் அரச தொலைக் காட்சி சேவையாக ரூபவாஹினி உள்ளது. காலப் போக்கில் தனியார் தொலைக்காட்சிகளும் தமது ஒளிபரப்புக்களைத் தொடங்க அரசாங்கங்களினால் அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரம் இலங்கையில் தற்போது 15க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சி சேவைகள். காணப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ஆம் ஆண்டு முதன் முதலாக டில்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கியது. சுமார் 15 ஆண்டுகள் கழித்து கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பும் துவங்கியது. இந்திய நாட்டில் தூர்தர்ஷனை மட்டுமே நம்பிய காலம் மாறி இன்றைய கால கட்டத்தில் செயற்கைக் கோள் ஒளிபரப்பின் மூலம் அதிகமான அலைவரிசைகளைக் காண முடிகின்றது. புதிய அலைவரிசைகளின் பிரவேசத்தினால் வேலைவாய்ப்புக்கள், விளம்பர செயற்பாடுகள் என்றும் இல்லாத அளவிற்கு பல்கிப் பெருகின என்றும் கூறலாம். அநேகம் பேர் தனியார் தொலைக்காட்சிகளிலும் பணிபுரியலாயினர். ஊர்கள் தோறும் கேபிள் டி.வி. வைத்து தொழில் தொடங்கி வரும் பலரும் நன்மை அடைந்தனர்.
விண்வெளியிலிருந்து வானலைகளைத் திரட்டுவதோடு மட்டுமல்லாமல் கேபிள்கள் (கம்பிகள்) வாயிலாக, அவற்றை வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்புச் செய்வதற்கும் இச்சாதனம் பயன்படுகிறது. இது "சமுதாய அலைவாங்கித் தொலைக்காட்சி ''(Community Antenna T.V.--CAT)" என அழைக்கப்பட்டது. ஆற்றல் வாய்ந்த அலைவாங்கிகளில் கேபிள்களை இணைத்து மிகுதியான பரப்பளவில் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டெனாவை (antenna) மொட்டை மாடியில் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் சிக்னலைக் கொண்டு தொலைக்காட்சி பார்த்தனர். பின்னர் டிஷ் ஆண்டெனா (dish antenna), கேபிள் டிவி வந்தது. இப்போது டிடிஎச் (DTH) வந்து அசத்துகிறது – விலையும் மிகமிகக் குறைந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் தேடுதல் வேட்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதன் விளைவால் இப்போது செல்பேசி (cell phone) கருவியிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இதற்கு மொபைல் டிவி (Mobile TV) எனப் பெயர்.
எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றித் தொடர்ந்து பார்ப்பவர்களது கண்கள் பாதிப்படைகின்றன என்றும் கூறப்படுகின்றது. . இளைஞர்களது கவனம், கற்கை நெறிகளிலிருந்து சிறிது மாற்றம் பெறுவதையும் கவனிக்கலாம். தொலைக்காட்சி விளம்பரமாக மது, நிதி நிறுவனம் போன்றவை காட்டப்படும் போது மனது சஞ்சலமடைகின்றது. இதன் மூலம் மக்கள் தவறான பாதையில் செல்லவும் நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. புதிய சினிமாப்படங்கள் கேபிள் டி.வி. மூலம் போடப்படுவதினால் திரைப்பட இயக்குநர் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றார்.
இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment