பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும். 2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், 'உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரத்தில் கென்யாவில் உள்ள பெண்களில் சரி பாதி வீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபோம் கூறியுள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.
டொமினிக்கன் குடியரசில் Dominican Republic, 1960 நவம்பர் 25 இல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின் Rafael Trujillo (1930-1961). உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே விசேடமாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பிரபல்யமான இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் அந்தத் தினம் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படுபவைகளும் உள்ளவை மிக அதிகமானவைகளாகும்.
பெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பாடசாலைகளில்... இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கெல்லாம் உள்ள முதலாளிகள், நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள், ஒப்பந்தகாரர்கள், சில ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரமுள்ள நபர்கள், நிறுவனத் தலைவர்கள் போன்றவர்களாலும் சட்ட ஒழுங்கு, பாதுகாவலர்கள் என குறிப்பிடப்படும் காவல்துறை, நீதித்துறை மற்றும் செய்தி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. மறுபுறமான குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளுக்கு உட்படுகின்றனர்.
பொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம். துஸ்பிரயோகம், அசிட் திராவகம் வீச்சு, குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை மரணங்கள், பெண் இன உறுப்பை சேதமாக்குதல், பெண் சிசுக் கொலை, இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி, கொலைகள், உடல்ரீதியிலான வன்முறைகள், உளவியல் ரீதியிலான வன்முறைகள், பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியிலான வன்முறை, பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள், பாலியல் அடிமை தரக்குறைவாக நடத்துதல் போர்க் குற்றங்கள்....இவ்வாறாக பல வடிவங்களில் இடம்பெறலாம்.
இங்கு துஸ்பிரயோகம் எனும் போது பெண்களின் சகல நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுதல், உண்மைக்கு புறம்பாக எப்பொழுதும் செயற்படத்தூண்டுதல், மதுபானம் அல்லது போதைவஸ்து போதையில் வக்கிர உணர்வை வெளிப்படுத்துதல், பணம் செலவு செய்வது தொடர்பாக கட்டுப்படுத்தல், பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தல், சொத்துக்கள், பொருள்களை சேதப்படுத்தல், துன்பமடையும் வகையில் பிள்ளைகள் அல்லது செல்லப்பிராணிகளை துன்புறுத்தல் அல்லது எச்சரித்தல், அடித்தல், கடித்தல், தள்ளுதல், குத்துதல், உதைத்தல், கிள்ளுதல் போன்ற செயல்களினூடாக மேற்குறிப்பிட்ட துன்புறுத்தல்கள் அல்லது எச்சரிக்கைகள் அமையலாம். ஆயுதங்களினால் தாக்குதல், விருப்பத்திற்கு மாறாக பாலியல் புணர்ச்சிக்காக கட்டாயப்படுத்துதல், சின்னச்சின்ன விடயங்களிலும் விமர்சிக்கப்படல் அல்லது குற்றம் சாட்டுதல் என்பன அடங்கும். துஸ்பிரயோகத்திற்குள்ளாகி இருக்கும் நபர் ஒருவர் அல்லது அவரைச் சார்ந்தோர் குறிப்பிட்டநபர் துஸ்பிரயோகத்திற் குள்ளாக்கப்படுகிறார் என்பதை உணர்வதோ அல்லது அடையாளம் காண்பதோ சில சந்தர்ப்பங்களில் மிகவும் கடினமாகி விடுகிறது. சிலர் விளையாட்டாக சில விடயங்களை செய்தாலும் அவை பாராதூரமான நோக்குடையதாக இருந்தால் அவையும் வன்முறையே.
பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் எனும் போது அண்மைக்கால அறிக்கைகளின் படி மிகவும் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, பணம் அல்லது பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக, சைகைமுலமான எச்சரிக்கையாக, வேறு நபர்களைத் தூண்டி விட்டு எச்சரிக்கை செய்வதாக, அச்சுறுத்தலின் கீழ் தன் விருப்பத்துக்கு மாறாக நடக்கச்செய்வதாக, தனிமைப்படுத்தி விடுவதாக, சூழ்ச்சி மனோபாவத்துடன் நடப்பதன் மூலமாக, சுயகௌரவம் தன்மானத்தை இழக்கும் படி செய்வதனூடாக, அச்சத்தை அல்லது பீதியை ஏற்படுத்தலூடாக, உடல்நலக்குறைவை ஏற்படுத்துதல் அல்லது மருத்துவ சிகிச்சையை புறக்கணிப்பதனூடாக இத்தகைய குடும்ப வன்முறை இடம் பெறலாம். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் சீதனம் காரணமாகவும், பெண்கள் பல வன்முறைகளுக்கு உட்படுகின்றனர். பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளின் போது பெரும்பாலானவை குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வெளியே வருவதில்லை.
குடும்ப வன்முறை இனம், சமயம், பால், வயது போன்ற எந்த வேறுபாடின்றி யாவருக்கும் நடக்கலாம். குடும்ப வன்முறையானது வருமானத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கல்வி நிலையில் பின்னடைவை ஏற்படுத்தத் தவறுவதில்லை. குடும்ப வன்முறையானது அந்நியோன்னியமாக ஒன்றாக வசிக்கும் எதிர்ப்பாலாருக்கிடையில், ஒரே பாலாருக்கிடையில், அல்லது ஒன்றாக வசிக்கும் நண்பர்களுக்கிடையில் இடம்பெறலாம் .
பெண்களுக்கெதிரான வன்முறைகளுள் பாலியல் வன்முறையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. பாலியல் வன்முறை எனும் போது விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி உறவு கொள்ள நிர்ப்பந்திப்பது, விருப்பத்துக்கு மாறாக பாலியல் தூண்டல்களை ஏற்படுத்தக்கூடியவாறான நடத்தைகளை புரிதல், ஏமாற்றி அல்லது ஆள்மாறாட்டம் செய்து உறவு கொள்ளச் செய்தல், ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் அல்லது பானத்துடன் போதை தரக்கூடிய பொருளைக் கலந்து கொடுத்து உறவு கொள்வது, துணையின் சம்மதமில்லாமல் உறவு கொள்வது என்பனவும் பாலியல் வன்முறைக்குள் அடங்குகின்றன.
அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிருந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா, கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்களாக 192 நாடுகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு அல்லது கடத்தி வரப்படும் பெண்களும், சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள். புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும். இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது. புவியியல் அடிமைகள் பிரச்சினை, அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படுத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல்கள் சிக்கல்கள் எங்குமே காணப்படுகின்றன.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்படும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை சரியான முறையில் அறிய முடியாவிட்டாலும் கூட அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைகளாக ஒவ்வொருவருடமும் கடத்திவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எந்த நேரமாக இருக்கட்டும், நெருக்கடிமிக்க பஸ்களிலும், ரயில்களிலும் பெண்கள் பிரயாணம் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமொன்றை அளிக்காது. உடல்களை வேண்டுமென்று தொடுவதற்கு மேலதிகமாக, ஆபாசமான விதத்தில் அபிநயம் காட்டுவதும் அசௌகரியமாகத் தோற்றமளிப்பதும் பெண்களுக்கு அது ஒரு பயங்கரமான அனுபவமாகவே முடிகின்றது. இது குறித்து அண்மையில் கணிப்பீடு ஒன்று இலங்கையில் நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக 200 பெண்கள் அளவீடு செய்யப்பட்டனர். இவர்களில் 188 பெண்கள் தனியார் பஸ்களில் பிரயாணம் செய்யும்போது வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஏதோ ஒரு வேளையில் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர். இள வயதான பெண்களே, குறிப்பா 11க்கும் 20க்கும் உட்டபட்டவர்களே அதிகளவு ஊறுபடும் நிலையில் இருந்திருக்கின்றனர்.
குற்றமிழைப்பவர்கள் பெரிதுமே 35 வயதுக்கு மேற்பட்ட கௌரவமான ஆண்களாவார். பெண்கள் தனியாக பிரயாணம் செய்யும் போது அவர்கள் பலிகடாவாகின்றார்கள். ஒவ்வொருவருமே கணவருடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பிரயாணம் செய்யும் போது தொந்தரவு செய்யப்படவில்லை என நேர்முகங்காணப்பட்ட பெண்கள் தெரிவித்திருந்தனர். உடல் ரீதியாக தொடுதல் பொதுவானதாகும். ஆனால் பாலியல் பகிடிகள், உடல், உடைகள் பற்றிய கெட்ட கருத்துக்கள், முத்தமிடும் ஒலிகள், விசில் அடிக்கும் ஒலிகள் கூக்காட்டுதல் ஆகியவற்றையும் ஆண்கள் மேற்கொள்கின்றனர். அவர்கள் பாலியல் பொருட்களையும், புகைப்படங்களையும் காட்டுகின்றார்கள். பஸ்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் போது பெண்களையும், யுவதிகளையும் தொந்தரவு செய்வதற்கு அவர்களுக்கு அதிகளவுவாய்ப்பு கிட்டியது.
தரக்குறைவாக நடத்துதல் எனும் போது நவீன காலத்தில் e - mail, SMS, MMS, தொலைபேசி தபால் போன்ற எந்த ஒரு தொடர்பு சாதனத்தின் ஊடாக திரும்ப அவசியம் எதுவும் இல்லாமல் மீள, மீள தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தல் அல்லது அச்சுறுத்தல். போன்றவையாகும். அத்துடன் குறிப்பிட்ட பெண்கள் மீது அவதூறு பேசுதல் அல்லது அவதூறு பரப்புதல். அவ்வாறு குறிப்பிட்ட நபர் பற்றிய அத்தகவல் மற்றும் சுய தகவல்களை பிறரின் பார்வைக்கு வைத்தல் இதற்காக இணையம் அல்லது ஏனைய தொடர்பு சாதனங்களைப் பயன் படுத்தல், தனியார் நிறுவனங்களை சேவைக்கமர்த்தி குறிப்பிட்ட நபர் குறித்து இரகசியத் தகவல்கள் திரட்டல், பின்தொடர்தல், நண்பர்களை தொடர்பு கொள்ளல், அயலவர்களை அல்லது அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை தொடர்பு கொள்ளல் போன்றவையும் பாலியல் தொல்லைகளாக கணிக்கப்படுகின்றன. மேலும் இரகசியமான முறையில் தனிமையில் காணப்படக்கூடிய பெண்களை புகைப்படம் பிடித்தல், பெண்களின் அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்தல் என்பனவும் வன்முறைகளே
போர் பாலியல் குற்றங்கள் அரசு இராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழு பாலியல் பலாத்காரம் ஈடுபடுதல் அல்லது விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தல் போன்றவை போர் பாலியல் குற்றங்களுக்குள் அடங்குகின்றன. மிகவும் பரந்த அளவில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் நடைபெறும் இந்தவகை குற்றச்செயல்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக கணிக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நிதிமன்றதில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
நகர்ப்புற வாழ்க்கையிலும் சரி, கிராமிய வாழ்க்கையிலும் சரி வன்முறைகளினால் கூடுதலான அளவுக்கு பாதிக்கப்படுபவர்கள் இளம் பெண்களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும். பாதிப்புகளுக்குள்ளாகிய அனேக பெண்கள் தமது பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. பயம், சங்கடம் மற்றும் அந்நேரத்தில் சம்பவம் பற்றி சரிவர அறிந்திருக்காதிருந்தமை ஆகியனவே இதற்கான காரணமாகும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஏளனப்பார்வைக்கு உட்படுத்துவதும் பாதிப்புகள் வெளிவராமல் இருப்பதற்கு மற்றுமொரு காரணமாகும். இந்நிலையில் குற்றமிழைக்கப்பட்டவரிடமிருந்து விலகிச் செல்வதே பொதுவான நடவடிக்கையாக விளங்குகின்றது. ஒரு சிலர், விசேடமாக சற்று வயதானவர்கள் குற்றமிழைத்தவரை ஏசியுள்ளதுடன், அடித்தும் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் சுயகௌரவம் காரணமாக மூடி மறைக்கின்றனர். இத்தகைய உதாசீனப் போக்குகள் காரணமாக குற்றமிழைத்தவர்கள் மேலும் மேலும் குற்றமிழைப்பவர்களகவே உள்ளனர். இதனாலேயே 'உலகிலுள்ள பெண்களில் மூவரில் ஒருவர் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு வடிவிலான வன்முறையினால் பாதிக்கப்படுகிறார். வாழ்வை நிர்மூலமாக்கிச் சமூகங்களைச் சிதைக்கும் ஒரு கொள்ளை நோயாக பெண்களுக்கு எதிரான வன்முறை காணப்படுகின்றது."
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகளாவிய ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இதனை மிகவும் பரந்தளவில் நோக்க வேண்டும். கடந்த ஒரு சில தசாப்தங்களில் நிலைவரங்களில் சில வகை மேம்பாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இந்த நெருக்கடியின் கொடூரத்தன்மை இன்னமும் பெருமளவுக்கு ஒப்புக் கொள்ளப்படாததாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
16-44 வயதுக்கு இடைப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிரான வன்முறைகளே மரணத்துக்கும், உடல் ஊனமாதலுக்கும் முக்கிய காரணியாக அமைகின்றன. இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களைப் பொறுத்தவரை புற்று நோயைப் போன்று வன்முறைகளும் அவர்கள் மத்தியிலான மரணத்துக்கு முக்கிய காரணமாகின்றன. உலக சுகாதார நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று உலகில் "வீதிவிபத்துகளையும், மலேரியா போன்ற நோய்களையும் விட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்களின் உடலாரோக்கியத்தை பாதிப்பதாக"த் தெரிவித்திருக்கிறது. வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள் எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலக்காகும் ஆபத்தும் அதிகமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
மேலும் கொலைக்கு ஆளாகும் பெண்களில் அரைவாசிப்பேர் அவர்களது தற்போதைய அல்லது முன்னாள் கணவர்களின் அல்லது துணைவர்களின் கைகளினாலேயே மரணத்தைத் தழுவுகின்றார்கள் என்று உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று வரும் போது உலகில் நாகரிகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை" என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஒருதடவை குறிப்பிட்டிருந்ததை இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. VIII
No comments:
Post a Comment